doctor incident Doctors struggle announcement 

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையில் மருத்துவர் பாலாஜி பணியாற்றி வருகிறார். இத்தகைய சூழலில் தான் இன்று (13.11.2024) காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இந்த கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரின் தாயாருக்கு சம்பவம் நடைபெற்ற மருத்துவமனையில் கடந்த நான்கு மாத காலமாகப் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஸ்வரனும் அவருடன் வந்த மற்றொரு நபரும் மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவர் பாலாஜி அந்த நபர்களிடம் அலட்சியமாகப் பதில் அளித்ததால் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரைக் குத்தியதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் இது குறித்து அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்திலேயே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், “சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும். நாளை (14.11.2024)) மாலை 6 மணி வரை இந்த வேலை நிறுத்தம் நடைபெறும். அவசர சிகிச்சையைத் தவிர வேறு எந்த சிகிச்சையும் மேற்கொள்ளப்படாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மருத்துவர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் அகிலன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து நாளை (14.11.2024) ) காலை காலை 8 மணி முதல் 10 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisment

doctor incident Doctors struggle announcement 

இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் ஹபுல் ஹசன் ஈரோட்டில் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் நாளை (14.11.2024) 45 ஆயிரம் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எனவே இன்று மாலை தொடங்கி நாளை மாலை 6 மணி வரை வேலைநிறுத்தம் நடைபெறும் ” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக மருத்துவர்கள் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தியபின் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், “மருத்துவர் சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை முடித்து மருத்துவ சங்க பிரதிநிதிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.