Skip to main content

"மருத்துவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக" - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல் 

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

doctors request tamilnadu congress party ks alagiri statement

 

அரசு மருத்துவர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரோனா தொற்று உலகத்தையே உலுக்கியுள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளே திணறிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு கரோனா தடுப்புப் பணிகளை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். கரோனாவை கண்டு கொஞ்சமும் அஞ்சாமல், துணிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பாக பணியாற்றியதில் அரசு மருத்துவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறப்பாக சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டதை எவரும் மறுக்க இயலாது. ஆனால், கரோனா தொற்றிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிய மருத்துவர்களின் நலனை தமிழக அரசு காப்பாற்றியதா என்றால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.

 

தமிழக அரசு மருத்துவர்கள் அரசுக்கு நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, முதல் கோரிக்கை, மருத்துவர்களுக்கு அரசாணை 354- ன்படி 12 ஆண்டுகளுக்கான தகுதிக்கு ஏற்ற ஊதியம், இரண்டாவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்கள், மூன்றாவது, மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இடங்கள் மீண்டும் தரப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், நான்காவதாக, மருத்துவ பட்ட மேற்படிப்பு முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை இதுவரை தமிழக அரசு நிறைவேற்றாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

 

தமிழக முதல்வர் அறிவித்த, கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணம், தொற்று ஏற்பட்ட மருத்துவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் நிவாரணம் மற்றும் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டதற்காக மருத்துவர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியமும் இதுவரை தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டள்ளது. முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையிலும் அரசு மருத்துவர்கள் தங்களது பணியில் அயராது பணியாற்றி வருகிறார்கள். ஆனால், தமிழக முதலமைச்சர் அலட்சியப்போக்குடன் நடந்து கொள்வது நியாயமா? 

 

இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக தமிழகம் இருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்கிறோம். தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிய மருத்துவ கல்லூரிகளையும், புதிய மருத்துவமனைகளையும் தொடங்குவதாலேயே நமது பெருமையை அடைந்துவிட முடியாது. அதற்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். தமிழக மக்கள் தொகை 7 கோடிக்கு மேலே இருக்கிற நிலையில், அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரமாக இருப்பது குறித்து அ.இ.அ.தி.மு.க. அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஆனால், மருத்துவ கல்லூரிகளை அதிகமாக தொடங்கியிருக்கிறோம், மருத்துவ படிப்பிற்காக அதிக இடங்களை உருவாக்கியிருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதால் என்ன பயன் ஏற்படப் போகிறது?

 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசு மருத்துவர்கள் தான் மிகுந்த துணிவுடன் களப்பணி ஆற்றினார்களே தவிர, கரோனாவை எதிர்கொள்ளாமல் பல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்படியே சில மருத்துவமனைகள் செயல்பட்டாலும், நோயாளிகளால் தாங்க முடியாத அளவிற்கு வசூல் வேட்டை நடத்தியதை எவரும் மறுக்க முடியாது. இதில் மிகுந்த மனிதாபிமான உணர்வோடு செயல்பட்டது அரசு மருத்துவர்களே தவிர, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுகிற மருத்துவர்கள் அல்ல.

 

கண்ணுக்கே தெரியாத கிருமியை, மருந்தே கண்டுபிடிக்காத நிலையில், ஆயுதமின்றி களமிறங்கும் போர் வீரனைப்போல, உயிரை பணயம் வைத்து பணி செய்தவர்கள் அரசு மருத்துவர்கள். கரோனா உச்சத்தில் இருந்தபோதும் கூட, பணியிலிருந்து ஒதுங்கவில்லை. இரவு- பகல் பாராமல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய பெருமை அரசு மருத்துவர்களுக்கு உண்டு. அவர்களின் கடுமையான உழைப்பின் காரணமாகவே கரோனா தொற்றுப் பரவலையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் தமிழகத்தில் குறைக்க முடிந்தது. இத்தகைய சாதனைக்கு சொந்தம் கொண்டாடும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன?

 

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற வகையில் 7 கோடி மக்கள் தொகைக்கு தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 70 ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டும். இருப்பதோ 18 ஆயிரம் மருத்துவர்கள் தான். ஆனால், தமிழக முதலமைச்சர் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பது குறித்தும், 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்குவது குறித்தும் தேர்தலை மனதில் கொண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையில் எந்த கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்காதபோதும், அரசு மருத்துவர்களின் கோரிக்கையை புறக்கணிக்கிற நிலையில், இதுபோன்ற அறிவிப்பால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது? 

 

2 ஆயிரம் மினி கிளினிக்குகளுக்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் மருத்துவர்களாவது நியமனம் செய்யப்பட வேண்டும். இதற்காக ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை இங்கே அமர வைப்பதன் மூலம் மொத்த பொது சுகாதார கட்டமைப்பே சீர்குலைந்துவிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

 

எனவே, கரோனா தொற்றுக் காரணமாக கடுமையான பாதிப்பிலிருந்து மக்களின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்களின் நீண்டகால நான்கு அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென தமிழக முதலமைச்சரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.' இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும்’ - விஜய் அரசியல் வருகை குறித்து கே.எஸ். அழகிரி

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
'It will help create a healthy environment in politics' - KS on Vijay's political visit Alagiri

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்தது. மேலும் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் முடிவு செய்திருந்தார். இதனையடுத்து விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம், ‘பூத் கமிட்டிகளை வலுப்படுத்துங்கள்; எப்போதும் தேர்தலுக்குத் தயாராக இருங்கள்; நமது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் காலம் வந்துவிட்டது’ என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி வந்தார்.

