/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1507.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் 300-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு திமுக சார்பில் வாக்குச்சாவடி மைய முகவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதில் உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் ஆதரவாளர்களையும், அந்த தொகுதியில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் ஆதரவாளர்களையும் வாக்குச்சாவடி முகவர்களாக நியமனம் செய்வதில் திமுகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஒன்றிய செயலாளர்கள் அவர்களது ஆதரவாளர்களை அதிக அளவில் வாக்குச்சாவடி முகவரிகளாக நியமித்துள்ளதாகவும் அதனால் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களுக்கும் ஒன்றிய செயலாளர்களின் ஆதரவாளர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இது தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து சுமூகமாக பேசி முடிவு செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளர் உதயசூரியன் எம் எல் ஏ இன்று 16.11.24 மதியம் உளுந்தூர்பேட்டை பயணியர் விடுதிக்கு வந்திருந்தார். அங்கு சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் மற்றும் இவரது ஆதரவாளர்களும் ஒன்றிய செயலாளர்களின் ஆதரவாளர்களும் குவிந்தனர். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், மணிகண்ணன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் பயணியர் விடுதியில் உள்ள அறையில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது வெளியே இருந்த இரு தரப்பின் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியது. உள்ளிருந்த எம்எல்ஏக்கள் உதயசூரியன் மற்றும் மணிகண்ணன் ஆகிய இருவரும் வெளியே வந்து கைகலப்பில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது இரண்டு தரப்பினரும் தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை களைந்து போகசெய்தனர். தொடர்ந்து அங்கு நூற்றுக்கணக்கான திமுகவினர் குவிந்து வருவதால் அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுனர். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் கலைந்து போகச்செய்து அமைதியை கொண்டுவந்தனர். கட்சியினர் ஒவ்வொருவரும் கோபத்தோடு கலைந்து சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)