Skip to main content

தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் - 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published on 01/07/2018 | Edited on 01/07/2018
DMDK

 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில், 30-6-2018 சனிக்கிழமை, மாலை 4.00 மணியளவில், கரூர், சுங்ககேட், திருமுருகன் திருமண மகாலில் நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணி  மாவட்ட,  மாநகர, மாநில, அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க. மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., வரவேற்புரையாற்றிட, இணை மற்றும் துணைச் செயலாளர்கள் முனைவர் கோவி.செழியன், எம்.எல்.ஏ., பூவை சி.ஜெரால்டு - மன்னை த.சோழராஜன், ஈரோடு பி.ஆர்.எஸ்.ரங்கசாமி, எஸ்.மோகன்,  சேலம் ரா.தமிழரசன், எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், சி.இலக்குவன், வீ.கவிகணேசன், எம்.ஏ.எம்.ஷெரீப், அதலை பி.செந்தில்குமார் மற்றும் கரூர்  மாவட்டக் கழகச் செயலாளர் நன்னியூர் இராஜேந்திரன் ஆகியோரும்  முன்னிலையில்  நடைபெற்றது. 

இதில் மாவட்ட,  மாநகர, மாநில, அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-


தீர்மானம் - 1

‘நீட்’ தோல்வியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவிகளுக்கும், காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சஜாத் புகாரிக்கும் இரங்கல்!

மருத்துவராகும் கனவுடன் அபரிதமான மதிப்பெண்களை +2 தேர்வில் பெற்றிருந்தும், மத்திய அரசின் ‘நீட்’ தேர்வில் தோல்வி கண்டு துவண்டு போன செஞ்சி பிரதீபா, திருச்சி கீர்த்தி ஆகிய மாணவிகளின் அகால மறைவுக்கும், ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக கேரளாவுக்கு சென்ற மருத்துவ மாணவர் கஸ்துட்ரி மகாலிங்கத்தின் தந்தை மன்னார்குடி கிருஷ்ணசாமி, சிங்கம்புணரி மருத்தவ மாணவி ஐஸ்வர்யாவின் தந்தை கண்ணன், துட்த்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிடக்கோரி மக்கள் நடத்திய பேரணியில்  தமிழக காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலியான 13 பேர்களுக்கும்  - காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சஜாத் புகாரி மற்றும் அவரது பாதுகாவலர்களின் மறைவிற்கும் கழக மாணவர் அணியின் இக்கூட்டம் தமது ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 2

‘நீட்’ மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு!

மத்திய அரசின் ‘நீட்’ மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்று, தொடக்க நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்த, கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தத்தின் விளைவாக, சென்ற ஆண்டு விழுப்புரம் அனிதாவும், இவ்வாண்டு செஞ்சி பிரதீபாவும் தற்கொலை செய்த அவலம் நடந்தேறியது.

கிராமப்புற மாணவ-மாணவிகளின் விருப்பத்திற்கு எதிராக  வீம்புக்காக, நீட் தேர்வுக்குரிய அரசு பயிற்சி என்று ரூ.450 கோடி செலவு செய்தும், பயனாளிகள் மிகவும் குறைவான அளவிலேயே தேர்ச்சி பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்வி மாணவிகளை பழிவாங்கும் நீட் தேர்வை தமிழகத்தில் நிரந்தரமாக ரத்து செய்வதுதான் நிரந்தர தீர்வாக அமையும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத செவியில்லா காதினராக மத்திய மாநில அரசுகள் அலட்சியப் போக்குடன் நடந்துக் கொள்வதால், தமிழகம் துயரக்கடலில் ஆழ்ந்துள்ளது.

