சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் பணி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. காவல்துறையினர் பாதுகாப்புடன் குடியிருப்புகளை அதிகாரிகள் இடித்து வருகின்றனர்.

Advertisment

256 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் வேறு எங்கும் குடிபெயர்ந்து போக முடியாத கையறு நிலையில் உள்ளனர். வீட்டை விட்டுட்டு எங்க போவது? எங்க பிள்ளைகள் இங்குதான் படிக்கிறார்கள், நாங்கள் அமைதி வழியில்தான் போராடுகிறோம். முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனுக்களை அனுப்பியுள்ளோம். கொஞ்சம் கூட அவகாசம் கொடுக்காமல் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்" என அப்பகுதியினர் கூறினர்.

இந்த நிலையில், அந்த பகுதிக்கு திடீரென பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஐயா, குடியிருப்புகளை இழந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Advertisment

இந்தநிலையில் இன்று (08/05/2022) காலை இளங்கோ நகரில் உள்ள வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது 65 வயது மதிக்கதக்க கண்ணையா என்ற முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், அவரைக் காப்பாற்றிய அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.