
குறுவை சாகுபடிக்கான நெல் அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதேசமயம் குறுவைக்கான காப்பீடு கட்டப்படவில்லை என தமிழ்நாடு அரசு மீது அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத்தினர் குற்றஞ்சாற்றுகின்றனர். இந்நிலையில், கடலூரில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “தமிழகத்தில் தமிழக முதல்வர் வேளாண்துறையில் புரட்சி செய்துள்ளார். முதன்முறையாக உழவர் நலத்துறைக்கென பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு லாபம் பெறுகின்ற பல திட்டங்களை அறிவித்துள்ளார். இதனை அனைவரும் வரவேற்றுள்ளனர். இந்த வாய்ப்பினை எனக்குத் தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் 3.27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 10, 20 நாட்களில் குறுவை சாகுபடி முடிந்து, சம்பா சாகுபடி துவங்கிவிடும். இந்த நிலையில், எப்படி குறுவை சாகுபடிக்குக் காப்பீடு தொகை கட்டக் கூற முடியும். எனவே இந்த நிலையில், குறுவைக்குக் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியாக சொல்வதாகும். தேவையில்லாமல், உண்மை நிலை அறியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அறிக்கைகள் வெளியிட வேண்டாம் என விவசாய சங்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். சம்பா சாகுபடிக்கான காப்பீட்டு தொகை விரைவில் அறிவிக்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.