அடிமையாட்சியை கோட்டையிலிருந்து விரட்டுவதற்கான போர்! -மு.க.ஸ்டாலினின் ‘தமிழகம் மீட்போம்’ சூளுரை!

DMK Virudhunagar conference meeting

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டதிமுகசார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில், காணொளிவாயிலாகத் தலைமையேற்று ஆற்றிய சிறப்புரையை, உப தலைப்புகளிட்டு தொகுத்துள்ளோம்!

மாவட்ட செயலாளர்கள் இருவரும் மருது சகோதரர்களைப் போல!

வீழ்ச்சியுற்ற தமிழகம் எழுச்சி பெற்றாக வேண்டும்! இந்திய மாநிலங்களில் எல்லா வகையிலும் பின்தங்கிவிட்ட தமிழகத்தின் பெருமை மீட்க - உறுதியெடுக்க வேண்டும் என இந்நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்!

மானம் காத்த தமிழ் மண், இழந்த தனது மானத்தைத் திரும்பப் பெற்றாக வேண்டும்! பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியை உருவாக்கியாக வேண்டும்! முத்தமிழறிஞர் கலைஞரின் கனவுத் திட்டங்களை செயல்படுத்தியாக வேண்டும்! அண்ணாவின் தம்பிகள் என்பதை நாம் நிரூபித்தாக வேண்டும்! கலைஞரின் உடன்பிறப்புகள் என்பதை நாம் மெய்ப்பித்தாக வேண்டும்!

DMK Virudhunagar conference meeting

அத்தகைய தேர்தல் களத்தைத்தான் நாம் நெருங்கிக் கொண்டு இருக்கிறோம். அதற்காகவே ‘தமிழகம் மீட்போம்’ என்ற தேர்தல் பரப்புரையைத் தொடங்கியிருக்கிறோம்.

நேற்றைய முன்தினம், தந்தை பெரியாரின் ஈரோட்டில் இந்த பரப்புரைப் பொதுக்கூட்டம் மிகப்பெரிய எழுச்சியோடும் உணர்ச்சியோடும் தொடங்கியது. நேற்று புதுக்கோட்டையில் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்து, அந்தப் பரப்புரையைத் தொடர்ந்து நடத்தினோம். இன்றைய தினம் பெருந்தலைவர் காமராசரின் மண்ணில் நடைபெறுகின்றது.

இந்த விருதுநகர் மண்ணில் மருது சகோதரர்களைப் போல இணைந்து பணியாற்றி இந்த வட்டாரத்தை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும் மாபெரும் கோட்டையாகக் கட்டி வளர்த்து வருகிறார்கள்.

இருவரும் முன்னாள் அமைச்சர்கள்; இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள். கழகப் பணியையும் மக்கள் சேவையையும் இரண்டு கண்களாக மதித்துச் செயல்பட்டு வரும் அவர்களையும், அவர்களுக்கு தோளோடு தோள் கொடுத்துச் செயல்பட்டு வரும் தோழர்களையும் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்; தலைமைக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் வாய் நிறைய தமிழ்நாடென்று அழைப்பதற்கு யார் காரணம்?

விருதுநகர் என்றால் தியாகி சங்கரலிங்கனாரை மறக்க முடியாது. மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட நமது தாயகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காக, 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்தவர் சங்கரலிங்கனார். அவரைச் சந்திப்பதற்காக பேரறிஞர் அண்ணா அவர்கள் விருதுநகர் வந்தார்கள்!

சங்கரலிங்கனார் அண்ணாவிடம் மனமுருகிச் சொன்னார்; "அண்ணா! நீங்களாவது என்னுடைய ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்றச் சொல்லுங்களேன். ஒருவேளை நான் இறந்தபிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா?" என்றார்.

சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம் செய்தது 1956. 1967-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மலர்கிறது. பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆகிறார்கள். தமிழர்களின் தாய்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய தமிழ்மகன்தான் நம் அண்ணா அவர்கள்!

சங்கரலிங்கனாருக்கு 12 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய தமிழ்மகன் தான் அண்ணா அவர்கள்!

