Skip to main content

“பா.ஜ.க.வின் மோசடித்தனத்தைக் கண்டிக்க முதுகெலும்பு உண்டா?” - இ.பி.எஸ்.ஸுக்கு டி. ஆர்.பாலு சவால்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Do you have more spine than a report condemning BJP fraud tR Balu  for EPS

தேர்தல் பத்திர விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் எந்த கட்சிகளுக்கு எந்தெந்த நிறுவனங்கள் சார்பில் யார் எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் 50 சதவீதம் பா.ஜ.க.வுக்கே சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மொத்தமாக ரூ.16 ஆயிரத்து 518 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ள நிலையில், அதில் ரூ. 8 ஆயிரத்து 250 கோடி பா.ஜ.க.வுக்கு மட்டும் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோன்று காங்கிரஸ் கட்சி ரூ.1,334.35 கோடி பெற்றுள்ளது. தி.மு.க. ரூ. 656.5 கோடி பெற்றுள்ளது. அதில் ரூ. 509 கோடி மார்ட்டினின் ஃப்யூச்சர் கேமிங் நிறுவனம் தந்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ரூ. 442 கோடியும், பிஜு ஜனதா தளம் ரூ. 944 கோடியும், தெலுங்கு தேசம் ரூ. 181 கோடி ரூபாயும் பெற்றுள்ளன. அ.தி.மு.க. சார்பில் பெற்ற ரூ. 6 கோடியில் ரூ.4 கோடிக்கும் மேல் சி.எஸ்.கே. அணி நிர்வாகம் வழங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. அப்போது அ.தி.மு.க பொருளாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் இது குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் பியூச்சர் கேமிங்ஸ் (FUTURE GAMINGS) என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக தி.மு.க. பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது. சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் எம்.ஜி.ஆரின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், ஜெயலலிதா ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடை செய்யப்பட்டது. ஆனால், தி.மு.க. ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பது போல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க. பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை” என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தான் வகித்த பொதுப்பணித்துறையில் ஒப்பந்தங்களை மொத்தமாகத் தனது சம்பந்திக்கும், அவர் வழி உறவினர்களுக்கும் கொடுத்துச் சிக்கிக் கொண்டவர் பழனிசாமி. குட்கா விற்பனையாளர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காகத் தனியாக ஒரு அமைச்சரை வைத்திருந்தவர் பழனிசாமி. சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது. வருமான வரித்துறையினர் இவரது ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர் அறையிலேயே சோதனை செய்தார்கள். டி.ஜி.பி.யே சி.பி.ஐ. விசாரணையில் சிக்கினார். தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணை ஆணையத்தில், ‘முதலமைச்சரிடம் சொல்லிவிட்டுதான் சுட்டோம்’ என்று குற்றம் சாட்டப்பட்டவர் பழனிசாமி. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியவர்களைக் காப்பாற்றியவர் பழனிசாமி. கொடநாடு கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளே பழனிசாமி பெயரை வெளியில் சொன்னார்கள். இப்படிப்பட்ட நீண்டதொரு ‘குற்றப் பட்டியல்’ கொண்ட பழனிசாமி, இன்று விடுத்த அறிக்கையில், பாவத்தைப் பற்றியெல்லாம் பாலபாடம் எடுத்துள்ளார்.

Do you have more spine than a report condemning BJP fraud tR Balu  for EPS

மண்புழுவைப் போல ஊர்ந்து போய் நாற்காலியைக் கைப்பற்றி, துரோகக் குணத்தால் நம்பிக்கைத் துரோகம் செய்து, பின்னர் பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, அதனைத் தக்க வைத்து, இன்று பா.ஜ.க அமைத்துக் கொடுத்த திருட்டு வழியில் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பழனிசாமிக்கு, பாவத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு யோக்கியதை உண்டா?. தி.மு.க. சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் பழனிசாமி. அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் திமுக ஆட்சியில் தரப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டு வந்து நிறைவேற்றியது தி.மு.க. அரசுதான்.

பழனிசாமி ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் தடைச் சட்டம் செல்லாது, அது சட்டப்பூர்வமானதாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னபோது, சட்டப்பூர்வமான ஒரு சட்டத்தை உருவாக்கியது தி.மு.க. அரசுதான். அந்தச் சட்டத்துக்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வந்தார் ஆளுநர் ரவி. அவர் அதனைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் நிறைவேற்றி அனுப்பினோம். ஒப்புதலைப் பெற்றோம். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை நடத்துபவர்களைச் சந்தித்து பேசினார் ஆளுநர். அப்போது ஆளுநரைக் கண்டித்தாரா இந்த யோக்கியவான் பழனிசாமி. இப்போது ஏன் அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி?. தனது எஜமானர்களான பாஜகவை காப்பற்றுவதற்காக அறிக்கை விடுகிறார்!. அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி, நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பணத்தைப் பறித்துள்ளது பா.ஜ.க.

Do you have more spine than a report condemning BJP fraud tR Balu  for EPS

பா.ஜ.க.வால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் அதிகளவு பணத்தை பா.ஜ.க.வுக்கு வாரி வழங்கி உள்ளது. இதன் மூலமாக, 'மிரட்டிப் பணம் பறிக்கும் பா.ஜ.க' என்று அகில இந்திய அளவில் பா.ஜ.க. அம்பலப்பட்டுள்ளது. பா.ஜ.க.வால் இதற்கு எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. இத்தகைய பா.ஜ.க. பற்றி பழனிசாமி ஏதாவது கண்டித்துள்ளாரா?. 'பாஜகவுடன் கூட்டணியே கிடையாது' என்று சொல்லும் பழனிசாமிக்கு, பா.ஜ.க.வின் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட முதுகெலும்பு உண்டா?. ஏன் வாயை மூடிக் கொள்கிறார்?. நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை என்பதை 'டெண்டர் மோசடி' பழனிசாமிக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்களாம்! பழனிசாமி சொல்கிறார். அவர் கைக்கு அ.தி.மு.க. எப்போது வந்ததோ அது முதல் அந்தக் கட்சி அதளபாதாளத்தில் போய்க் கொண்டு இருக்கிறது. நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் தோற்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பவர் அவர்தான். சொரணையற்ற பழனிசாமிக்கு எத்தனை தடவைதான் மக்கள் பாடம் புகட்டுவார்கள்?.” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.