Skip to main content

சாலையில் சென்ற போது இரு சிறுமிகளை கடித்துக் குதறிய நாய்கள்!

Published on 05/03/2025 | Edited on 05/03/2025

 

dog bit two girls while they were walking on the road

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன், தேசத்து மாரியம்மன் கோவில் தெருவில் சுமார் 10க்கும் மேற்பட்ட  நாய்கள் சண்டையிட்டு கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் தன் இரு குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வீதியில் சண்டையிட்டு கொண்டிருந்த நாய்கள் கூட்டம் இரு சக்கர வாகனத்தின் முன்பு திடீரென குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த சரவணன் என்பவரை நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துக் குதறியது. இதைக் கண்டு அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் அவர்களை காப்பாற்ற வந்துள்ளார் அப்போது பாலாஜியையும் நாய்கள் கடித்தது. 

இதையடுத்து, உடனடியாக அந்த பகுதியில் மக்கள் காயமடைந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.  மேலும் அந்தப் பகுதிகளில் அதிகமாக நாய்கள் சுற்றித் திரிவதால் அவ்வப்போது அவ்வழியாக செல்பவர்களையும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளையும்  துரத்தி கடிப்பதாகவும், நாய்களைப் பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்த நிலையில் நாய்கள் சண்டையிட்டு இரு சக்கர வாகனத்தின் முன்பு ஓடியதும், அப்போது இரு சக்கர வாகனம் கீழே விழுந்து  விபத்துக்குள்ளானவர்களை நாய்கள் கடிக்கும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்