Skip to main content

“இடைத்தரகர்களை நம்பி ஏமாறாதீர்கள்” - இராணுவ ஆள்சேர்ப்பு குறித்து கலெக்டர் அறிவிப்பு

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

"Do not be fooled by intermediaries" - Collector's announcement on military recruitment

 

திருவண்ணாமலையில் 10.02.2021 முதல் 26.02.2021 வரை இராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களிலிருந்தும் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்தும், கடந்த ஆண்டு 01.03.2020 முதல் 31.03.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் 25,000 இளைஞர்கள் இராணுவத்தில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளார்கள். முகாமுக்கு வருபவர்களுக்குப் பல்வேறு துறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குநர் கர்னல் கௌரவ் சேத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

 

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திருவண்ணாமலையில் வரும் 10.02.2021 முதல் திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களிருந்து விண்ணப்பித்துள்ள 25,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்கும் இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அதுதொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குநர், காவல் கண்காணிப்பாளர், போக்குவரத்துக் கழகம் உட்பட பல்வேறு துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. இதில் காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கும், முகாம் நடைபெறும் கல்லூரிக்குத் தேவையான போக்குவரத்து வசதி, குறைந்த விலையில் உணவகம், தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிப்பறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவது குறித்தும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வெளிப்படையான முறையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இளைஞர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். அப்படி யாராவது இடைத்தரகர்கள், தனி நபர்கள் வேலை வாங்கித் தருகிறோம் என அணுகினால், உடனாடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். இதற்கான விழிப்புணர்வு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூலமாக மேற்கொள்ளப்படும். திருவண்ணாமலையில் நடைபெறும் சிறப்பான இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் இளைஞர்கள் அனைவரும் பங்கேற்று, இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில், சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் உதவியாளர் கால்நடை, சிப்பாய் எழுத்தர், ஸ்டோர் கீப்பர், தொழில்நுட்பம், சிப்பாய் பொது பணி, சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

 

விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், குடியுரிமை, சாதி மற்றும் பிறப்பு ஆகிய சான்றிதழ்கள், அசல் மற்றும் நகலுடன் முகாம் நடைபெறும் நாள் அன்று கொண்டு வர வேண்டும். இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்பவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். இதில், 1.6 கி.மீ. தூரம் ஒட்டப்பந்தயம், 9அடி கால்வாய் தாவுதல் என உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து உடல் அளவீடுகளுக்கான தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

 

இம்முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், அவர்களுக்கான அனுமதி அட்டையை ஜனவரி 25-ம் தேதி முதல் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுமதி அட்டை அனுப்பப்படும். தமிழ்நாடு அரசின் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளின்படி முகாமில் கலந்துகொள்வதற்கு தினமும் 2,000 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் 4 நாட்களுக்கு முன்பு கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டு அதற்கான முடிவு சான்றிதழ், அனுமதி அட்டையுடன் வர வேண்டும். முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளலாம். இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான அனுமதி அட்டை இதர விவரங்கள் குறித்த தகவல்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் 25.01.2021 முதல் வெளியிடப்படும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பத்தவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படும். மேலும் விரவங்களுக்கு 044 – 25674924, 25674925 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.


இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இராணுவ ஆள்சேர்ப்பு செயல்முறை, முழுமையாக தானியங்கி செயல்பாடாகும். இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் உடல்தகுதி, மருத்துவ மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு யாரும் உதவி செய்ய முடியாது. இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்களின் கடினமான உழைப்பினால் மட்டுமே தேர்வாக முடியும். திருவண்ணாமலையில் நடைபெறும் இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள், சென்னை மண்டல இராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் மூலம் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இத்தேர்வு குறித்த தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்