இந்தியாவிலேயே கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பயின்று, மருத்துவத்துறையில் பல முன்மாதிரிகளை (Roll Model) உருவாக்கிய தமிழ்நாட்டில், இனிமேல் சாதாரண - சாமானிய - பிற்படுத்தப்பட்ட- மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயங்களைச் சார்ந்த குடும்பத்திலிருந்து டாக்டர்களே வரப்போவதில்லை என்ற ஆபத்தான நிலையை உருவாக்கியுள்ள சூழலை கருத்தில் கொண்டு, ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பா-.ஜ.க.மோடி அரசையும் - குதிரை பேர பினாமி எடப்பாடி அரசையும் இக்கூட்டம் மீண்டும் வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 1-2-2017 அன்று ‘தமிழக மாணவர்கள் மருத்துவ கல்வி பயிலவும் - மருத்துவ உயர்கல்வி பெறவும் ‘நீட்’ தேர்வு தேவையில்லை என்றும், அந்த கொடிய சமூகநீதிக் கொள்கைக்கு எதிரான ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க, இரண்டு சட்ட மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக, மத்திய அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்து ஓராண்டுக்கு மேலாகியும், இன்னும் அது என்ன நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. ஒருவேளை மத்திய அரசு அந்த மசோதாவை விதிமுறைகளின்படி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், வேண்டுமென்றே கிடப்பில் போட்டு வைத்திருக்கும் என்று கருதினால், அந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் அனுமதி பெறவும், உடனடியாக மத்திய அரசுக்கு உத்தரவிடவும் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக ஒரு வழக்கு தொடர வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும் - கழகச் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியதை இக்கூட்டம் வழிமொழிந்து வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 3
தூத்துக்குடியில் விவசாயம் நலிவடைய காரணமான குதிரைபேர 
எடப்பாடி அரசுக்கு கண்டனம்.

தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலைக்கு, நாள் ஒன்றுக்கு 24,000 லட்சம் லிட்டர் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் எடுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தினசரி 11/2 கோடி லிட்டர் தண்ணீரை அரசுக்குத்  தெரியாமல் எடுக்கின்ற தண்ணீரால், அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயம் நலிவடைந்துவிட்டது.

வாழ்வாதாரமே கெட்டுவிட்ட சூழ்நிலையில், வேதாந்த அகர்வால் என்ற  கோடீஸ்வர முதலாளியின் லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த தமிழகமே பாழ்பட்டுப் போனாலும் கவலையில்லை என்ற அலட்சிய போக்கில் ஆட்சி நடத்தும் குதிரைபேர பினாமி எடப்பாடி அரசுக்கு கடும் கண்டனத்தை இக்கூட்டம் தெரிவிக்கிறது.


தீர்மானம் - 4

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட நடவடிக்கை மேற்கொள்க!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிடக் கோரி நடைபெற்ற மக்கள் முழக்கப் பேரணியில், சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் ஊடுருவி விட்டனர் என்று கூறி, மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கும் குதிரைபேர பினாமி எடப்பாடி அரசு, ஆலையின் அதிபர் வேதாந்த அகர்வாலின் கண்ணசைவுக்கு தகுந்தாற்போல் நாடகமாடி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வராமல் நடித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாவலராக இருக்கிறார் என்பது மறைக்க முடியாத உண்மையாக உள்ளது. தூத்துக்குடி மக்கள் சுகாதாரத்திற்கும், உயிருக்கும் சவால் விடுகின்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிடும் வரையில் தமிழக மக்கள் ஓயமாட்டார்கள் என்பதை குதிரைபேர எடப்பாடி  அரசுக்கு இக்கூட்டம் வலியுறுத்தி கூறுவதோடு;

கழகச் செயல் தலைவரும் - தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் "அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி, அதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதென கொள்கை முடிவெடுத்து, அதனை சட்டப்பேரவையில் வைத்து தீர்மானமாக நிறைவேற்றி, நிரந்தர முடிவெடுக்க வேண்டும்"" என வலியுறுத்தியன் அடிப்படையில், எடப்பாடி அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தி.மு.க. மாணவர் அணியின் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 5

மாநில சுயாட்சிக் கொள்கைக்கு விரோதமாகச் செயல்படும் தமிழக ஆளுநரை திரும்ப பெறுக!

பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லாதது’ என்று 1968-ம் ஆண்டு கூறினார்கள்.

