Skip to main content

கரூர் மாநகராட்சி மேயர் பதவியைப் பிடித்த திமுக! புறக்கணித்த அதிமுக! 

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

DMK wins Karur mayoral post

 

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளை ஒட்டுமொத்தமாக திமுக பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.  கரூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 48 வார்டுகளில், 43 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.   காங்கிரஸ் 2 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்திலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

 

கரூர் மாநகராட்சியின் மேயர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சியில் திமுக சார்பில் 22 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  போட்டியிட்ட அனைத்து பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து முதல் பெண் மேயர் யார் என பரவலாக கடந்த சில நாள்களாக பேசப்பட்டு வந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

 

கரூர் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக கவிதா கணேசன் அறிவிக்கப்பட்டார். எம்.எஸ்சி., பி.எட் படித்துள்ள கவிதா கணேசன், ஏற்கெனவே நகர்மன்றத் தலைவராக இருந்தவர். 

 

கரூர் மாநகராட்சியில் இன்று மேயர் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், மாநகராட்சியின் மேயர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கவிதா கணேசன் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதனால் போட்டியின்றி அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் மேயருக்கான இருக்கையில் கவிதா கணேசனை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அமர வைத்தார். திமுக நிர்வாகிகள் மாநகராட்சி மேயருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

 

இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் இரண்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்