இன்றைக்கு நம் மண்ணை தமிழ்நாடு என்று வாய் நிறைய பெருமை பொங்க நெஞ்சம் நிறைய அழைக்கக் காரணமாக அமைந்தவர் நம் அண்ணா என்பதை விருதுநகர் கூட்டத்தின் வாயிலாக அனைவருக்கும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்!

திமுக வெற்றியைத் தடுக்க சகல அஸ்திரங்களையும் எய்வர்!

தேர்தல் நேரங்களில் விருதுநகர் மாவட்டத்தில் மாநாடுகளை நடத்துவதை கழகம் வழக்கமாக வைத்திருந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் தான் 'தென்மண்டல மாநாடு' நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் 40-க்கு 40 பெற்றது தி.மு.க. கூட்டணி!

அதேபோல் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தையும் நான் விருதுநகரில் இருந்துதான் துவக்கினேன். அதனை மாநில மாநாடு போல, நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் இருவரும் நடத்திக் காட்டினார்கள். அந்தத் தேர்தலிலும் 40-க்கு 39 இடங்களை நமது கூட்டணி பெற்றது.

DMK Virudhunagar conference meeting

2021 சட்டமன்றத் தேர்தலுக்காக விருதுநகரில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பார்க்கும் போது 234-க்கு 234 தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி பெறும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

நமது வெற்றி தீர்மானிக்கப்பட்டு விட்டது. வித்தியாசம் என்ன என்பதை அளவிடுவதற்காகத்தான் தேர்தல் நடக்க இருக்கிறது.

நான் ஆணவத்தில் பேசுவதாக யாரும் நினைத்துவிடக்கூடாது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர், தொண்டர்கள், செயல்வீரர்கள், தோழர்கள் மீதான உழைப்பில் நம்பிக்கை வைத்து, நான் இதனைச் சொல்கிறேன்.

நாம் தான் வெற்றி பெறப் போகிறோம் என்பதில் இன்றைய ஆளும்கட்சிக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த வெற்றியைத் தடுக்க எல்லா வகையான அஸ்திரங்களையும் எய்து பார்க்கிறார்கள். நமது வெற்றியைத் தடுக்கப் பார்க்கிறார்கள்.

அதனால்தான், கழகத்தின் பொதுக்குழுவிலேயே நான் சொன்னேன், “நாம் தான் வெற்றி பெறுவோம், ஆனால் அந்த வெற்றியை எளிதாக அடைய முடியாத அளவுக்கு தடுக்க பார்ப்பார்கள்” என்று சொன்னேன்.

அவர்கள் எத்தகைய தடையை உருவாக்கினாலும், அதனை உடைக்கும் தோள்கள் நம்முடைய தோள்கள். திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் தோள்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

என் காலடித்தடம் படாத கிராமமே இல்லை!

திராவிட இயக்கத்துக்கு விதை தூவிய மாபெரும் மனிதர்கள் வாழ்ந்த ஊர் இந்த விருதுநகர். விருதைப் பெரியார் வி.வி.இராமசாமி, சிவசண்முகசுந்தரனார், கவிஞர் எம்.எஸ்.இராமசாமி, வாலிபப் பெரியார் ஏ.வி.பி.ஆசைதம்பி, இராஜபாளையம் ஆதி நாராயணன், கா.காளிமுத்து, அருமை அண்ணன் வே.தங்கப்பாண்டியன், விருதுநகர் பெ.சீனிவாசன், நல்லதம்பி ஆகிய தீரர்களை யாரும் மறந்திருக்க முடியாது.

ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும் இப்போதும் குன்னூர் சீனிவாசன், தொம்பக்குளம் லிங்கசாமி ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.

இங்கே பொற்கிழி பெற்ற மூத்த முன்னோடிகளின் முகங்களைப் பார்த்து நானே உற்சாகம் அடைகிறேன். நான் இளைஞரணிச் செயலாளராக ஆனபோது, பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று கழகக் கொடியேற்றினேன்.

