Skip to main content

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் வாக்குறுதிகளை! நிறைவேற்றி கொடுப்போம்  ஸ்டாலின்  பேச்சு!!

 

மாற்று கட்சிகளில் இருந்து திமுகவில் இணையும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்  தேனி மாவட்ட திமுக சார்பில் தேனி அருகே  உள்ள  வீரபாண்டியில் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.  

 

பொதுக்கூட்டத்திற்கு மாற்று கட்சியிலிரூந்து திமுகவில் இணைவதற்காக மாவட்ட அளவில் ஆயிரக்கணக்கானோர் வந்து திமுக வில் இணைந்தனர்.   அந்தஅளவிற்கு மாற்றுகட்சியில் இருந்து திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் அதற்கான ஏற்பாடுகளை செய்து மாற்றுக் கட்சியினரையும் பொதுமக்களையும் கட்சியில் இணைத்தார்.     அதோடு மாவட்ட அளவில் கட்சிக்காரர்களும் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்.

 

s


இக்கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  இதில் கழக துணை துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கலந்து கொண்டனர். அதன் பின் இறுதியாக பேசிய கழக தலைவர் ஸ்டாலினோ... அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வில் தங்கதமிழ்செல்வன் கடந்த மாதம் இணைந்தார்.   அவரோடு சேர்ந்து இன்றைக்கு ஆயிரக்கணக்கில் இங்கே அமைந்துள்ள இந்த அண்ணா அறிவாலயத்தில் நீங்கள் எல்லாம் வந்து சேர்ந்து இருக்கிறீர்கள்.  வரவேண்டிய இடத்துக்கு, வந்து சேர வேண்டிய இடத்துக்கு தான் வந்திருக்கிறீர்கள். தங்கதமிழ்செல்வன் பேசும் போது  கூட நம்முடைய மொழிக்கு, இனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை சுட்டிக் காட்டினார். நம்முடைய தாய் மொழியான தமிழ் மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது.

 

s

 

தலைவர் கலைஞர் 14 வயதில் பள்ளிக்கூடத்தில் மாணவனாக படித்துக் கொண்டு இருந்த  அன்றைக்கு திணிக்கப்பட இருந்த இந்தியை எதிர்க்க தமிழ்மொழியை காக்க தன்னோடு படித்துக் கொண்டு இருந்த பள்ளி மாணவர்களை திரட்டி திருவாரூர் நகர வீதிகளில் தமிழ்க் கொடியை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று  தமிழ் மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது.   அதை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு நாம் வந்து இருக்கிறோம்.   தமிழ் மொழியை பற்றி கலைஞர் குறிப்பிட்டுச் சொல்லும் போது, தமிழை தமிழே என்று அழைக்கும் சுகம் வேறு எதிலும் கிடையாது என்பார்.   அப்படிப்பட்ட தாய் மொழியாம் தமிழுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது.   


தங்கதமிழ்செல்வனுடன் சில நேரம் யாருக்கும் தெரியாமல் பழகுகிற வாய்ப்புகளை நாங்கள் பெற்றது உண்டு.    அவரிடம் பிடித்த விசயம் என்னவென்றால் அவர் எப்போதும் சிரித்த முகமாக இருப்பார்.  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.   அதுபோன்று அவருடைய சிரிப்பு கள்ளம்கபடம் இல்லாதது. சட்டமன்றத்தில் சில நேரம் நான் பேசிவிட்டு வெளியே வரும் போது, என்னிடம் வந்து அண்ணே சூப்பரா பேசினீர்கள் என்று தனிப்பட்ட முறையில் சொல்வார்.

 

தங்க.தமிழ்செல்வனை ரொம்ப நாளாகவே எப்படியாவது தூண்டில் போட்டு இழுத்து விடலாம் என்ற முயற்சியில் நாங்கள் ஈடுபட்டது உண்டு. அவர் மாட்டவில்லை. ஆனால், இப்போது மாட்டிவிட்டார். கொஞ்சம் தாமதம் அவ்வளவு தான். லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து இருக்கிறார்.

