“Doctors should relate to patients” - People's Doctor advises

Advertisment

“மருத்துவர்களான நம்மை கடவுளுக்கு நிகராக நம்புகிறார்கள். நம்மிடம் வரும் ஒவ்வொரு பேஷண்டையும் நமது உறவாக நினைத்துப்பேணிக் காத்திட வேண்டும். அவர்களை நோயாளியாக மட்டுமே பார்த்துவிட்டு கடந்து போகக்கூடாது” என மருத்துவர்கள் தினத்தில் நடந்த இந்திய மருத்துவக் கழக புதிய கட்டடத்திறப்பு விழாவில் மக்கள் மருத்துவர் பாரதிதாசன் பேசினார்.

மயிலாடுதுறை மாவட்டம், வள்ளாலகரம் ஊராட்சி பகுதியில் இந்திய மருத்துவக் கழகத்தின் மயிலாடுதுறை கிளை சார்பாக புதிதாகக் கட்டடம் கட்டப்பட்டது. ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கட்டட கல்வெட்டைத்திறந்து வைத்து மருத்துவர்களை வாழ்த்திப் பேசினார்.

மயிலாடுதுறை மாவட்டத் தலைவரும்எளிய மக்களால்மக்கள் மருத்துவர் என அழைக்கப்படும் பாரதிதாசன் வரவேற்றுப் பேசினார். சங்கப் பொருளாளர் மருத்துவர் இரத்தின அருண்குமார் புதிய கட்டட மதிப்பீடு குறித்துப் பகிர்ந்து உரையாற்றினார். இந்திய மருத்துவக் கழக கிழக்கு மண்டல துணைத் தலைவர் மருத்துவர் கோவிந்தராஜன் மற்றும் மூத்த மருத்துவர்கள் முன்னிலை வகித்தனர்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் மருத்துவத்துறையில் சேவை ஆற்றி வரும் மூத்த மருத்துவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவக் கழக மருத்துவர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவை சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானானோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை கிளைச் செயலாளர் மருத்துவர் சௌமித்யா பானு நன்றியுரையாற்றினார். ஊடகவியலாளர் அகஸ்டின் விஜய் நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கினார். விழாவில் பேசிய மக்கள் மருத்துவர் பாரதிதாசன், “மருத்துவர்களான நம்மை கடவுளுக்கு நிகராக நம்புகிறார்கள். நம்மிடம் வரும் ஒவ்வொரு பேஷண்டையும் நமது உறவாக நினைத்துப்பேணிக் காத்திட வேண்டும். அவர்களை நோயாளியாக மட்டுமே பார்த்துவிட்டுக் கடந்து போகக்கூடாது. இந்த கட்டடம் சாதாரணமாக உருவாகிடவில்லை. பலரது நேரடி உழைப்பும், மறைமுக உழைப்பும் அதிகம். இந்த கட்டடம் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்” எனப் பேசினார்.

பிறகு பேசிய மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் ஆய்வாளரும், “கொரோனா காலத்தில் மருத்துவர்களின் பங்கு வார்த்தைகளால் கூறிவிட முடியாது. மயிலாடுதுறை மாவட்ட மருத்துவர்கள் அனைவருமே மிகச் சிறந்த மருத்துவ சேவை புரிபவர்களாக இருப்பது மாவட்டத்திற்கே பெருமை. இந்த கட்டடம் அதற்கு சான்று” என முடித்தனர்.