Skip to main content

வள்ளலுக்கு சிலை தந்த தி.மு.க... மக்களுக்காக அர்ப்பணித்த மு.க.ஸ்டாலின்... 

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

DMK statue VKN .. MK Stalin dedicated to the people ...


“இந்த நாடு உனக்கு என்ன செய்தது.? என்று கேட்காமல் இந்த நாட்டுக்கு நீ என்ன செய்தாய்.? என்று யோசி!” என்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான். எஃப். கென்னடியின் வாக்கினைக் கொள்கையாகக் கொண்டு, தான் சார்ந்த கட்சிக்கு நெருக்கடி காலம் தொடங்கி இறுதிவரை உண்மையான அபிமானியாக இருந்து, தன் ஊர் மக்களுக்கு சிறந்த சேவகனாய், வள்ளலாய் மாறி மறைந்தவர் கண்டரமாணிக்கம் விகேயென். இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெண்கல உருவச்சிலையை இன்று (07/01/2021) திறந்து வைத்து மக்களுக்காக அர்ப்பணித்துள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

இன்றைய சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் என்னும் ஊரில் 1946ஆம் ஆண்டு லட்சுமணன் செட்டியார் - கலியாணி ஆச்சி தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் கண்ணப்பன். ஆரம்பப் பள்ளிக் கல்வியினை சொந்த ஊரிலேயே கற்றவர், பி.யூ.சி. படிப்பினை மதுரை தியாகராசாவிலும், பொறியியல் கல்வியினை அண்ணாமலை பல்கலையிலும் கற்றுணர்ந்து, திருச்சி அருகிலுள்ள துவாக்குடியில் ‘விகேயென் ஸ்டிரக்சுரல்’ எனும் உதிரிப்பாக நிறுவனத்தைத் தொடங்கினார். ஒருபுறம் தொழில் பணி, சமூகப்பணி, தெய்வீகப்பணி மற்றும் கல்விப்பணி ஆகியவற்றினை தன்னுடைய அறமாகக் கொண்டாலும், மறுபுறம் மாணவப் பருவத்திலேயே கையில் ஏந்திய தி.மு.க. கொடியினை இறுதிவரை இறக்கவில்லை. கலைஞரின் அபிமானியாக, அன்பில் பொய்யாமொழியின் நண்பனாக, மு.க.ஸ்டாலினின் சகாவாக பயணித்த விகேயென் எனும் கண்ணப்பன் அரசியல் பதவிகளுக்கு எந்நாளும் போட்டியிட்டதில்லை. 1989ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட, கலைஞர் பணித்தும் பதவி அரசியல் எனக்கு வேண்டாமென விலகியவர் இவர். அதன் பின்னரே ராம.நாராயணன் போட்டியிட்டார் என நினைவு கூறுகின்றனர் உள்ளூர் தி.மு.க.வினர்.

 

கண்டரமாணிக்கத்தைச் சேர்ந்த தமிழரசு, “இங்குள்ள ராக்கப்பன் ஊருணியிலுள்ள நீரை எடுத்து தேத்தான் கொட்டை சேர்த்த பின்னரே குடிநீராக பருக வேண்டும். இத்தகைய காலகட்டத்தில் குடிநீர் பஞ்சம் பெருமளவில் நிகழ, மக்களின் தேவைகளுக்காக தன்னுடைய சொந்த செலவில், இங்கு மட்டும் 37 போர்களை போட்டு அடிபம்பு குழாய்களைத் தந்தார். இங்குதான் இப்படியென்றால், கல்லல் ஒன்றியம் முழுவதும் ஏறக்குறைய 300க்கும் அதிகமான போர் அடிபம்பு குழாய்களை மக்களின் பயன்பாட்டுக்காக கொடுத்துள்ளார். இவரால் கல்வி கற்றவர்கள் மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர். புனருத்தம் செய்யப்பட்ட கோவில்களும் அதிகம். இதனாலேயே அனைவரும் விகேயென்னை வள்ளலாக பாவிக்கின்றோம்” என நெகிழ்கின்றார்.

 

உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நான்குமுறை அறங்காவலராகப் பணியாற்றிய விகேயென்னிற்கு கண்ணாத்தாள் ஆட்சி என்கின்ற மனைவியும், கேப்டன் ராஜா, நாராயணன் மற்றும் கல்யாண சுந்தரம்  என மூன்று புதல்வர்களும் உண்டு. 2017ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய நிலையில், இறுதி சடங்கில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

 

இவ்வேளையில், ‘வள்ளல் விகேயென்’ எனும் கண்ணப்பனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது வெண்கல உருவச் சிலையை திறந்து வைக்க, தி.மு.க.வின் கண்டரமாணிக்கம் கிளைச் செயலாளர் முன்னெடுக்க, முதல் நபராக மா.செ.பெரியருப்பன் ரூ.1.25 லட்சம் அன்பளிப்பு கொடுத்து தொடங்கி வைக்க, ஊர்க்காரர்கள் தொடங்கி அனைவரும் போட்டிப் போட்டு நிதியினை வழங்கிய நிலையில், 200 கிலோ வெண்கல சிலை உருவானது. இதனிடையே, சிலையை நிறுவதற்காக ரூ.8 லட்சம் மதிப்புள்ள இடத்தினை தானமாக வழங்கியுள்ளனர் உள்ளூர் நகரத்தார்களான எ.எல்.கே.ஆர்.மணிகண்டன், கார்த்திக் கருப்பையா மற்றும் மருத்துவர் எல்.மணிகண்டன்.

  

DMK statue VKN .. MK Stalin dedicated to the people ...

 

தி.மு.க.வின் சிவகங்கை மா.செ.பெரியகருப்பன் தலைமையில், தென்னவன் மற்றும் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்த நிலையில், தி.மு.க.வினரோடு ஊர்மக்கள் திரள, காலை 11 மணியளவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் காணொளி காட்சி மூலம் வள்ளலின் சிலை திறந்து வைக்கப்பட்டது. தங்களது சமூகத்தைச் சேர்ந்த வள்ளல் விகேயென் எனும் கண்ணப்பனுக்கு தி.மு.க.வினர் சிலை திறந்ததை கண்டு மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் 96 ஊர் நகரத்தார்கள்.

 

 

படங்கள்: விவேக்

 

சார்ந்த செய்திகள்