Advertisment

சேலத்தில் நாளை திமுக இளைஞரணி மாநில மாநாடு; விரிவான ஏற்பாடுகள் தயார்

DMK Youth State Conference tomorrow in Salem; arrangements are ready

Advertisment

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நாளை (ஜன. 21) நடக்கிறது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரமாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. இதன் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (ஜன. 21) நடக்கிறது.

திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு ஒட்டுமொத்தஅரசியல் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடும் மழை, புயல் காரணமாக இந்த மாநாடு ஏற்கனவே இருமுறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நாளை நடக்கிறது.

சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு தலைமையில் சேலம் மாவட்ட திமுக செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் மாநாட்டு ஏற்பாடுகளைத்தீயாகச் செய்து வருகின்றனர். மாநாட்டிற்காக சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் 9 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாட்டில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

நிகழ்வுகளைக் கண்டுகளிக்க மாநாட்டுத் திடலில் பல இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு நுழைவு வாயில் முகப்பில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க. ஸ்டாலின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முகப்பு பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கொடியேந்திச் செல்வது போல் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டை கொத்தளம்போல் முகப்புப் பகுதி செட் போடப்பட்டுள்ளது.

DMK Youth State Conference tomorrow in Salem; arrangements are ready

இளைஞரணியின் தலைமையகமான அன்பகமும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. திமுகவின் வரலாற்றை விளக்கும் வகையில் வண்ண ஓவியங்கள், மாநில உரிமைகளை மீட்பது குறித்தான எழுச்சி முழக்க வாக்கியங்களும் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. கண்களைக் கவரும் வகையில் கோட்டை கொத்தளம் போன்ற மாநாட்டு வடிவமைப்புகள் மற்றும் பிரமாண்ட பந்தல் அமைப்புகளை சுற்று வட்டார கிராம மக்கள் அன்றாடம் நேரில் வந்து பார்த்துச் செல்கின்றனர். இவை பெரிய அளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

மாநாட்டின் ஒரு பகுதியாக நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் சிலைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தமிழ் மொழிக்கான போராட்டத்தில் திமுகவுக்கு அளப்பரிய பங்கு உண்டு. இதைப் பறைசாற்றும் வகையில் மொழிப்போர் தியாகிகளின் படங்களும் திறந்து வைக்கப்படுகிறது.

பெரியார் நுழைவு வாயில், அண்ணா திடல், கலைஞர் அரங்கம், பேராசிரியர் மேடை, வீரபாண்டியார் கொடி மேடை, முரசொலி மாறன் புகைப்படக் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மறைந்த சேலம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா, நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதா, தனுஷ் ஆகியோரின் பெயர்களில் தோரண வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்காக உணவு ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்தும் வசதிகள், மருத்துவ வசதிகள் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டையொட்டி, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் புல்லட் பேரணி இன்று (ஜன. 20) நடக்கிறது. மாநாட்டுத் திடலில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் நடக்கும் இந்தப் பேரணியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பார்வையிடுகிறார். டிரோன்கள் மூலமாக மாநாட்டு விளக்க நிகழ்ச்சியும் முதல்வருக்குக் காண்பிக்கப்படுகிறது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று தனி விமானத்தில் சேலம் வருகின்றனர். கமலாபுரம் விமான நிலையத்தில் தொடங்கி மாநாட்டுத் திடல் வரை 30 கி.மீ. தொலைவிற்கு சாலையின் இருமருங்கிலும் பேனர்கள், கொடிகள், வரவேற்பு வளைவுகள், தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டையொட்டி, சேலம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமைச்சர் கே.என். நேரு கூறுகையில், ''தமிழக முதல்வர், கழகத் தலைவரின் அறிவிப்பின் பேரில் சேலத்தில் இளைஞரணியின் மாநில உரிமை மீட்பு மாநில மாநாடு நடக்கிறது. இதற்கான நிறைவுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த மாநாட்டிற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இளைஞரணியினர் மட்டுமே 2 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். இது மாபெரும் வெற்றி மாநாடாக இருக்கும்.

மாநாட்டின் முக்கிய அம்சமாக ஜன. 20ம் தேதி மாலை இளைஞரணியின் இருசக்கர வாகனப் பேரணியை முதல்வர் துவக்கி வைக்கிறார். 22 தலைப்புகளில் அமைச்சர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள் பேசுகின்றனர். மாலை 3 மணியளவில் அமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். மாலை 6 மணியளவில் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். இந்த மாநாடு, மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடாக அமையும்'' என்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe