
கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் கருப்பசாமி (35). இவரது மனைவி ஜெயா (32). இத்தம்பதிக்கு 8 வயதில் கண்ணன் என்ற ஒரு மகன் உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஜெயா தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது கேஸ் சிலிண்டர் காலியானதால் மாற்று ஏற்பாடாக மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெயாவின் புடவையில் தீ விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்து அவரது இடுப்புக்கு கீழே இரண்டு கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அவரது குடும்பத்தினர். அதன் பின்னர் அங்கு நடந்த கேவலங்களை மாநில மனித உரிமை ஆணையத்தில் ராணுவ வீரர் கருப்பசாமி 2019 ஜனவரி மாதத்தில் புகாராக பதிவு செய்தார். அதில், சம்பவத்தன்று கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தீக்காய தீவிர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த அரசு மருத்துவர் பிரபாகர் என்னிடம் வந்து எந்த ஊர்? என்ன வேலை செய்கிறீர்கள்? என்பதை முதலில் விசாரித்தார். பின்னர் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவுக்கு சிறப்பு மருத்துவர் நான். நான் ஒரு பத்து நாட்கள் விடுமுறை எடுக்கப் போவதால் உங்கள் மனைவிக்கு சிகிச்சை அளிக்க வேறு மருத்துவர்கள் இங்கு இல்லை. கோவில்பட்டி பைபாஸ் தோனுகால் விலக்கில் ஜெய் மருத்துவமனை உள்ளது. நான் அங்கு வந்து போவேன். உங்கள் மனைவி ஜெயா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும். அங்கே மாற்றுங்கள் என தெரிவித்தார்.

என் மனைவி ஜெயாவை இங்கேயே வைத்து சிகிச்சை அளியுங்கள் என்றேன். இதனால் கோபம் அடைந்த மருத்துவர் பிரபாகர் மருத்துவமனையில் சேர்த்த 2018 நவம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களாக எனது மனைவிக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்கவில்லை. மற்ற அரசு டாக்டர்களையும், செவிலியர்களையும் என் மனைவிக்கு சிகிச்சை அளிக்க விடவில்லை. நான் பலமுறை கெஞ்சி கேட்டும் மருத்துவர் பிரபாகர் சிகிச்சை அளிக்க முன் வரவில்லை. 2018 நவம்பர் 29ஆம் தேதி இரவு நான் இல்லாத சமயத்தில், மருத்துவர் பிரபாகரனுக்கு புரோக்கராக செயல்பட்டு வரும் சிலர் அங்கு வந்து, வலியால் துடித்துக் கொண்டிருந்த என் மனைவியிடமும், உடன் இருந்த என் மனைவியின் தாய்மாமா காளியப்பனிடமும் இப்படியே இருந்தால் செத்து விடுவார். மருத்துவர் பிரபாகரனை மீறி யாரும் இங்கு சிகிச்சை அளிக்க வர மாட்டார்கள். எனவே அவர் தனியாக நடத்தி வரும் ஜெய் மருத்துவமனையில் சேர்த்தால் காப்பாற்றி விடுவார். 2 லட்சம் மட்டுமே செலவாகும் என நைசாக பேசி, அதைத் தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் டிஜ்சார்ஜ் செய்யாமலேயே டாக்டர் பிரபாகர் தனது ஜெய் ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸை வரவழைத்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று சேர்த்து விட்டார்.
பின்னர் இந்த விவரம் அறிந்தவுடன் ஜெய் ஹாஸ்பிடலுக்கு சென்றேன் அங்கு என் மனைவி ஜெயாவை ஐ. சி. யூ. வார்டில் அனுமதித்து, என்னிடம் உடனே 2 லட்சம் பணத்தை கட்டினால் உங்கள் மனைவியின் உயிரை காப்பாற்ற முடியும் என தெரிவித்தார். மேலும் அரசு தலைமை மருத்துவமனையில் தீக்காயம் 30 சதவீதம் என தெரிவித்ததை பின்னர் பணம் பறிக்கும் ஆசையில் 60 சதவீதம் ஆக மாற்றி எழுதி எங்களை பயமுறுத்தியும் பணம் பறிக்கும் நாடகங்களையும் அரங்கேற்றினார். முதல் மூன்று நாட்கள் ஐ சி யூ விலும், அடுத்த 37 நாட்கள் சாதாரண அறையிலும் வைத்துக் கொண்டு என் மனைவி ஜெயாவை மருத்துவ கைதியாக்கி, என்னையோ, எனது குடும்பத்தினரையோ சுமார் 40 நாட்களாக தீக்காயத்தை பார்க்க அனுமதிக்கவே இல்லை.
