Skip to main content

எஜமான் குடும்பத்தை காப்பாற்ற உயிர் விட்ட செல்லப்பிராணி

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

Dog bitten by snake video goes viral

 


நம் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை நாம் குழந்தை போல், பார்த்துக் கொள்வதால், நம் மீது உயிரையே வைக்கின்றது. ஆனால்,  ஏதோ ஒரு கட்டத்தில் தங்களை வளர்க்கும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக,  உயிர்த் தியாகம் செய்யும் சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. திரைப்படங்களில் இந்த காட்சிகளை அதிகம் கண்டிருப்போம்.  அதே போல ஒரு துயரமான சம்பவம் தான், தற்போது புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ளது குறிஞ்சிப்பட்டி கிராமம்.  இந்த பகுதியில் வசிக்கும் ஜெயந்த் என்பவர், அவருடைய வீட்டில் பல வருடங்களாக வெள்ளை நிற நாட்டு நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அவர்களுடைய வளர்ப்பு நாய், ஜெயந்த் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் வீட்டை,  கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்துள்ளது.

 

இந்நிலையில், புதுக்கோட்டையில் பெய்த மழையால் ஜெயந்த் வீட்டை சுற்றி அதிகளவில், புல், செடி கொடிகள் முளைத்துள்ளது. அப்போது, அந்த அடர்ந்த புதர் பகுதிக்கு வந்த நல்ல பாம்பு ஒன்று, திடீரென ஜெயந்த் வீட்டிற்குள் செல்ல முயன்றுள்ளது. அந்த சமயத்தில், அதே பகுதியில் அங்கும் இங்குமாக சுற்றிக்கொண்டிருந்த வெள்ளை நாய் வீட்டை நோக்கி நல்லபாம்பு ஒன்று செல்வதை பார்த்துள்ளது. உடனடியாக அந்த நல்ல பாம்பை நாய் கடித்துக் கொன்றுள்ளது. அதன் பிறகு அதே பகுதியில் வாயில் நுரை தள்ளிய நிலையில், ஜெயந்தின் வளர்ப்பு நாயும் இறந்து கிடந்துள்ளது.

 

இத்தனை வருடங்கள் தனக்கு உணவளித்து செல்லமாக வளர்த்த வந்த எஜமான் குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்காக, தன் உயிரையும் துச்சமாக நினைத்து பாம்பைக் கடித்துக் கொன்ற நிலையில், பாம்பின் விஷம் தாக்கி தன் உயிரையும் இழந்துள்ளது.  இதைப் பார்த்து,  கண் கலங்கிய ஜெயந்த் குடும்பத்தினர்,  அவர்கள் வளர்த்த நாயைச் சோகத்துடன் தூக்கிச் சென்று நல்லடக்கம் செய்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.