அதிலும் குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்துக்கு அன்றைய மாவட்டச் செயலாளர் என்னுடைய ஆரூயிர் அண்ணன் வே.தங்கப்பாண்டியன் அழைப்பின் பேரில், விருதுநகர் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களுக்குச் சென்று கொடியேற்றியவன் நான். எனது காலடித்தடம் படாத கிராமமே இல்லை என்கிற அளவுக்கு விருதுநகருடன் எனக்குப் பாசமும் நேசமும் நெருக்கமும் உண்டு.

எத்தனையெத்தனை திட்டங்கள்!

விருதுநகர் மாவட்டத்துக்கு கழக ஆட்சியில் எத்தனையோ நற்பணிகள் செய்து தரப்பட்டுள்ளன.

* விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1787 குடியிருப்புகள் குடிநீர் வசதி பெற்றுப் பயன்பெறும் வகையில் ‘தாமிரபரணி கூட்டுக்குடி நீர் திட்டம், ரூ. 597 கோடி செலவில் 29.11. 2010 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

அப்போது அதனைத் துவக்கி வைத்தது துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சருமாகவும் இருந்த நான்தான் துவக்கி வைத்தேன்!

* இன்றைக்கு விருதுநகர் மருத்துவக்கல்லூரி செயலாக்கத்துக்கு வந்துள்ளது என்றால், அதற்கான விதை போட்டது நான்தான்.

விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் துணை முதலமைச்சர் என்ற முறையில் நான்தான் முதன் முதலில் அறிவிப்பு செய்தேன்!

* பொதுப்பணித் துறை சார்பில் சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் மற்றும் அணைக்கட்டு ஆகியவை இராஜபாளையம் அருகே உருவாக்கப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில் தான்!

காமராசரும் கலைஞரும் தந்தையும் மகனும் போல!

ஈரோடு என்றால் பெரியார்; காஞ்சி என்றால் அண்ணா; திருவாரூர் என்றால் கலைஞர் - என்பதைப் போல விருதுநகர் என்றால் பெருந்தலைவர் காமராசர் அவர்கள்.

பெருந்தலைவர் காமராசரை 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார் அவர்கள்.

குடியாத்தம் தொகுதியில் காமராசர் அவர்கள் போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தாதவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கும் நம்முடைய தலைவர் கலைஞருக்குமான நட்பு என்பது தந்தை - மகன் உறவைப் போல நெருக்கமானதாக இருந்தது.

நெருக்கடி நிலையை எதிர்த்து நான் பதவி விலகத் தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் சொன்னபோது, “பதவி விலகக் கூடாது, இந்தியாவில் தமிழகத்தில் தான் சுதந்திரக் காற்று வீசுகிறது” என்று சொன்னவர் காமராசர் அவர்கள்.

எனக்கு என்ன பெருமை என்றால், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் எனது திருமணத்தை நடத்தி வைக்க பெருந்தலைவர் அவர்கள் வந்திருந்தார்கள். அவரது வருகைக்காக திருமண மண்டபத்தையே கலைஞர் அவர்கள் மாற்றினார்கள். காமராசர் அவர்கள் வரும் வாகனம் நேரடியாக மேடைக்கு வரும் வகையில் மேடையை அமைத்தார் தலைவர் கலைஞர்.

* பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மறைந்த போது அவருக்கு ஒரு மகனைப் போல இறுதி நிகழ்ச்சிகளை நடத்தியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது மட்டுமல்ல, அரசு இடத்தில் அவரை அடக்கம் செய்து நினைவு மண்டபம் கட்டியவர் முதலமைச்சர் கலைஞர்.

* சென்னை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றிய போதுதான் பெருந்தலைவர் காமராசருக்கு முதன்முதலாக சென்னையில் சிலை வைக்கப்பட்டது.

* பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மறைந்தபோது, கடற்கரை சாலைக்கு அவரது பெயரை வைத்தார் முதலமைச்சர் கலைஞர்.

* கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்.

* நெல்லையில் பெருந்தலைவர் காமராசருக்கு சிலை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!

* பெருந்தலைவர் காமராசரின் செயலாளராக இருந்த வைரவனுக்கு வேலை வழங்கி அரசு வீட்டை ஒதுக்கித் தந்தவர் முதலமைச்சர் கலைஞர்.

