Skip to main content

“நீட் தேர்வு தகுதியை குறைக்கிறதா,  அதிகரிக்கிறதா?” - அன்புமணி கேள்வி 

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

“Does NEET decrease merit or increase it?” - Anbumani question

 

“இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு கண்டிக்கத்தக்கது” என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான  நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதியவர்கள் அனைவருமே, கோடிக்கணக்கில் பணம் இருந்தால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்பதுதான் இதன் பொருளாகும். நடப்பாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வில் 30 பேர் ஒற்றை இலக்கத்திலும், 14 பேர் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், 13 எதிர்மறை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இப்போது கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இது மருத்துவக்கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தாது, கண்டிப்பாக குறைக்கும். இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

 

மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் 8 ஆயிரத்துக்கும் கூடுதலான முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் போகும் என்றும், அந்த இடங்களை நிரப்ப தகுதியான மாணவர்கள் இல்லை என்பதால்தான் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக மத்திய அரசின் தரப்பிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பிலும் கூறப்படுகிறது. இது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ஆகும். காலியாக இருக்கும் இடங்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவை தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தான் உள்ளன. அவற்றின் வருமானம் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

 

முதுநிலை நீட் தேர்வுக்கான விதிகளின்படி, மொத்தம் 800 மதிப்பெண் கொண்ட தேர்வில் பொதுப்போட்டிப் பிரிவினருக்கு 291 மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 257 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன.  தேர்வு எழுதிய 2 லட்சத்து 517 பேரில், 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மேற்கண்ட மதிப்பெண்களை பெற்று முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் உள்ள மொத்த இடங்களே 45,337 தான்.  அவற்றை நிரப்ப அந்த இடங்களை விட கிட்டத்தட்ட மும்மடங்கினர் தகுதி பெற்று இருக்கும் போது, தகுதி மதிப்பெண்களை குறைத்து கூடுதலாக 80,000 பேருக்கு தகுதி வழங்க வேண்டிய தேவை என்ன?

 

முதுநிலை மருத்துவப் படிப்பில் காலியாக இருக்கும் இடங்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்கள் தனியார் கல்லூரிகளில் தான் உள்ளன. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தமிழக அரசின் கல்வி நிறுவனங்களில் ஆண்டு கல்விக் கட்டணமே ரூ.20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை தான். ஆனால், தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கல்விக்கட்டணம் ரூ.40 லட்சத்துக்கும் அதிகம் ஆகும். இந்த அளவு கல்விக்கட்டணத்தை செலுத்துவது இதுவரை தகுதி பெற்ற மாணவர்களால் சாத்தியமில்லை என்பதால் தான், 8000 இடங்கள் நிரம்பவில்லை. இப்போது அந்தக் கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு புதிய போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கவே  தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டு 80,000 பேருக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது சமூக அநீதி ஆகும்.

 

முதுநிலை மருத்துவக் கல்வி இடங்கள் வீணாகக் கூடாது, அவ்வாறு வீணானால் மருத்துவ வல்லுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்விக் கட்டணத்தை குறைத்து, அந்த இடங்கள் அனைத்தையும் அரசே கலந்தாய்வு மூலம் நிரப்பினால், ஏற்கனவே தகுதி பெற்ற மாணவர்களைக் கொண்டு அனைத்து இடங்களையும் நிரப்ப முடியும். ஆனால், தகுதியான மாணவர்கள் தேவையில்லை, பணம் வைத்துள்ள மாணவர்கள் தான் தேவை என்று தேசிய மருத்துவ ஆணையமும், தனியார் கல்லூரிகளும் எதிர்பார்ப்பது தான் அனைத்து சிக்கல்களுக்கும், சீரழிவுகளுக்கும் காரணம் ஆகும்.

 

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு 2010-ஆம் ஆண்டு முதன்முறையாக அறிவிக்கப்பட்ட போது, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும் தான் அதன் நோக்கங்கள் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அவை இரண்டுமே நடக்கவில்லை. மாறாக தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தகுதியைப் பற்றிக் கவலைப்படாமல் கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதற்கு துணை செய்வதற்காகவே நீட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது இப்போது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 

மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதே உண்மை. எனவே, மருத்துவப் படிப்புக்கான அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.