இந்த சூழலில் விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் சூட்டப்பட்டு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அதே சமயம் நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படத்துறையில் செல்வாக்கு மிக்கவராக கலைப்பணி ஆற்றும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன். மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

'It will help create a healthy environment in politics' - KS on Vijay's political visit Alagiri

பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று சுட்டிக்காட்டி அனைவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் கட்சியை ஏன் தொடங்குகிறோம் என்பதற்கான அவரது விளக்கம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான சூழல் உருவாக உதவும் என்று நம்புகின்றேன். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆளுநர் ஆர்.என் ரவியின் சர்ச்சை பேச்சு; கே.எஸ். அழகிரி கண்டனம்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Governor RN Ravi's controversial speech; K.S. Alagiri condemned

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசுகையில், “நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை.  நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947 இல் நாடு இரண்டாகப் பிரிந்தது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்” எனப் பேசி இருந்தார். ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ஆளுநரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு வரலாற்றுத் திரிபு வாதங்களை செய்வதோடு, தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும், தமிழ் கலாச்சாரத்தை சிறுமைப்படுத்துகிற வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாள் விழாவை ஆளுநர் மாளிகையில் கொண்டாடுகிற போர்வையில் தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி அவர்களையே கொச்சைப்படுத்துகிற வகையில் கருத்துகளை கூறியிருக்கிறார். அதில் அவர் பேசும் போது, ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை, நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம் என்று காந்தியடிகளை சிறுமைப்படுத்துகிற வகையில் காழ்ப்புணர்ச்சியோடு கருத்துகளை கூறிய இவரை இந்திய விடுதலைப் போராட்ட தேசபக்தர்களின் ஆன்மா மன்னிக்காது.

இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பெருமை 1885 இல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு. தென்னாப்பிரிக்க கருப்பு இன மக்களின் விடுதலைக்காக போராடி வரலாறு படைத்த மகாத்மா காந்தி 1915 இல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க முன்வந்த போது, அவரது தலைமையை நாடு ஏற்றுக் கொண்டது. அவரது வழிகாட்டுதலின்படி அகிம்சை வழியில் சத்தியத்தை கடைபிடித்து ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம் போன்ற போராட்ட வழிமுறைகளின் மூலம் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய மக்களை திரட்டியதில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை ஆயிரம் ஆர்.என். ரவிக்கள் ஒன்று சேர்ந்தாலும் மூடி மறைத்துவிட முடியாது.

Governor RN Ravi's controversial speech; K.S. Alagiri condemned

மகாத்மா காந்திக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை ஆர்.என். ரவி போன்றோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1938 இல் ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இளமை துடிப்புடன் செயல்பட்டு வந்த சுபாஷ் சந்திர போசை தலைவராக நியமிக்க பரிந்துரை செய்தவர் காந்தியடிகள். அதேபோல, 1939 இல் திரிபுரியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசை விட்டு வெளியேறியதோடு, இந்தியாவை விட்டு வெளியேறி ஆயுதம் ஏந்திய போராட்ட முறையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பிரிட்டீசாரின் பகை நாடுகளின் தலைவர்களான ஹிட்லரையும், முசோலினியையும் சந்தித்து அவர்களது ஆதரவை பெற்று, ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்போடு இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அணுகுமுறை பலன் தரும் என்று அவர் நம்பினார்.

பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போர் தொடங்கிய போது சிங்கப்பூர் வானொலியில் மகாத்மா காந்தியின் வாழ்த்துகளை கோருகிற வகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசும் போது, ‘தேசப்பிதாவே எங்களை வாழ்த்துங்கள், இன்ப துன்பங்களிலும், வெற்றி தோல்விகளிலும் நான் உங்களுடன் இருப்பேன். இந்தியா விடுதலை அடைவதற்கு எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மனமுவந்து அளிப்போம்” என்று அவர் பேசிய உணர்ச்சிமிகு உரை, இந்தியா எங்கும் எதிரொலித்தது. அப்போது அவர்கள் பயன்படுத்திய கொடி என்பது காங்கிரஸ் மகாசபை ஏற்றுக் கொண்ட கைராட்டை சின்னம் பொறித்த மூவர்ண கொடி தான் என்பதை அரைவேக்காடு ஆர்.என். ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக சுபாஷ் சந்திரபோஸ் தொடுத்த போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இரண்டாவது உலகப் போரில் சுபாஷ் சந்திரபோசை ஆதரித்த நாடுகள் தோல்வியடைகிற நிலை ஏற்பட்ட போது, இவரது முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள். 

150 ஆண்டு கால பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சையில் வழியில் போராடித் தான் வெற்றி பெற முடியும் என்ற மகாத்மா காந்தியின் அணுகுமுறை மூலமாகத் தான் இந்தியா விடுதலை பெற்றது. ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு வகிக்காமல், ஒரு துரும்பை கூட போடாமல் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக இருந்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்., இந்துமகாசபை வழிவந்த பாரதிய ஜனதா கட்சியினர். சுதந்திரம் பெற்று ஆகஸ்ட் 15, 1947 மற்றும் ஜனவரி 27, 1950-க்கு பிறகு ஜனவரி 26, 2022 வரை 52 ஆண்டுகள் நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுத்த தேசபக்தியே இல்லாத ஒரு பாசிச இயக்கம் தான் பா.ஜ.க. என்ற கரைபடிந்த வரலாற்றை எந்த சக்தியாலும் துடைக்க முடியாது. இதன்மூலம் ஆர்.என். ரவி போன்றவர்கள் செய்கிற வரலாற்று புரட்டுகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.