Skip to main content

“தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள், விண்ணப்பித்து பெற வேண்டிய ஆவணங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” - நீதிமன்றம் உத்தரவு!!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

"Documents published in connection with the election, the documents to be applied for and filed a report" - Court order

 

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் எவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன, எவை விண்ணப்பித்துப் பெற வேண்டும் என்பவை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, மே 2ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. அதேபோல கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

 

இந்த தேர்தலில் வேட்பாளர்களை அங்கீகரித்து அரசியல் கட்சிகள் வழங்கிய சான்றுகள், முடிவுகள் இன்னும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை எனக் கூறி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர, 45 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

 

"Documents published in connection with the election, the documents to be applied for and filed a report" - Court order

 

இந்த அவகாசம் ஜூலை 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர, அவர்களைத் தங்கள் கட்சி வேட்பாளராக அங்கீகரித்து அரசியல் கட்சிகள் அளித்த சான்று மற்றும் முடிவுகள் குறித்த ஆவணங்கள் அவசியம் என்பதால் இந்த ஆவணங்களை ஜூலை 15ஆம் தேதிக்கு முன் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், தேர்தல் தொடர்பான பல ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சில ஆவணங்கள் சம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பித்துப் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

இதைப் பதிவுசெய்த நீதிபதிகள், எந்தெந்த ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறித்தும், எந்தெந்த ஆவணங்களை விண்ணப்பித்துப் பெற வேண்டும் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்