* பெருந்தலைவர் காமராசரின் சகோதரி நாகம்மாளுக்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து நிதி உதவி அளித்தவர் முதலமைச்சர் கலைஞர்!

* பிரதமர் வி.பி.சிங் அவர்களிடம் வலியுறுத்தி சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராசர் பெயரை சூட்டக் காரணமாக இருந்தவர் முதலமைச்சர் கலைஞர்.

* பெருந்தலைவர் காமராசர் பிறந்த ஜூலை 15-ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட சட்டம் போட்டவர் முதலமைச்சர் கலைஞர்.

- இப்படி பெருந்தலைவர் காமராசருக்காக தமிழினத் தலைவர் கலைஞர் செய்த சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

பெருந்தலைவர் காமராசர் அவர்களை ஒரு கட்சியின் தலைவராக கலைஞர் அவர்கள் பார்க்கவில்லை. ஒரு நாட்டின் தலைவராக கலைஞர் அவர்கள், காமராசரைப் போற்றி மதித்தார்.

இரண்டு கட்சித் தலைவர்களாக இல்லாமல், இரண்டு கொள்கைகளின் தலைவர்களாக அவர்கள் இருந்தார்கள். அத்தகைய அரசியல் பாரம்பரியம் உள்ள தமிழ்நாட்டை, சிதைத்துச் சின்னாபின்னம் ஆக்கிவிட்டது அ.தி.மு.க. ஆட்சி.

கலைஞர் அவர்கள் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தபோது, “தமிழர்களுக்கு கண் கொடுத்தார் காமராசர். கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழர்களை எழுந்து நடக்க வைக்க வேண்டும்” என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

காமராசர் ஆட்சியில் பள்ளிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன என்றால்; தலைவர் கலைஞர் ஆட்சியில் கல்லூரிகள் அதிகமாகத் திறக்கப்பட்டன. காமராசர் ஆட்சியில் பள்ளிக் கல்வி சிறப்புற்று விளங்கியது என்றால், கலைஞர் ஆட்சியில் பள்ளிக் கல்வியோடு கல்லூரிக் கல்வியும் - உயர் கல்வியும் - மருத்துவக் கல்வியும் சிறந்து விளங்கியது.

மத்திய – மாநில அரசுகள் நடத்திய கொலைகள்!

கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எல்லாத் துறைகளும் அதல பாதாளத்துக்கு போய்விட்டன.

விருதுநகர் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டம் என்பதால் கல்வித்துறை சீரழிவுகளை மட்டும் சொல்கிறேன்.

புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியைக் கொல்லும் கொள்கை!

அனைவருக்கும் கல்வி என்பதை சிதைக்கக் கூடியதாக மத்திய அரசின் கல்விக் கொள்கை அமைந்துள்ளது. சிலர் மட்டும் படித்தால் போதும் என்கிற அளவுக்கு தேர்வுகளைக் கட்டாயமாக்கி, பெரும்பாலான மாணவர்களைப் படிப்படியாக கல்விக் கூடங்களில் இருந்து, படிப்படியாக விரட்டத் திட்டமிட்டு இருப்பதுதான் புதிய கல்விக் கொள்கை.

இந்தக் கல்விக் கொள்கையை அ.தி.மு.க. அரசு ஆதரிக்கிறது. நீட் தேர்வை எதிர்ப்பதாக நாடகம் ஆடும் தமிழக அரசு, நீட் தேர்வை தடுப்பதற்கோ, அதில் இருந்து விலக்கு பெறுவதற்கோ எந்த முன்முயற்சியையும் எடுக்கவில்லை. இதனால் 13 மாணவ - மாணவியர் தற்கொலை செய்து கொண்டார்கள். அதனைத் தற்கொலை என்று கூடச் சொல்லக் கூடாது. அது மத்திய - மாநில அரசுகள் நடத்திய கொலைகள்.