2018 நவம்பர் 29ஆம் தேதி முதல் 2019 ஜனவரி 10ஆம் தேதி வரையிலான 40 நாட்களில் மெடிசன், ஆப்ரேஷன் தியேட்டர், அட்வான்ஸ் என ரூபாய் 11 லட்சத்து 14 ஆயிரத்து 31 ஐ பெற்றுக் கொண்டனர். ஜெய் ஹாஸ்பிடல் ஆப்ரேஷன் தியேட்டரில் ட்ரெஸ்ஸிங் என்ற பெயரில் மருத்துவர் பிரபாகர் உள்ளிட்ட சிலர் என் மனைவி ஜெயாவை வேதனைப்படுத்தினர்.

இதுகுறித்து எனது ராணுவ உயர் அதிகாரிகளிடம் என் நிலைமையை எடுத்துக் கூறினேன். இதையடுத்து ராணுவத்திலிருந்து கதிர்வேல் என்பவரை அனுப்பி வைத்தனர். அவர் வந்து என் மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் மற்றும் பணம் செலுத்தியதற்கான பில்களை டாக்டரிடம் கேட்டபோது எந்த விவரமும் சொல்ல மறுத்து அவமானப்படுத்தினர். ஜெய் ஹாஸ்பிடலில் இருந்து டிஜ்சார்ஜ் செய்து தர கேட்ட போதும் மறுத்தனர். ஒரு கட்டத்தில் மருத்துவர் பிரபாகரன் சிகிச்சை எதுவும் அளிக்காமல், விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன் என்றெல்லாம் மிரட்டி உள்ளார். பின்னர் 2019 ஜனவரி 10ஆம் தேதி மதியம் 12 மணியளவில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டு வந்து மீண்டும் சேர்த்தனர்.
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் கமலவாசனிடம், மருத்துவர் பிரபாகரன் செய்த கொடுமைகளை முறையிட்ட போது, அவர் அதை அலட்சியப்படுத்திவிட்டார். கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விடுங்கள் என மருத்துவர் பிரபாகர் நிர்பந்தப்படுத்தினார். ரூ.16 லட்சம் பணத்தை ஜெய் ஹாஸ்பிடலில் கட்டி விட்டதால், வேறு பண வசதி இல்லாததால் எங்கு செல்வது என புரியாமல் தயவு செய்து இங்கேயே என் மனைவிக்கு சிகிச்சை செய்து காப்பாற்றுங்கள் என கெஞ்சினேன்.
இந்நிலையில் என் மனைவி 2019 ஜனவரி 26ஆம் தேதியில் உயிரிழந்து விட்டார். அரசு மருத்துவர் பிரபாகர் பணம் பறிக்கும் பேராசையில் மருத்துவத் தொழிலுக்கு கேவலத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டார். அரசு மருத்துவர் பிரபாகரன், என் மனைவி ஜெயாவை விஷ ஊசி போட்டு கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. என் மனைவியின் உயிர் பிரிவதற்கு அரசு மருத்துவர் பிரபாகர் உள்ளிட்ட சில அரசு மருத்துவர்களும், நர்சுகளும் உடந்தையாக செயல்பட்டு உள்ளனர். எனவே உரிய நீதி விசாரணை நடத்தி மருத்துவர் பிரபாகர் உள்ளிட்ட மருத்துவர்கள் மீதும் ஜெய் மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம், உரிய விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தர மருத்துவ நலப்பணிகள் இயக்குநருக்கு கடிதம் அனுப்பியது. அதன்படி மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் சுவாதி ரத்னாவதி, இணை இயக்குனர் குருநாதன் ஆகியோர் விசாரணை செய்து விசாரணை அறிக்கையை மனித உரிமை ஆணையத்துக்கு அளித்தனர்.
அந்த அறிக்கையில், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட தீக்காய பிரிவானது முழுமையாக பயன்படுத்தப்படாமலும் தரமற்று செயல்படுவதாகவும், மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் மருத்துவமனையின் தரத்தை உறுதி செய்திட தவறிய காரணத்தினாலும் 18 நாட்கள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் 40 நாட்கள் ஜெய் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று இருந்தும் தொற்று அலர்ச்சியால் தீக்காயம் அடைந்த ஜெயா இறந்திருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அரசு மருத்துவர்கள் குறிப்பாக தீக்காய பிரிவில் பொறுப்பு வகித்தவர்கள் பணியில் கவனமின்றி செயல்பட்டதாலும், மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகளை பெற்று நோயாளிக்கு நர்சுகள் செலுத்த தவறியதாலும், மருத்துவ பணிகளை செவிலிய கண்காணிப்பாளர், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்பார்வையிட்டுச் சரி செய்யாததே நோயாளியின் இறப்புக்கு காரணம் என்பது தெளிவாகிறது. புகார்தாரரின் புகாரில் உண்மை இருக்க சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.