 

s

 

நீங்கள் எல்லாம் அண்ணா உருவாக்கிய இயக்கத்துக்கு வந்து இருக்கிறீர்கள்.  கலைஞர் வழிநடத்திய இயக்கத்துக்கு வந்து இருக்கிறீர்கள்.   நீங்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டு இருந்த மறைந்த எம்.ஜி.ஆர். இருந்த இயக்கமும் தி.மு.க. தான். அறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை வழிநடத்த தமிழகத்தின் முதல்வராக  பொறுப்பேற்க சில பிரச்சினைகள் வந்தது. அப்போது முதல் ஆளாக அண்ணாவுக்கு பிறகு கலைஞர் தான் முதல்அமைச்சராக வர வேண்டும் என்று சொல்லி அதை செய்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.. பல கட்டுரைகளில் கலைஞரை பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிடும் போது, நான் அண்ணாவாக கலைஞரை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தான் புரட்சி நடிகராக வலம் வருவதற்கு அந்த பட்டத்தை கொடுத்ததே கலைஞர் தான் என்று எம்.ஜி.ஆர். பல நேரங்களில் சொல்லி இருக்கிறார். பிறக்கும் போதே கலைஞர் தி.மு.க. என்று கூறியதோடு, 'தி' என்பது திருவாரூர், 'மு' என்பது முத்துவேலர் 'க' என்பது கருணாநிதி என்ற விளக்கத்தை கூறியவர் எம்.ஜி.ஆர்.


தி.மு.க.வில் இருந்து பிரிந்து அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார். முதல்அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., ஒரு நாளும் ஒரு சின்ன இழிசொல்லை கூட கலைஞரை பார்த்து சொன்னது கிடையாது. அந்த அளவுக்கு கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் பாச உணர்வு உண்டு. 


இன்றைக்கு இருக்கும் அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வா. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வாக இருந்திருந்தால் தங்கதமிழ்செல்வன் தி.மு.க.வுக்கு வந்து இருக்கவே முடியாது.  எம்.ஜி.ஆருக்கும், இன்றைக்கு இருக்கும் அ.தி.மு.க.வுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் அரசின் செலவில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொண்டாடினார்கள். அதை நான் தவறு என்று சொல்லவில்லை. எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்திக் கொண்டு இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக அவர்களுக்கே அந்த விழாவை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர எம்.ஜி.ஆர். புகழை பாடினார்களா? அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். உருவாக்கியது மட்டும் இல்லை, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டது.

 

நமக்கும், ஜெயலலிதாவுக்கும் கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எம்.ஜி.ஆர். மறைந்தபோது முதன்முதலில் அஞ்சலி செலுத்தியது கலைஞர் தான். அதேபோல், ஜெயலலிதா மறைந்தபோது மருத்துவமனையில் உடல் நலிவுற்ற நிலையில் படுத்தபடுக்கையாக இருந்த கலைஞர் என்னை அழைத்து உடனடியாக சென்று அஞ்சலி செலுத்துவிட்டு வா என்று உத்தரவிட்டார். இது நம்முடைய அரசியல் நாகரிகம். ஜெயலலிதா பெயரை பயன்படுத்தி அவருடைய படத்தை சட்டைப் பையில் வைத்து இருக்கிறார்கள். உள்ளன்போடு வைத்து இருக்கிறார்களா? கொள்ளை அடிப்பதற்காகவும், பதவி சுகத்தை அனுபவிக்கவும், லஞ்சம் பெறவும், ஊழல் செய்யவும் இன்றைக்கு அந்த படத்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

 

ஜெயலலிதா மறைவு என்பது மர்மமான கேள்விக்குறியோடு இருந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் எத்தனையோ முதல் அமைச்சராக இருந்தவர்கள் மறைந்தபோது இப்படி ஒரு பிரச்சினை வந்தது உண்டா? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நாங்களா முதலில் சொன்னோம். இன்றைக்கு துணை முதல்அமைச்சராக இருக்கும் ஒபிஎஸ் தானே இதை முதலில் சொன்னார். அதை ஏன் சொன்னார் தெரியுமா? ஜெயலலிதா மறைந்தவுடன் முதல்அமைச்சராக ஓ.பி.எஸ் இருந்தார். அப்போது அவர் மர்மம் என்று சொல்லவில்லை.  அவருடைய பதவியை எடுத்தவுடன் அவருக்கு ஆத்திரம் வந்து விட்டது. ஆத்திரம் வந்ததால் நேராக ஜெயலலிதா சமாதிக்கு சென்றாரா? இல்லையா? 40 நிமிடங்கள் உட்கார்ந்து தியானம் செய்தாரா? இல்லையா? தர்மயுத்தம் என்று சொன்னாரா? இல்லையா? ஆவியோடு பேசினாரா? இல்லையா? நான் விமர்சனம் செய்கிறேன் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. அவரே வந்து வெளியே சொன்னார். அம்மாவுடன் பேசினேன் என்றார். மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றார்.

