
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடர்ந்து 14 நாட்களுக்கு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி நேற்று (01.02.2021) ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே உள்ள காலி இடத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் தனியார் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் இளம் மருத்துவர்கள் பிரிவு தலைவர் அபுஹாசன், முன்னாள் மாநிலத் தலைவர் சுகுமார் உட்பட பல்வேறு தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, "சென்ட்ரல் கவுன்சில் பார் இந்தியன் மெடிக்கல் அமைப்பானது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆயுர்வேத மருத்துவம் படித்த மருத்துவர்கள் கிட்டத்தட்ட 60 வகையான அலோபதி அறுவை சிகிச்சையை செய்யலாம் என்றொரு அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.
இது மட்டுமின்றி வரும் 2030-க்குள் ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை கொண்டு வருவதற்கு மத்திய அரசு முனைப்பு எடுத்து வருகிறது. இது பாதுகாப்பில்லாத மருத்துவ முறையாகும். இதை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து, இன்று (01.02.2021) முதல் தொடர்ந்து 14 நாட்களுக்கு உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இன்று (1ஆம் தேதி) முதல் நாள் உண்ணாவிரத தொடக்கம் தொடங்கியுள்ளது.
நாங்கள் ஏற்கனவே இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம், ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாடு முழுவதும் 60 மையங்களில் இந்தத் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 38,000 தனியார் மருத்துவர்கள் உள்ளனர். எங்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு பல் மருத்துவர்கள், செவிலியர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஒரே சிகிச்சை முறை நடைமுறைக்கு ஒத்துவராது. இன்று ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்தனியே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய மருத்துவர்கள் திறமை மிக்கவர்கள்.
இன்று இந்திய மருத்துவர்கள் பல்வேறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். கரோனா காலகட்டத்தில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 740 அலோபதி மருத்துவர்கள் இறந்துள்ளனர். தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளை ஆதரித்துள்ளது. மத்திய அரசு இந்த முறையை ரத்து செய்ய வேண்டும். ஈரோட்டில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் ஷிஃப்ட் முறையில் நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்தத் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பார்கள்" என்றார்.