மாநில சுயாட்சிக் கொள்கை என்பது தி.மு.கழகத்தின் உயிர் மூச்சான கொள்கை. தலைவர் கலைஞர், அரசியல் மேதை முரசொலி மாறன், இரா.செழியன், நீதியரசர் பி.வி.இராஜமன்னார் போன்ற மாபெரும் சிந்தனையாளர்களின் சிந்தனை ஒளிக்கீற்றால், இந்திய இறையாண்மைக்குக் கிடைத்திட்ட மாபெரும் பொக்கிஷமாகும்.

அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்துத் தந்துள்ள அதிகாரங்களின்படி, மாநிலக் கட்சிகள் தங்களுக்குள்ள கோரிக்கைகளை முன்வைத்து செயற்பாட்டில் இறங்குவது என்பது அடிப்படை உரிமை.

ஆட்டைக் கடித்து - மாட்டைக் கடித்து - கடைசியில் மனிதனைக் கடிப்பதுபோல், டெல்லி, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் ஆளுநரின் அதிகார வரம்பு மீறல்களைத் தொடர்ந்து, தற்போது தமிழகத்திலும் வேண்டுமென்றே மீறப்பட்டு வருகிறது. இந்நிலைமை இந்திய இறையாண்மைக்கே ஊறு விளைவிக்குமோ என்ற ஐயப்பாடு தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.

 "தமிழகத்திலே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடிமை ஆட்சியும், ஆளுநர் தலைமையிலே எஜமானர் ஆட்சியாகவும் "இரட்டை ஆட்சி" முறை நடைபெற்று வருகிறது"  என கழகச் செயல் தலைவரும் - தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதை இக்கூட்டம் சுட்டிக்காட்டுவதோடு, தனது வன்மையான கண்டனத்தையும் பதிவு செய்கிறது.

இவரைப் போன்றே மற்ற மாநிலங்களிலும் உள்ள ஆளுநர்களும் செயல்படுகின்றார்களா? என்று பொதுமக்கள் கேள்வி கேட்கின்றார்கள். ஆளுநருக்குரிய கடமைகளைச் செய்ய மறுத்து, கழகச் செயல் தலைவரின் பேரணியைக் கண்டு, ஏழு வருடம் சிறைத் தண்டனை என்று பொத்தாம் பொதுவாக அரசியல் கட்சிகளுக்கு மிரட்டல் விடுத்து, தமிழக மக்களை எள்ளி நகையாடும் செயலை செய்து வருகின்ற பேராசிரியர் நிர்மலாதேவி புகழ் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை மத்திய பா.ஜ.க.அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 6

சென்னை - சேலம் எட்டுவழி பாதை  குறித்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்களை கைது செய்வதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, மாற்றுவழி அமைத்திட முறையான நிபுணர் குழுவை அமைத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தல்!


‘இது ஜனநாயக நாடு, ஆகவே மக்களின் ஒத்துழைப்பும் ஒப்புதலுமின்றி சர்வாதிகார மனப்பான்மையுடனும், தன் முனைப்புடனும், எந்தத் திட்டத்தையும் அரசு பயங்கரவாதத்தைக் கொண்டு நிறைவேற்றிட முடியாது என்பதை முதலமைச்சர் பழனிசாமி புரிந்துக் கொண்டு குறுகலான ஒருவழிப்பாதை அணுகுமுறையைக் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்’.

‘விவசாய நிலங்களோ, நீர் ஆதாரங்களோ, பசுமை நிறைந்த மலைகளோ பாதிக்கப்படாத வகையில், இந்த சென்னை - சேலம் பசுமை விரைவு சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்றுவதற்கு ஏற்றதொரு திட்டத்தைத் தயாரிப்பதற்கு அல்லது இப்போது பயன்பாட்டில் உள்ள சாலையில் ஒன்றை அகலப்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கு, உடனடியாக ஒரு நிபுணர் குழுவை  அமைத்திட வேண்டும் என்று தி.மு.கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்’ என்று கழகச் செயல் தலைவர் தளபதி அவர்கள் 23.06.2018 அன்று விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய, மேற்காணும் கோரிக்கையை இக்கூட்டம் வழிமொழிவதுடன், சென்னை - சேலம் எட்டுவழி பாதை  குறித்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களை கைது செய்வதை இக்கூட்டம் கண்டிப்பதோடு, இத்திட்டத்தை மாற்றுவழியில் அமைத்திட முறையான நிபுணர் குழுவை அமைத்து இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஆளும் எடப்பாடி அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 7

கழக செயல் தலைவருக்கு மாணவர் அணியின் மனமுவந்த நன்றி!

‘மரியாதை நிமித்தமாகவும், பிறந்த நாள் நிகழ்ச்சியிலும், முக்கிய விழாக்களிலும், பொதுக்கூட்டங்களிலும் தன்னைக் காணவரும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் சார்வைகளுக்கு பதிலாக, புத்தகங்களை வழங்கினால் மாணவர்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் மிகவும் பயனுள்ள வகையில், தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைப்பேன்’ என்று செயல் தலைவர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் அறிவித்த ஆணைக்கு இணங்க, கழகத்தினர் வழங்கும் வரலாறு, அறிவியல், இலக்கியம், அரசியல் உள்ளிட்ட அனைத்து வகையான நூல்களையும் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வழங்கி வருகின்ற, ‘சொலல்வல்லன் சோர்விலன்’ எங்கள் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் மனமுவந்த நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 8

தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்த குதிரைபேர எடப்பாடி அரசு உடனடியாக பதவி விலகிடுக!


தன்னுடைய உழைப்பில் உருவான - வியர்வையின் வெளிப்பாடாக வந்த வருமானத்தில், தமிழர்கள் சிறுகச்சிறுக சேர்த்து வைத்த சேமிப்பில், நகை ஆபரணங்களையும், அன்றாடச் செலவினங்களுக்குரிய பணத்தையும் தங்கள் வீட்டில் பாதுகாப்பான அலமாரிகளில் வைத்துவிட்டு, கடைத் தெருவுக்கோ, அல்லது அக்கம் பக்கமுள்ள இடங்களுக்கோச் சென்று விட்டு வீடு திரும்புபோது, கணவனுக்கும் - மனைவிக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், 40 பவுன், 50 பவுன் என்று நகைகள் கொள்ளை போவதும், வழிப்பறி நடப்பதும், கொலை செய்யப்படுவதுமான நிகழ்வுகள் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் நடைபெற்று சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து கொள்ளையர்களின் கூடாரமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

அதுமட்டுமின்றி சிறைகளுக்குள்ளேயே தண்டனை பெற்ற குற்றவாளிகள் படுகொலை செய்யப்படுகின்ற சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

ஆகவே மோடியின் அடிமை ஆட்சி நடத்தும் குதிரைபேர பினாமி எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 9

கல்லூரிகளில் கழக அமைப்பை உருவாக்குவதுடன் - மாணவர் அணியில் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்த வேண்டும்.

 கழகச் செயல் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாணவர் அணியை வலிமையாக்கிட, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை, கழக மாணவர் அணியில் உறுப்பினராக்கிட முழுமூச்சுடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதோடு;

ஒவ்வொரு கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் கழக மாணவர் அணியின் சார்பில் அமைப்பை உருவாக்கி, அந்த அமைப்பிற்கு  தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடு, மாணவர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்து, அவ்வமைப்புகளின் நிர்வாகிகள் பட்டியலை வரும் ஜூலை மாதம் இறுதியில் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்கள் மூலமாக தலைமைக் கழகத்தில் சேர்த்திட வேண்டும். 

இப்பட்டியலை மாநில மாணவர் அணி ஆய்வு செய்து, கழகச் செயல் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அந்நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும் என்பதால், ஒவ்வொரு மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், நிர்வாகிகள் இப்பணியில் தங்களை மூழு மூச்சுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 10

வேலையில்லாமல் தவித்து வரும்  ஏழை, எளிய மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை முழுமையாக ரத்து செய்க!


கல்வி என்பது பணக்காரர்களுக்கு மட்டுமல்ல, ஏழை, எளியவர்களுக்கும் உரிமையானது  என்பதில் உறுதியான நிலைப்பாட்டினை கொண்ட தி.மு.கழகத்தின் இயக்கத்தின் கொள்கையின்படி,

ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி பெற தடையாக இருக்கும் கல்விக் கட்டணம் கட்டமுடியாமல் தவித்து வரும் பெற்றோர்களின் பாரத்தை குறைக்கும் வகையில் ‘‘கல்விக் கடன் அளிக்கப்படும்’’ என்று அறிவித்தபோது, அதனை வரவேற்ற  மகிழ்ந்தது தி.மு.க. மாணவர் அணி.

ஆனால், தற்போது கல்விக் கடன் பெற்று உயர் கல்வி பயின்ற மாணவர்கள், பட்டம் பெற்றும் வேலைவாய்ப்பின்றி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், கல்விக்கடன் அளித்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அவர்களை கஷ்டப்படுத்துவதோடு, அவர்களின் பெற்றோர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி  வருவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதோடு;

கடந்த சட்டமன்றத் தேர்தலின் தேர்தல் அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகம், கல்விக் கடன் பெற்று, வேலையில்லாமல் தவித்து வரும் ஏழை, எளிய மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தது. அக்கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசு, அம்மாணவர்களுக்காக சிறப்பு திட்டம் ஒன்றினை உருவாக்கி, அதன் மூலம் அவர்கள் பெற்ற கல்விக் கடனை ரத்து செய்திட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை, மாணவர் அணியின் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 11


இந்தியாவின் அனைத்து பத்திரிகையாளர்களின்  உணர்வுகளையும், உயிர்களையும் பாதுகாக்க வேண்டும்!


காஷ்மீரில் பத்திரிகையாளர் சஜாத் புகாரி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள துயரம், இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  நாட்டின் தலைசிறந்த அறிவு ஜீவிகள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் - கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்கள் தீவிரவாதக் குழுக்களால் படுகொலை செய்யப்படும் அபாயகரமான சூழ்நிலை மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.

ஆளும் அரசையும், அதன் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்ப்பதும் - செயற்படுவதும், பத்திரிகையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள கருத்துரிமை சுதந்திரமாகும். அரசு நிறுவனங்களோ அல்லது அரசியல் இயக்கங்களோ, அவர்களின் கருத்தை கருத்துரீதியாக எதிர்கொள்ளும் தன்மை அண்மைக்  காலமாக மிகவும் ஒடுங்கிப் போய், பழிவாங்கும் நோக்குடன் உயிரைப் பறிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

அதே போன்று தமிழகத்தில் பெண் பத்திரிகையாளரை, பாலியல் ரீதியாகவும், இழிவாகவும் அவமதித்து பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை குதிரைபேர எடப்பாடி அரசு பாதுகாத்து வருகிறது.இதுபோன்ற உணர்வுகளையும் உயிர்களையும் பறிக்கும் போக்கு ஜனநாயக நாட்டில் கவலையளிக்கிறது.

ஆகவே, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட இந்தியாவின் அனைத்து ஜனநாயக சக்திகளும் தீவிரவாதத்தை ஒடுக்கும் வகையில் ஒன்று திரள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் - 12

தலைவர் கலைஞர் ஆட்சியில் உருவான  கலைக் கருவூலங்களை பராமரித்திடுக!

சிலப்பதிகார கண்ணகியின் வரலாறு கூறும் பூம்புகார் எழுநிலை மாடத்தையும்,ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்து தன்னுயிரை ஈகிய வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையையும், சென்னை மெரினாவில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நினைவிடம், சென்னை வள்ளுவர் கோட்டம், காயிதே மில்லத் மணி மண்டபம், குமரி முனையில் அமைந்துள்ள அய்யன் வள்ளுவர் சிலை ஆகிய  கலைக் கருவூலங்கள் அனைத்தும் தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரே  காரணத்திற்காக, பராமரிப்பு பணிகள் ஏதும் செய்யாமல், குதிரைபேர எடப்பாடி அரசு வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டு மக்களும், வெளிநாட்டு மக்களும் ஆர்வத்துடன் கண்டு வியந்தும் -  தமிழர்களின் தொன்மைகளை உணரும் வகையிலும், சுற்றுலா தலமாக அமைந்து, அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் வகையில் தலைவர் கலைஞர் உருவாக்கிய அக்கலைக் கருவூலங்களை பராமரித்துப் பாதுகாத்திட மாநில அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 13

கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்திடுக!

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் மாணவர் பேரவையின் மூலம் தமிழ் மன்றங்கள் அமைக்கப்பட்டு அங்கே தமிழ்ச் சான்றோர்களும், ஆன்றோர்களும் கலந்துகொண்டு அரிய பல கருத்துக்களை மாணவர்களிடையே விதைத்துச் சென்றனர். அதன் மூலமாக பண்பட்ட மாணவர் சமுதாயம் தோன்றி புகழை ஈட்டியது. இன்று அவ்வாறான மாணவர் பேரவைகள் இல்லாத சூழ்நிலையால் சில கல்லூரிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த சில அசம்பாவிதங்களை கருத்திற் கொண்டு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தல்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இன்றுள்ள காலச்சூழலில் தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் பேரவை அவசிய தேவைப்படுகிறது.

ஆகவே, கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல்களை அரசே தமது பொறுப்பில் முன்னின்று நடத்தினால், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிற மாணவர் பேரவையின் பிரதிநிதிகளின் முடிவிற்கு மாணவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதும், கட்டுக்கோப்பாக இருப்பதற்கும்  வாய்ப்புள்ளது.

தங்களுடைய பிரச்னைகளை அவர்களின் பிரதிநிதிகளிடம் முன்வைப்பதும் - அதற்குரிய தீர்வுகளைக் காண்பதும் எளிதாக அமையும். சில கல்லூரிகளில், சில மாணவர்களின் பொறுப்பற்ற செயல்களால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது போலவும், அதேவேலையில், அரசோ அல்லது கல்லூரி நிர்வாகமே மேற்கொள்ளும் முடிவுகளை மாணவர் பேரவை பிரதிநிதிகளிடம் தெரிவித்து அதன் மூலம் மாணவர்களை ஒருமித்திடும் சூழலை உருவாக்குகின்ற வகையில் மாணவர் பேரவைத் தேர்தல்களும் - அதன் முடிவுகளும் அமையும் என்பதை தமிழக அரசு கருத்திற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும்படி இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

கலைஞர் நினைவிடத் திறப்பு விழாவில் ரஜினி

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
rajini at kalaignar memorial opening ceremony

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றிருக்கும் நிலையில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர். 

இந்த நிலையில் கலைஞர் நினைவிடத் திறப்பு நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டுள்ளார். முதல்வருக்கு அருகில் அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சியைக் கண்டுகளித்தார். மேலும் வைரமுத்துவும் கலந்துகொண்டுள்ளார். 

Next Story

“கலைஞர் கையைப் பிடித்துக் கொண்ட உணர்வு” - வைரமுத்து நெகிழ்ச்சி

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
vairamuthu about kalaignar memorial

சென்னைக் கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. 

இந்த நிலையில் கலைஞர் நினைவிடம் குறித்து வைரமுத்து நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “கலைஞர் நினைவிடம்
கண்டு சிலிர்த்தேன் 

கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம்
சுற்றிவந்த உணர்வு

இது தந்தைக்குத் 
தனயன் எழுப்பிய மண்டபமல்ல
தலைவனுக்குத்
தொண்டன் கட்டிய தாஜ்மஹால்

‘இப்படியோர் நினைவிடம்
வாய்க்குமென்றால்
எத்தனை முறையும் இறக்கலாம்’

கலைஞர் கண்டிருந்தால்
கவிதை பாடியிருப்பார்

உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில்
கலைஞர் உயிரோடிருக்கிறார்

உலகத் தரம்

நன்றி தளபதி” என குறிப்பிட்டுள்ளார்.