மேலும் வியாபார நோக்கில் பணம் ஈட்டும் எண்ணத்துடன் சில மருந்துகளை பயன்படுத்தியது நோயாளியின் இறப்புக்கு காரணமானது எனவும், அரசு மருத்துவமனையில் இருப்பில் இல்லாத மருந்துகளை பரிந்துரை செய்திருப்பதும், ரத்தம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்தும் அதற்கான நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதும், மருத்துவமனை பதிவேடுகளில் அடித்தல், திருத்தல் செய்து செவிலியர்கள் குமரேஸ்வரியை நிர்பந்தப்படுத்தி ஆவணங்களை மாற்றம் செய்ததும் தெரியவந்துள்ளது. மருத்துவர் பிரபாகர், நோயாளிக்கு Meropenem என்ற ஊசியை அளவுக்கு அதிகமாக முரண்பாடாக பயன்படுத்தியதன் மூலம் மருத்துவமனை சார்ந்த தொற்று, பூஞ்சை தொற்று காரணமாக உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோயாளி ஜெயா இறப்புக்கு காரணமாக இருந்திருக்கிறது.
அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர் சிந்தன் 2019 ஜனவரி 14ஆம் தேதியன்று ஜெயாவுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாக பதிவுகள் செய்திருந்த நிலையில் 2019 ஜனவரி 15 மற்றும் 16 தேதிகளில் தீக்காயப் பிரிவில் பொறுப்பில் இருந்த மருத்துவர் ஸ்ரீ வெங்கடேஷ் தீவிர சிகிச்சை எதுவும் செய்யாமல் GC fair, Rpt.all என பதிவுகள் மேற்கொண்டது, டாக்டர் ஸ்ரீ வெங்கடேசின் அலட்சியப் போக்குக்கும் பணியில் ஈடுபாடின்மைக்கும், கடமை தவறியதற்கு எடுத்துக்காட்டாகும். எனவே அறுவை சிகிச்சை துறையின் மூத்த மருத்துவரான மருத்துவர் ஸ்ரீ வெங்கடேஷ் அனைத்து மருத்துவர்களுக்கும் வழிகாட்டியாக செயல்படாமல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் சிகிச்சையின் தரத்தை செயலிழிக்க செய்தது தவறாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீக்காயப்பிரிவில் மிகக் குறைந்த உள் நோயாளிகளே இருந்த போதும் சிகிச்சை விவரங்களை சரிவர பகிர்ந்து கொண்டு பாதிக்கப்பட்ட ஜெயாவுக்கு முறையான சிகிச்சை கிடைத்திட உரிய வழிமுறைகளை தீக்காய பிரிவு நர்சுகள் மற்றும் பணியாளர்கள் செய்யவில்லை என தெரிய வருகிறது எனவும், செவிலிய கண்காணிப்பாளர் மேற்பார்வை இடாததால் சிகிச்சையில் பங்கம் ஏற்பட்டு நோயாளி இறப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்யாவில் மருத்துவம் படித்து இந்தியாவில் பதிவு செய்யாத மருத்துவர் பிரியங்காவை ஜெய் மருத்துவமனையில் பயிற்சி பெற அனுமதித்து, மருத்துவ பரிந்துரை சீட்டை மருத்துவர் பிரியங்கா நோயாளி ஜெயாவை மருத்துவமனையில் அனுமதிக்க பயன்படுத்தியதும் தெளிவாகிறது. இது இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு புறம்பான செயல். மேலும் சித்த மருத்துவர் அசோக், நோயாளிக்கு ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்தும் சிகிச்சை விவர பதிவேட்டில் அதை பதிவு செய்து ஜெய் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கியதும் தெரிய வருகிறது. ராணுவ வீரர் கருப்பசாமி அளித்துள்ள புகாரில் பெரும்பான்மையானவை உண்மை என்பது தெளிவாகிறது என விசாரணை அறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் மே 19ஆம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவில், தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஜெயா உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்திருப்பது தெளிவாகிறது. மருத்துவர்களும் பணியாளர்களும் கடமை தவறி செயல்பட்டு உள்ளார்கள். குறிப்பாக மருத்துவர் பிரபாகர் பல்வேறு விதிகளை மீறி செயல்பட்டு உள்ளதும், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தீக்காயப் பிரிவு தரமின்றி செயல்பட்டதும் உண்மை என தெரியவந்துள்ளது. கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் மூத்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஸ்ரீ வெங்கடேஷ்வர் , மருத்துவர் பிரபாகர், நர்சுகள் குமரேஸ்வரி, குரு லட்சுமி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி உள்ளது.
