மகாகவி பாரதியார், பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாகவி பாரதியாரின் 143வது பிறந்த நாள் விழா இன்று (11.12.2024) அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை, மெரினா கடற்கரை. காமராஜர் சாலையில் அமைந்துள்ள பாரதியார் உருவச்சிலைக்கு, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் சென்னை மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அதே சமயம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரதியார் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழா கொண்டாட்டத்தின் போது, பாரதியாரின் சிலையைத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பல்லக்கில் வைத்துத் தூக்கிச் சென்றார். இந்நிலையில் பாரதியார், பிறந்த நாளை முன்னிட்டு ஆதவ் அர்ஜூனா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய நாட்டின் சுதந்திர வேட்கைக்குத் தனது கவிதை வரிகளால் உயிரூட்டியவர். அடக்குமுறைக்கு எதிரான சிந்தனைகளைத் தனது பாடல்களில் உருவாக்கியவர். 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சாதிக்கு எதிரான குரலை உரத்து முழங்கியவர், பெண்ணடிமை ஆதிக்கத்தையும் எதிர்த்து நின்றார்.
வறுமையான வாழ்வு தன்னை சூழ்ந்தபோதும் தான் கொண்ட கொள்கை இலட்சியத்தைக் கைவிடாதவர். நான் சோர்வடையும் பல நேரங்களில் எனக்கு உற்சாகம் கொடுக்கும் கவிதைகளை இயற்றிய மகாகவி பாரதியின் பிறந்தநாளைப் போற்றுவோம். தேடிச் சோறுநிதந் தின்று — பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து — நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் — பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னென்றுநினைத் தாயோ?..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, விசிக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 6ஆம் தேதி (06.12.2024) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். எனவே மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது” எனப் பேசியிருந்தார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து ஆதவ் அர்ஜூனா விசிகவிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.