“காலம் சற்றே உறைந்து நிற்காதா” - முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி

Doesnot time freeze a bit Chief Minister M. K. Stalin's resilience

மதுரை மாவட்டம் தத்தநேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார். சமூக நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட இவர், மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறை கட்டடங்கள், இறை வணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்துத் தந்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளைக் கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்துத் தந்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகில் உள்ள புது மண்டபத்தைப் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். இதையடுத்து சமூக அக்கறையோடு தொண்டாற்றி வரும் ராஜேந்திரனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டி, அவரது சமூக நலப் பணிகள் தொடர்ந்திட வாழ்த்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின், ராஜேந்திரனுக்கு சால்வை அணிவித்து கலைஞரின் உருவச் சிலையையும் வழங்கி சிறப்பு செய்தார்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “பாசத்துக்குப் பெயர் போன மதுரையில் பாசமிகு பெரியவர் தத்தநேரி இராஜேந்திரனைச் சந்தித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், அடுத்தடுத்த தலைமுறைகளில் படித்திட வேண்டும் என்ற முனைப்போடு அவர் ஆற்றும் கல்விப் பணிகள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மதுரை மக்களால் பேசப்படும் என்பது உறுதி. அவர் போன்ற மனிதர்களோடு உறவாடும் நேரங்களில் காலம் சற்றே உறைந்து நிற்காதா” எனத்தெரிவித்துள்ளார்.

madurai
இதையும் படியுங்கள்
Subscribe