vellore district katpadi

வேலூர் மாவட்டம், காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த சித்த மருத்துவர் விஜயலட்சுமி. இவர் தொடர்ந்து அப்பகுதியில் சித்த வைத்தியம் பார்த்து வருகிறாராம். மேலும் நீரிழிவு நோயாளிகள் தங்களுக்கு இன்சூலின் ஊசியை போட்டுக்கொள்ள மருந்துகளை வாங்கி வந்து இவரிடம் ஊசி போட்டு செல்வது வழக்கமாம். இவர் ஆங்கில மருத்துவம் பார்க்கிறார் எனச் சொல்லி, இதுப்பற்றி பத்திரிகையில் எழுதுவோம் என பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த நிருபர்கள் விஜயகுமார், காளிமுத்து, தென்னரசு ஆகியோர் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து இன்னொரு நிருபர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த ஆனந்த சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரும் இவர்களுடன் இணைந்து சித்த மருத்துவரான விஜயலட்சுமியை மிரட்டி ரூ.12,500 பணம் பெற்றுகொண்டு சென்றுள்ளனர்.

Advertisment

இதனை விஜயலட்சுமி ரகசியமாக தனது கைபேசியில் பதிவு செய்து இவர்கள் குறித்த புகாரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விஜயலட்சுமி வீடியோ ஆதாரத்துடன் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், காட்பாடி போலீசார் மிரட்டி பணம் பறித்த நிருபர்கள் விஜயகுமார், காளிமுத்து, தென்னரசு, ஆனந்த சீனிவாசன் ஆகிய 4 பேர் மீதும் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 294 (B), 417, 420, 384, 506 (1) Women harassment Act ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.