அந்த நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கனவு சிதைந்தது. கோச்சிங் சென்டர்களில் லட்சங்களைக் கட்டிப் படிப்பவர்களால்தான் வெற்றி பெற முடியுமானால், ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட பட்டியலினப் பிள்ளைகள் எப்படி மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைய முடியும்? இதனை மத்திய அரசு கொஞ்சமும் சிந்திக்கவில்லை.

தி.மு.க.வின் தொடர்ச்சியான போராட்டங்களின் காரணமாக 7.5 சதவிகித இடஒதுக்கீட்டு உரிமை இப்போது கிடைத்துள்ளது. இதற்கும் ஒரு மசோதாவை நிறைவேற்றிவிட்டு சும்மா இருந்தார் முதலமைச்சர். அவர் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் நாம் செய்து அந்த மசோதாவுக்கு ஆளுநரின் அனுமதியை வாங்கித் தந்தோம்.

மத்திய அரசுடன் துணிச்சலோடு மோதுவதற்கு அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை!

தமிழினத்துக்குச் செய்த மாபெரும் துரோகம்!

இதேபோல் இன்னொரு துரோகத்தையும் மத்திய - மாநில அரசுகள் செய்தது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. ஆனால் இந்த வருடம் அப்படித் தர முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சொன்னது.

இதனை எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. அதைவிட முக்கியமாக மத்திய அரசு நியமித்த குழுவில், இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்று எடப்பாடி அரசு சொல்லவும் இல்லை. இப்படிப்பட்ட இரட்டைத் துரோகத்தை எடப்பாடி அரசு செய்தது. சமூகநீதி விஷயத்தில் அ.தி.மு.க. அரசு ஆடிய பொய்யாட்டங்கள் தான் அதிகம்.

இதுதான் தமிழினத்துக்குச் செய்த மாபெரும் துரோகம் ஆகும்.

மத்திய அரசைக் கேள்வி கேட்டால், அவர்கள் நமது கொள்ளையைத் தடுப்பார்கள்; நம் மீது வழக்குகள் பாயும் என்பதால் கைகட்டி வாய்பொத்தி அடிமைச் சேவகம் செய்து கொண்டு இருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு.

முழு சங்கியாகவே மாறிவிட்ட ராஜேந்திரபாலாஜி!

முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களையும் பற்றிச் சொன்னால் பல மணிநேரம் பிடிக்கும்.

அ.தி.மு.க. அரசில் அங்கம் வகிக்கக் கூடிய அமைச்சர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜியைச் சொன்னால் போதும்.

ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது; ஒரு அமைச்சர் எப்படி இருக்கக் கூடாது; ஒரு மனிதர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாகக் காட்ட வேண்டிய நபர் தான் ராஜேந்திர பாலாஜி!

எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, ஆளும் கட்சியினர் - இன்னும் சொன்னால் ஆளும்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே உயிருக்கு பயப்படக் கூடிய அளவுக்கு அராஜகம் கொடி கட்டிப் பறக்கும் மாவட்டமாக இந்த விருதுநகர் இருக்கிறது.

DMK Virudhunagar conference meeting

எனக்கே கொலை மிரட்டல் விடுக்கிறாயா என்று சாத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கேட்கும் அளவுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டிக் கொண்டு இருக்கிறார்.

ஆளும் கட்சி சார்பாக, விருதுநகர் மாவட்டத்தை மட்டுமல்ல, அ.தி.மு.க. சார்பில் அரட்டல் உருட்டல் செய்வதற்காக தனித்துறை உருவாக்கப்பட்டு அதற்கான அமைச்சராகவே ராஜேந்திர பாலாஜி வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

வாயைத் திறந்தால், வெட்டிவிடுவேன், குத்திவிடுவேன், நாக்கை அறுப்பேன் என்பதுதான் அவரது பாணியாக உள்ளது.

* தி.மு.க. தொண்டர்கள் வீட்டுக் கதவை உடைப்போம். சட்டையைக் கிழிப்போம்.

* கட்டபொம்மனைத் தூக்கில் போட்டது போல கமல்ஹாசனைத் தூக்கில் போட வேண்டும்.

* விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சாத்தூர் தொகுதிக்கு உள்ளே நுழைந்தால் பன்றியைச் சுடும் ரப்பர் குண்டால் சுட வேண்டும்.

