Skip to main content

காதில் கேட்கிறதா தமிழகத்தின் நியாயக் குரல்? ராமதாஸ்

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து இன்றுடன் 169 நாட்கள் ஆகும் நிலையில், அதன் மீது தமிழ்நாட்டு ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இன்று வரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எந்தவித காரணமும்  இல்லாமல் 7 தமிழர்கள் விடுதலையை தமிழக ஆளுனர் தாமதிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
 

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் எந்த குற்றமும் இழைக்காமல் தண்டிக்கப்பட்ட அவர்களை, 28 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகும்  விடுதலை செய்யத் தயங்குவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது ஆகும். அவர்களை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்பதற்கு நியாயமான ஒரு காரணம் கூட கிடையாது. ராஜிவ்காந்தி கொலையில் பேரறிவாளனுக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்பதை அவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த தியாகராஜன் உறுதி செய்திருக்கிறார்.

 

Ramadoss



பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு; அவர்களை விடுதலை செய்வது குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து தான் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழ்நாட்டு அமைச்சரவை கூடி, 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுனருக்கு பரிந்துரைத்தது.
 

தமிழக அமைச்சரவையின் பரிந்துரை செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே, அந்தப் பரிந்துரையின் நிலைமை குறித்து ஆளுனர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது. ‘‘7 தமிழர்கள் விடுதலை குறித்து மத்திய அரசிடமிருந்து ஆலோசனை பெற வேண்டியதில்லை. அதேநேரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை குறித்து சட்ட ஆலோசனைகள் பெற வேண்டியிருக்கிறது. அந்த ஆலோசனைகளைப் பெற்ற பிறகு 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்று ஆளுனர் மாளிகை தெரிவித்திருந்தது. அவ்வாறு விளக்கமளித்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை 7 தமிழர் விடுதலை குறித்த விஷயத்தில் முடிவெடுக்கப்படாதது ஏன்? என்பதை மக்களுக்கு ஆளுனர் மாளிகை விளக்க வேண்டும்.
 

7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரையை ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை அனுப்பிய நேரத்தில்,  அவர்களின் விடுதலைக்கு எதிராக இருந்த அம்சம் ஒன்றே ஒன்று தான். அது 7 தமிழர்களை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தது தான். அதுவும் கூட அமைச்சரவையின் பரிந்துரையை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதால், 7 தமிழர்களை விடுதலை செய்ய எந்தத் தடையும் இல்லை. ஆனாலும், மறைமுகமாக அதை காரணம் காட்டி 7 தமிழர்கள் விடுதலையை ஆளுனர் மாளிகை தாமதம் செய்தது. ஆனால், எழுவர் விடுதலைக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட நிலையில், இனியும் 7 தமிழர்கள் விடுதலையை ஆளுனர் தாமதிப்பது நியாயமற்றது; அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
 

ஒருபுறம் 7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கடந்த   ஜனவரி 24-ஆம் தேதி முதல் ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் நீதி கேட்கும் பயணத்தை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக மார்ச் 9-ஆம் தேதி மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு அற்புதம் அம்மாள் அழைப்பு விடுத்திருக்கிறார். மூன்றாவதாக 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று  சிறைத் தண்டனை அனுபவிப்பர்களில் ஒருவரான நளினி முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர்களை விடுதலை செய்யும்படி கடந்த 6 மாதங்களில் 10 முறையாவது நான் வலியுறுத்தியுள்ளேன்.
 

ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் 7 தமிழர்களின் விடுதலையை தமிழக ஆளுனர் தாமதப்படுத்துவதற்கு என்ன காரணம்? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்துள்ள நியாயக் குரலுக்கு செவிமடுத்தும், எந்தக் குற்றமும் செய்யாத அவர்கள் 28 ஆண்டுகள் சிறையில் வாடுகின்றனர் என்பதைக் கருத்தில் கொண்டும் அவர்களின் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகை விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்பதே மக்களின்  எதிர்பார்ப்பாகும்.
 

இக்கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 9&ஆம் தேதி தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், புதுச்சேரியிலும் நடைபெறவுள்ள மனிதச்சங்கிலிக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். எனினும், அப்படி ஒரு போராட்டத்திற்கு தேவையே இல்லை எனும் வகையில், அதற்கு முன்பாகவே பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான ஆணையில் ஆளுனர் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.