ADVERTISEMENT

"ராஜேந்திர பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்"- உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!

05:38 PM Dec 18, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான வழக்கு நீதிபதி நிர்மல்குமார் தலைமையில் நேற்று (17/12/2021) விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக நண்பர்கள் மூலம் பணம் பெற்றதற்கு ஆதாரம் வலுவாக இருக்கிறது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. அவரை கைது செய்து காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இருக்கிறது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் ராஜேந்திர பாலாஜி தரப்பில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வைக்கப்படும் பொய்ப் புகார் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் நீதிபதி நிர்மல்குமார், ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை முழுமையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, தான் கைது செய்யக்கூடும் என்பதால், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஒரு டி.எஸ்.பி., இரண்டு காவல்துறை ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகளை அமைத்து விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த தனிப்படைகள் திருச்சி, சென்னை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளதாகவும், அங்கு ராஜேந்திர பாலாஜியைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் தகவல் கூறுகின்றன.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், உதவியாளர், கார் டிரைவர் ஆகியோரை திருத்தங்கல் காவல்நிலையத்தில் வைத்து சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.

இந்த நிலையில், தனது மகன்கள், ஓட்டுநரை விசாரணைக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் துன்புறுத்தியதாக முன்னாள் அமைச்சரை ராஜேந்திர பாலாஜியின் தங்கை லட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தின் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மேலும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (18/12/2021) நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, "குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜேந்திர பாலாஜியை எப்படி வேண்டுமானாலும் தேடுங்கள், விசாரியுங்கள். குடும்ப உறுப்பினர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். தேவைப்பட்டால் முறைப்படி சம்மன் அனுப்பி குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை செய்யலாம்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT