dmk struggle in erode

Advertisment

மத்திய பா.ஜ.கஅரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் மசோதாக்களை கண்டித்தும் அதற்குத் துணைபோன தமிழக அ.தி.மு.க அரசைக் கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் தி.மு.கமற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் 28 இடங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்ட தி.மு.க அலுவலகம் முன்பு தெற்கு மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் வேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துணைப்பொதுச் செயலாளர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் பி. கே. பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் கே.இ. பிரகாஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

அதே போல் கூட்டணிக் கட்சிகளான ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொ.ம.தே.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உட்பட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அதேபோல் ஈரோடு மாநகர் பகுதியில் கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி ,திண்டல், எல்லை மாரியம்மன் கோவில்,ஆர்.என். புதூர் உள்பட பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

dmk struggle in erode

கோபியில் வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார். இதைப்போல் கொடுமுடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். அவல்பூந்துறை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஈரோடு எம்.பிகணேசமூர்த்தி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் உள்பட கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். மொடக்குறிச்சி, லக்காபுரம், அரச்சலூர், சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி என மாவட்டம் முழுவதும் 28 இடங்களில் இவ்வாறான கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏர் கலப்பையுடனும் நாற்று நட்டும் "மத்திய அரசே... மோடி அரசே... விவசாயிகளை வஞ்சிக்காதே... பா.ஜ.க.வின் துரோகத்திற்கு துணைபோன எடப்பாடி அரசே! பதவி விலகு... பதவி விலகு..." எனக் கோஷமிட்டனர்.