* உள்ளாட்சித் தேர்தலில் பல சித்து வேலைகளைச் செய்து அ.தி.மு.க.வை வெற்றி பெற வைப்பேன்!

* கொரோனா நோய் என்பது மக்களுக்கு தரப்பட்ட தண்டனை.

* அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்காத இசுலாமியர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது.

- இவை அனைத்தும் ராஜேந்திர பாலாஜி சொல்லியதன் சுருக்கம் தான்.

அரசியலமைப்புச் சட்டப்படி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒருவர், எந்த வார்த்தையை எல்லாம் பயன்படுத்தக் கூடாதோ, அந்த வார்த்தைகள் அனைத்தையும் தனது பேச்சுகள், பேட்டிகளில் பயன்படுத்தி வருகிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் இவரை ஒரு நாள் கூட பதவியில் வைத்திருக்க மாட்டார். ஜெயலலிதா இறந்து போன பிறகு, தன்னை எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் முழு சங்கியாகவே மாறி ராஜேந்திர பாலாஜி செயல்பட்டு வருகிறார்.

இன்றைய அ.தி.மு.க.வுக்குள் பா.ஜ.க. அணி என்ற ஒன்று இருக்கிறது. அதில் ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் போன்றவர்கள் முக்கிய ஆட்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

பா.ஜ.க. தன்னை எதுவும் செய்யாது என்ற தைரியத்தில் தான் ராஜேந்திரபாலாஜி இப்படி செயல்பட்டு வருகிறார்.

எடப்பாடியால் முடியாது; திமுகவால் தான் அடக்க முடியும்!

தினமும் மைக்கை பார்த்தால் ஏதாவது உளறும் ராஜேந்திர பாலாஜி, என்றைக்காவது தனது துறையைப் பற்றி பேசி இருக்கிறாரா என்றால் இல்லை.

ஆவின் வட்டாரமும் பால் முகவர்களும் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் சொல்லி இருக்கிறாரா?

பால் வாங்குவதில் பெறப்படும் கமிஷன்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை வாயைத் திறந்துள்ளாரா?

சுமார் 300 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பை ஆவின் நிறுவனம் சந்தித்ததால் அது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு குறித்து அமைச்சரின் பதில் என்ன?

மதுரையின் சில குறிப்பிட்ட பகுதிகளில் வழங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் துர்நாற்றம் பிடித்து இருந்ததாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் செய்தார்களே. அதற்கு அமைச்சரால் பதில் தர முடியுமா?

மதுரை மாவட்ட பால் திட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 8 கோடி ரூபாய் வரை முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டும் சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

மதுரை மாவட்ட மொத்த பால் குளிர்விப்பான் நிலையத்தில் மட்டும் 62 லட்சம் ரூபாய்க்கு மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

மேற்கு மாவட்ட பால் விற்பனையில் விநியோகிக்கப்பட்ட போலி செக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு இவரது பதில் என்ன?

நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லி பால்விலையை ஏற்றிவிட்டு, புதிதாக ஆறு ஒன்றியங்களை ஏற்படுத்தி, நிர்வாகச் செலவுகளை அதிகப்படுத்தியதுதான் இவர் இந்தத் துறையைக் கவனிக்கும் இலட்சணம்!

ஒன்றியங்களில் அவுட் சோர்சிங் முறையில் இருந்தபணியிடங்களை நேரடி நியமனம் என்ற பெயரில் விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?

விதிமுறைகளுக்கு முரணான பணி நியமனங்கள், பதவி உயர்வுகள் என்று அதன் மூலம் பல கோடி ரூபாய் இழப்புகள் நடந்திருப்பதற்கு அமைச்சரின் விளக்கம் என்ன?

மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர் பதவிகள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த புகாருக்கு பதில் என்ன?

மதுரை பால் பண்ணையில் நடந்த முறைகேட்டுக்கு காரணமானவர்களை காப்பாற்றியது யார்? இயந்திரத் தளவாடங்கள் வாங்கியதில் நடந்துள்ள இமாலயத் தவறுகளுக்கு யார் காரணம்?