உயிரிழந்த ஜெயாவின் கணவர் ராணுவ வீரர் கருப்பசாமிக்கு நான்கு வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு இழப்பீடாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும். இதில் தமிழக அரசு ரூ. 6 லட்சம் செலுத்த வேண்டும். நர்சுகள் குமரேசுவரி, குரு லட்சுமி ஆகியோரிடம் தலா 1 லட்சம், மருத்துவர் ஸ்ரீ வெங்கடேஷ்வரிடம் ரூ. 2 லட்சம், மருத்துவர் பிரபாகரிடம் ரூபாய் 40 லட்சம் வசூலிக்க வேண்டும். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஓய்வு பெற்ற கமலவாசன் மீதான புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது. மருத்துவர் பிரபாகரை தமிழ்நாடு அரசு உடனடியாக பணி நீக்கம் செய்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மீண்டும் அவரை
அரசு பணியாற்ற அனுமதிக்க கூடாது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளுக்கு எதிராக ஜெய் மருத்துவமனையில் பணிபுரியும் போலி டாக்டர்கள் குறித்து தமிழக அரசு விசாரித்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு மருத்துவர்களின் தனிப்பட்ட மருத்துவப் பணிகளை கண்காணித்து, எந்த நோயாளியும் அரசு மருத்துவமனைகளில் இருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படக் கூடாது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். தனியார் கிளினிக்குகளை நடத்தும் அரசு மருத்துவர்களை கண்காணித்து அவர்களின் பட்டியலை அரசு பராமரிக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் புகார் பெட்டியை எளிதில் பார்க்கக்கூடிய பகுதியில் பொருத்தி, புகார் தொடர்பாக உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

“மனித உரிமை ஆணையத்தின் இந்த தீர்ப்பை மனசார வரவேற்கிறோம். இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது டாக்டர் பிரபாகர் தரப்பில் சிலர் எங்களிடம் வந்து 30 லட்சம் ரூபாய் தருகிறோம். வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள் என பேரம் பேசினர். நாங்கள் அதை அடியோடு மறுத்து விட்டோம். மனிதாபிமானம் இல்லாத பண பேராசை பிடித்த மருத்துவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமைய வேண்டும். மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து அப்பீலுக்கு சென்றாலும் அங்கேயும் இதே தீர்ப்பு உறுதி செய்தால் தான் மருத்துவ தொழிலில் உள்ள ஈவு இரக்கமற்ற மருத்துவர்களுக்கு பயம் இருக்கும். அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய எந்த ஒரு நோயாளிக்கும் என் அக்கா ஜெயாவுக்கு நேர்ந்த துயரம் போல் இன்னொரு துயரம் நேர்ந்து விடக்கூடாது. அதற்காகத்தான் நாங்கள் போராடினோம்” என்கிறார் ஜெயாவின் சகோதரி சுமதி மணிக்குமார்.
“என்னதான் பெரிய படிப்பு படித்து மருத்துவ பணிக்கு வந்திருந்தாலும் இங்கு பல வருஷமா வேலை செய்கிற பெரும்பாலான மருத்துவர்கள், செவிலியர்கள் மனசுல சாதி வெறி ஊறிப்போய் கிடக்கிறது. சாதி ரீதியாக தனித்தனி குழுவாக பிரிந்து செயல்படுகிறார்கள். சாதி பார்த்து சிகிச்சையை முடிவு பண்றாங்க. அதனுடைய விளைவுதான் தீக்காயம் அடைந்து சிகிச்சைக்கு வந்து உயிரை பறிகொடுத்த ஜெயா விஷயத்திலும் நடந்திருக்கிறது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் விசாரணையில் வெளி வராத விஷயம்” என்கிறார் சமூக செயற்பாட்டாளர் அறிவுடைநம்பி.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி