Skip to main content

"மதியம் 12 முதல் 3 மணிவரை வெளியில் வர வேண்டாம்" -கடலூர் கலெக்டர் எச்சரிக்கை!

Published on 31/05/2020 | Edited on 31/05/2020
 "Do not come out until 12 noon" - Cuddalore Collector

 

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதேசமயம்  கடந்த இரண்டு வாரங்களாக நீடித்த கத்திரிவெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் குறையவில்லை.


இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :-

"வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அவ்வப்போது தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும். வெயில் காலங்களில் லேசான ஆடைகள்,  உடலை இறுக்கிப் பிடிக்காத  தளர்வான ஆடைகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணிதல் வேண்டும்.  வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குடை, தொப்பி மற்றும் காலணிகளை அணிந்து செல்ல வேண்டும். மேலும் வெளியில் செல்லும் போது தவறாமல் குடிநீர் எடுத்து செல்ல வேண்டும்.

வெளியிடங்களில்  காரமான மற்றும் ரெடிமேட் வகை உணவுகளை தவிர்த்து இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர் போன்ற குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். குளிர் பானங்களை கடைகளில் வாங்கி அருந்துவதை தவிர்த்து எலுமிச்சை சாறு,  மோர், அரிசி வடிநீர் எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் பழச்சாறுகளை வீட்டிலேயே தயாரித்து அவற்றை பருக வேண்டும். உடலில் உள்ள நீர்ச்சத்தை ஆவியாக்கும் மது,  தேநீர் மற்றும் மென்பானங்கள் போன்றவற்றை பருகுவதை தவிர்க்க வேண்டும்.  அதேபோல் நாள்பட்ட உணவு,  அதிக புரதம் கொண்ட மாமிசம்,  கொழுப்பு சத்துள்ள கார வகை உணவுகள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.  

 

அதிகமான வெயிலால் மயக்கம் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுமாயின் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.  கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பணிபுரியும்  பெண்களின் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். கால்நடைகளை நிழலான பகுதியில் கட்டி வைத்திருக்கவேண்டும். கால்நடைகளுக்கு அவ்வப்போது பருகுவதற்கு தாகம் தீர்க்க போதுமான அளவு தண்ணீரை வைக்க வேண்டும்.

சமையல் செய்யக்கூடிய இடத்தில் உள்ள கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து வெளிக்காற்று சுலபமாக வீட்டுக்குள் வரும்படி செய்ய வேண்டும்.  அதேபோல் இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்திருக்கலாம்.  அவ்வப்போது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக  பொதுமக்கள் அதிக வெப்பம் தாக்கக்கூடிய மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலான நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் அந்த நேரங்களில் கடுமையான வேலைகள் செய்வதையும் சமையல் செய்வதையும் தவிர்த்தல் நல்லது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.