ஆவின் பால் பைக்கான பாலிதீன் பிலிம் கொள்முதல் முறைகேட்டால் பலன் அடைந்தவர்கள் யார்?

தென்மாவட்டங்களில் பணிபுரியும் ஆவின் ஊழியர்களுக்கான மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தில் நடந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றியது யார்?

ஆருத்ரா ஊழலில் இன்றைய உண்மை நிலை என்ன?

இதில் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் ஐ.நா. அதிகாரியைப் போல உலகப் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜேந்திரபாலாஜி மீது நடந்து வருகிறது. இராஜபாளையம் தேவதானத்தில் 35 ஏக்கர் நிலமும், திருத்தங்கலில் இரண்டு வீட்டு மனைகளும், 75 சென்ட் நிலமும் வருமானத்துக்கு அதிகமாக 2011-13 காலக்கட்டத்தில் இவர் வாங்கியதாக திருத்தங்கல் மகேந்திரன் என்பவர் போட்ட வழக்கு இன்னமும் விசாரணையில் இருக்கிறது. ஏழு கோடி மதிப்பிலான இந்த நிலத்தை ஒரு கோடி என்று கணக்கு காட்டியுள்ளார் ராஜேந்திரபாலாஜி என்பது குற்றச்சாட்டு. இதில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று இவர் போட்ட மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பு வந்தால் இன்றில்லாவிட்டாலும், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் புழல் வாசம் செய்யப்போகும் மனிதர் தான் ராஜேந்திர பாலாஜி என்பதை அவருக்கும் அ.தி.மு.க.வினருக்கும் நினைவுபடுத்துகிறேன்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஓராண்டு தண்டனை கொடுத்தால் ராஜேந்திர பாலாஜி வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறேன்!

ராஜேந்திர பாலாஜி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராஜவர்மன் இடையேயான மோதல் குறித்து வெளிப்படையாக கட்டுரை எழுதிய செய்தியாளர் கார்த்திக் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில் அமைச்சர் இருக்கிறார் என்ற செய்தியை அவர் இதுவரை மறுத்துள்ளாரா? இந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?

ராஜேந்திர பாலாஜிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அடக்க முடியாது. தி.மு.க.வால் தான் அடக்க முடியும். மக்கள் சக்தியால்தான் அடக்க முடியும். அப்படி அடக்குவதற்கான தேர்தல்தான் வரப்போகிற சட்டமன்றத் தேர்தல்.

ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசு!

"எல்லார்க்கும் எல்லாமும்" என்ற லட்சியத்தைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்! சிலருக்கும் மட்டுமே எல்லாம் என்று சொல்பவர்களாக மத்திய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தட்டிக் கேட்க முடியாத கோழைகளாக மாநில ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்!

‘மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி’ என்பது திராவிட முன்னேற்றக் கழகம்!

ஆனால் இன்று நடப்பது ‘மத்தியில் சர்வாதிகார ஆட்சி; மாநிலத்தில் அடிமையாட்சி!’

தமிழ்நாடு செழிக்க, தமிழினம் மேம்பட, தமிழகம் தழைக்க வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கழகம்!

தாங்கள் வளம் பெற்றால் போதும் என்று முப்பது பேர் விருப்பத்துக்கும் வசதிக்கும் மட்டுமே நடக்கும் ஆட்சி இன்றைய அ.தி.மு.க. ஆட்சி!

மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் அரசு என்பது நமது இலட்சியம்!

ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசு என்பதே அ.தி.மு.க. அரசின் அடையாளம்!

இந்தக் கும்பலைக் கோட்டையில் இருந்து விரட்ட வேண்டும். அதற்கான போர் தான் வருகின்ற சட்டமன்றத் தேர்தல்!

தந்தை பெரியாரின் - பேரறிஞர் அண்ணாவின் - பெருந்தலைவர் காமராசரின் - முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழகத்தை மீட்போம்!

இவ்வாறு உரையாற்றினார் மு.க.ஸ்டாலின்.

admk mk stalin
இதையும் படியுங்கள்
Subscribe