
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் (மே 15 ) காலை 7 மணியளவில் ஆண்கள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக ஏராளமானோர் வந்து காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த பொது மருத்துவ பிரிவு டாக்டர் கண்ணன் என்பவர் போதையில் தடுமாறி தடுமாறி வந்து, புறநோயாளிகள் பிரிவுக்குச் செல்லும் வழியில் இருந்த மூடப்பட்ட கிரில் கேட்டையும் மற்றொரு இரும்பு கேட்டையும் கையால் திரும்பத் திரும்ப தட்டிக் கொண்டே இருந்துள்ளார்.
போதை மருத்துவரின் சலம்பலை பார்த்த அங்கிருந்த செக்யூரிட்டி ஒருவர், டாக்டரை பக்குவமாக அரவணைத்து கை தாங்கலாக அங்கிருந்து நகர்த்தி பணி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் புறநோயாளிகள் பிரிவில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நோயாளிகளுக்கு போதையில் இருந்த மருத்துவர் கண்ணன் சிகிச்சை அளித்துள்ளார். இந்நிலையில் மருத்துவர் கண்ணன் போதையில் இருப்பதையும் அரங்கேறிய சம்பவத்தையும் பார்த்து மனம் கொதித்துப் போன தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அதை தனது மொபைலில் வீடியோ பதிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த பிற டாக்டர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கிருந்த செக்யூரிட்டிகளும் பிற மருத்துவர்களும் சேர்ந்து போதையில் இருந்த டாக்டர் கண்ணனை அங்கிருந்து நைசாக அப்புறப்படுத்தி அவரை பாதுகாப்பாக வெளியே அனுப்பி விட்டனர். இதனிடையே அப்பெண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் அளவு கடந்த மது போதையில் பணிக்கு வந்து மது போதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகர செயலாளர் முத்து கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கையும் மேல் நடவடிக்கை தொடர பரிந்துரையும் சென்னை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதையில் பணியில் இருந்த டாக்டர் கண்ணனை தற்காலிக பணிநீக்கம் செய்து சென்னை மருத்துவ கல்விப் பணிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
செய்தியாளர் - எஸ். மூர்த்தி