DNA samples of 31 people do not match in Vengaivayal case

கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம்தேதி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து வந்த தண்ணீரை குழாய்களில் பிடித்த மக்களுக்கு அதிர்ச்சி. அந்த தண்ணீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருந்ததை சில இளைஞர்கள் தொட்டியில் ஏறிப் பார்த்துச் சொன்னார்கள்.

Advertisment

இந்த தகவல் அறிந்து ஒரு மணி நேரத்தில் அங்கு வந்த கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்எம். சின்னத்துரை தண்ணீரை பார்த்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தார்.இந்த விவகாரம் இந்திய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியது. பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை முன்னெடுத்தனர். வேங்கைவயல், இறையூர் ஆகிய கிராம மக்களும் இந்தப் பிரச்சனையால் எங்களுக்குள் வேற்றுமையை உருவாக்க நினைத்துள்ளனர். அதனால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்றனர். தனிப்படை போலீசார் விசாரணையைத்தொடங்கி விசாரணை சென்று கொண்டிருந்த போது சிலர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததாக தனிப்படை போலீசார் கூறி வந்தனர். பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பையே விசாரணைக்கு அழைக்கிறார்கள் என்று வேங்கைவயல் மக்கள் குற்றம்சாட்டினர்.

Advertisment

ஜனவரி 25 ஆம்தேதி இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றியது தமிழ்நாடு அரசு. அடுத்த நாளே விசாரணை தொடங்கி சுமார் 220 பேருக்கு மேல் விசாரணை சென்ற நிலையில், சாட்சிகள் இல்லாததால் அறிவியல்பூர்வமாகவே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனிதக் கழிவு கலக்கப்பட்ட தண்ணீரை சோதனைக்கு அனுப்பினர். அதில் பெண் உட்பட சிலரது கழிவுகள் கலக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் வந்தது. அதன் பிறகு சம்பவம் நடந்த அன்று வேங்கைவயல் இளைஞர்கள் உட்பட பலர் உறுப்பினர்களாக உள்ள வாட்ஸ் அப் தளத்தில் நடந்த உரையாடலை வைத்து அதில் ஒரு போலீஸ்காரர் உட்பட 2 பேரிடம் குரல் பரிசோதனை செய்யப்பட்டது.

இதனையடுத்து வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணாவை தனிநபர் கமிஷனாக அமைத்தது தமிழ்நாடு அரசு. தொடர்ந்து டிஎன்ஏ பரிசோதனைக்கு பலரது பட்டியலை நீதிமன்றத்தில் கொடுத்தனர். முதல்கட்டமாக பலர் இந்த பரிசோதனைக்கு உட்பட மறுத்தனர். அதன் பிறகு பரிசோதனைக்கு வந்தனர்.

Advertisment

இதுவரை 31 பேருக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 31 பேரிடம் எடுக்கப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையும், குடிநீர் தொட்டியில் எடுக்கப்பட்ட மாதிரியும் ஒத்துப் போகவில்லை என்று தற்போது தெரிய வந்திருக்கிறது. இதன்மூலம் நீர்த்தேக்கத்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.