Skip to main content

“மக்கள் அளிக்கும் கோரிக்கைகளை திமுக கண்டிப்பாக நிறைவேற்றும்” - கனிமொழி எம்.பி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 DMK will definitely fulfill the demands of the people  says  Kanimozhi MP

2024 மக்களவை தேர்தலையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டு மக்களின் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் பெறப்பட்டு, அதனை நாடாளுமன்றத்தில் ஒலித்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக திமுக சார்பில் கனிமொழி எம்.பி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டனர்.

இன்று (23/02/2024) வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பேபி மஹாலில் நடைபெற்ற நிகழ்வில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பரிந்துரைகளை அளித்தனர். திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவரும்,திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கனிமொழி பேசும்போது, “திமுக தேர்தல் அறிக்கை எப்போதும் மக்களுடைய அறிக்கையாக இருக்கும் என்பதற்குத் தான் தலைவர் கலைஞர் அவர் காலம் முதல் இன்று நம்முடைய திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரை தொடர்ந்து மக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு, அந்த கருத்துக்களைப் பதிவு செய்து  அதைத் தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும் என்று கட்டளையிட்டர்.  

ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கை உருவாக்கப்படும் போது, மக்களைச் சந்தித்து அவர்களுடைய விவரங்களை உள்வாங்கி உருவாக்கப்படுவதுதான் தி.மு.கவின் தேர்தல் அறிக்கை. அதன்படி, நாங்கள் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, அங்கே இருக்கக்கூடிய விவசாய மக்கள், தொழிலாளிகள், தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், மாணவர்கள் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த மக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு, தேர்தல் அறிக்கை உருவாக்கக் கூடிய பணியில் ஈடுபட்டு இருக்கின்றோம்.  

 DMK will definitely fulfill the demands of the people  says  Kanimozhi MP

உங்களுடைய கோரிக்கைகளை, உங்களுடைய கருத்துக்களை, நீங்கள் எங்களுக்குக் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை, நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, அதனை பரிசீலித்து, நம்முடைய முதலமைச்சர் அவர்களிடமும் கலந்துரையாடித் தேர்தல் அறிக்கையை உருவாக்க இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் தான் இந்த நாட்டின் தலையெழுத்தை, இந்த நாட்டின் இன்றைய  நிலையை மாற்றிக் கட்ட முடியும் என்ற அந்த நம்பிக்கையோடு வந்து இருக்கக்கூடிய உங்கள் அத்தனைப் பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் அறிக்கை குழு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது . பல்வேறு துறைகளைச் சார்ந்த மக்களிடம் குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் ஒருங்கிணைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளோம். மக்கள் அளிக்கும் கோரிக்கைகளை திமுக கண்டிப்பாக நிறைவேற்றும்” என்றார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் 20% கூட நிறைவேற்றப்படவில்லையே என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு? முதலில் பிரதமர் மோடி ரூ.15 லட்சம் அனைவருக்கும் வங்கிக் கணக்கில் அனுப்புவதாக தெரிவித்தார். அதை பிரதமர் மோடி அனுப்பிய பிறகு அண்ணாமலை விமர்சிக்க உரிமை உண்டு என பதிலளித்தார்.

திமுக அதிகமாக தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது என கேட்டதற்கு, “இந்தியாவில் எல்லா கட்சிகளும் 50% கூட தேர்தல் பத்திரம் வாங்வில்லை. பாஜகவில் தான் அதிக அளவில் பத்திரம் வாங்கியுள்ளார்கள். அவர்கள் யாரும் குற்றம் சொல்ல முடியாது. தன்னுடைய கட்சிப் பணத்தை கொண்டு வருவதற்காக பாஜக தவறான சட்ட வடிவம் கொண்டு வந்துள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை இந்த மத்திய அரசு குற்றச் சம்பவங்களைப் போல நடத்தி வருகிறது. கண்ணீர் புகை குண்டு , கம்பிகளைக் கொண்டு அச்சுறுத்தி வருகிறது. விவசாயிகள் நியாத்துக்காக போராடி வருகிறார்கள். ஆனால் பாஜக அரசு அதைக் கேட்க மனதில்லை அவர்களை எதிர்த்து ஊடகங்கள் குரல் எழுப்பினாலும் அவர்களை கூட நசுக்குகிறது” என்றார்.

செய்யாறு அருகில் சிப்காட் வேண்டாம் என பொதுமக்கள் போராடி வருகின்றனர் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இதுகுறித்து நான் முதல்வரை சந்திக்கும்பொழுது விவரங்களை தெரிவிப்பேன். போராடும் விவசாயிகளை சந்தித்து விரைவில் சரியான  நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்