
புதுச்சேரியில் ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் புதுச்சேரியில் உள்ள சிஏபி மைதானத்தில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் புதுச்சேரி மற்றும் ஆந்திரா அணிகள் மோதிய போட்டி ஜனவரி 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான உள்ளூர் இளைஞர்கள் மற்றும் மண்ணின் மைந்தர்கள் வெளிமாநில விளையாட்டு வீரர்கள் முறைகேடாக புதுச்சேரி சார்பாக ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடுவதை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் அவர்கள் தங்களது கிரிக்கெட் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக கூறி விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை மைதானத்தின் வாயிலில் எரிக்க முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேதராப்பட்டு காவல்துறையினர் அவர்களை மைதானத்திற்கு நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது தற்போது நடந்து வரும் ரஞ்சிக் கோப்பை போட்டியில் புதுச்சேரியின் உள்ளூர் வீரர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு வெளிமாநில வீரர்களை வைத்து விளையாடிய 6 ஆட்டங்களிலுமே வெற்றி பெறாமல் உள்ளனர். இதற்கு சிஏபி நிர்வாகம் முழு பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சிஏபி நிர்வாகத்தின் மீது இருந்து வரும் நிலையில் புதுச்சேரியின் உள்ளூர் வீரர்களுக்கு துரோகம் செய்தும் இந்தியளவில் புதுச்சேரியில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறோம்.