Skip to main content

“உண்மை நிலை அறியாமல் அறிக்கைகள் வெளியிட வேண்டாம்..” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

"Do not publish statements without knowing the truth." - Minister MRK Panneerselvam

 

குறுவை சாகுபடிக்கான நெல் அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதேசமயம் குறுவைக்கான காப்பீடு கட்டப்படவில்லை என தமிழ்நாடு அரசு மீது அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத்தினர் குற்றஞ்சாற்றுகின்றனர். இந்நிலையில், கடலூரில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளரைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது, “தமிழகத்தில் தமிழக முதல்வர் வேளாண்துறையில் புரட்சி செய்துள்ளார். முதன்முறையாக உழவர் நலத்துறைக்கென பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு லாபம் பெறுகின்ற பல திட்டங்களை அறிவித்துள்ளார். இதனை அனைவரும் வரவேற்றுள்ளனர். இந்த வாய்ப்பினை எனக்குத் தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

 

தற்போது தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் 3.27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 10, 20 நாட்களில் குறுவை சாகுபடி முடிந்து, சம்பா சாகுபடி துவங்கிவிடும். இந்த நிலையில், எப்படி குறுவை சாகுபடிக்குக் காப்பீடு தொகை கட்டக் கூற முடியும். எனவே இந்த நிலையில், குறுவைக்குக் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியாக சொல்வதாகும். தேவையில்லாமல், உண்மை நிலை அறியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அறிக்கைகள் வெளியிட வேண்டாம் என விவசாய சங்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். சம்பா சாகுபடிக்கான காப்பீட்டு தொகை விரைவில் அறிவிக்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“சின்னத்தை முடக்க முயற்சிப்பது மோடியின் மோடி மஸ்தான் வேலை” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister MRK Panneerselvam criticized BJP

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள லால்புரம் என்ற இடத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை(28.4.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், மேடை அமைந்துள்ள பகுதி, தொண்டர்கள் அமர உள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது மேடை அமைக்கும் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து சிதம்பரத்தை அடுத்த புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட லால்புரம் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் வாக்காளர்கள், பொதுமக்கள், தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 3 ஆண்டு காலத்தில் செய்துள்ள சாதனைகள், பணிகள் குறித்து முதல்வர் பேசி வருகிறார். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 75 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த ஆட்சியில் தனி நபர்கள் பண பலன்களைப் பெற்றுள்ளனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நேரடியாகச் செல்கிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் எந்த உலகத்திலும் இல்லை. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை என அனைத்து உதவிகளும் நேரடியாக பயனாளிகளுக்குச் செல்கிறது.

திமுக கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை முடக்குவதன் மூலமாக அவர்களது வெற்றியை தடுக்க முயற்சிக்கின்றனர். இது மோடியின் மோடி மஸ்தான் வேலை. இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு செய்கின்ற வேலை. இந்த ஆட்சி இ.டி., சி.பி.ஐ போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆட்சி புரிகின்றார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செய்து விட்டு, அதை முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் சக்தியாக ஒன்று திரண்டு வெற்றி பெறச் செய்வார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை உயர்த்தியது அவரது பயத்தை காட்டுகிறது. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திரண்டு வந்து திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்” எனக் கூறினார்.