 

விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றார் பின்னர்  அவரை சமாதானம் செய்வதற்காக தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் நடந்து கொண்டு இருக்கிறது, அந்த ஆணையத்தை நீடித்துக் கொண்டே செல்கிறார்கள். முடிவே இல்லாமல் போய்கொண்டு இருக்கிறதே. அந்த விசாரணை ஆணையத்தில் இருந்து ஓ.பி எஸ் சை விசாரிக்க வேண்டும் என்று 6 முறை சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். அதை ஏற்றுக் கொண்டு இதுவரை ஒருமுறை கூட ஆஜராகாதவர் தான் ஓ.பி.எஸ் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

எம்.ஜி.ஆரைப் பற்றி கவலைப் படாதவர்கள், ஜெயலலிதாவை பற்றி கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்காதவர்கள், இன்றைக்கு மோடியையும், அமித்ஷாவையும் தான் தலைவர்கள் என்று அவர்களின் படத்தை வைத்து பூஜை செய்து கொண்டு இருப்பவர்களின் தலைமையில் அன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அமித்ஷாவுக்கோ, மோடிக்கோ அண்ணாவை தெரியுமா? எம்.ஜி.ஆரை தெரியுமா? வெறும் பதவிக்காக, பணத்துக்காக தலையாட்டி பொம்மையாக, அடிமைகளாக இருந்து கொண்டு இருக்கும் நிலையில் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. உண்மையாக அ.தி.மு.க.வில் இன்றைக்கும் உழைத்துக் கொண்டு இருக்கும் உண்மை விசுவாசிகள், தொண்டர்கள் அங்கே இருப்பது நியாயமல்ல. உங்களின் இயக்கம், தாய்க் கழகமான தி.மு.க. தான். நான் இந்த கூட்டத்தின் மூலமாக அவர்களையும் அழைக்க விரும்புகிறேன்.

 

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் நாம் வெற்றி பெற்றோம். தேனி தொகுதியில் நாம் வெற்றி பெறும் வாய்ப்பை எப்படி இழந்தோம் என்பதை தங்கதமிழ்செல்வன் கூறிவிட்டார். அதுபோல், 22 சட்டமன்ற தொகுதிகளில் நாம் 13 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம். சட்டமன்றத்தில் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என்ன பேசுகிறார்கள் என்றால், இந்த தேர்தலில் தி.மு.க. மக்களிடம் பொய்யான வாக்குறுதி தந்து, தவறான வாக்குறுதி தந்து, அதையும் தாண்டி மக்களை மிட்டாய் கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்கிவிட்டார்கள் என்று கூறுகிறார்கள். 38 தொகுதிகளில் நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்றோம் என்றால், நீங்கள் இந்த தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள் அதற்கு  நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா?
மக்கள் என்ன இழிச்சவாயர்களா? தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் முதல் அமைச்சர் பேசலாமா? 

 

தி.மு.க. முறையாக தேர்தலை சந்தித்து 234 தொகுதிகளில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று கம்பீரமாக ஆட்சி அமைக்கும். இன்றைக்கு இருக்கும் ஆட்சி இன்னைக்கா? நாளைக்கா? என ஐ.சி.யு.வில் உள்ளது. ஐ.சி.யு. என்பதை விட, கோமா நிலையில் உள்ளது இப்போதுள்ள ஆட்சி. நாங்கள் கொடுத்தது மிட்டாய் அல்ல. தமிழக மக்களுக்கு நாங்கள் கொடுத்து இருப்பது வாக்குறுதி. இன்று இல்லை என்றாலும் நாளை தி.மு.க. தானே ஆட்சிக்கு வரப் போகிறது. தேர்தல் நேரத்தில் தந்துள்ள அத்தனை உறுதிமொழிகளையும், மீண்டும் தேர்தல் நேரத்தில் தரப்போகும் அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றியே தீருவோம்.

 

அ.தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தார்களே.. என்றைக்காவது ஒருநாள் நாடாளுமன்றத்தில் மத்திய ஆட்சியில் கோரிக்கை வைத்து ஏதேனும் தீர்மானம் போட்டது உண்டா? ஏதாவது பேசியது உண்டா? எதுவும் கிடையாது. நீட் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 5 மாணவிகள் தற்கொலை செய்து இறந்து உள்ளனர். நடுத்தர, ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்கள் என்னதான் படித்து சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தாலும், நீட் தேர்வால் மருத்துவக்கல்வி படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

 

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தான் மத்தியில் நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். அதை நான் மறுக்கவில்லை. அப்போது குஜராத் முதல்அமைச்சராக இருந்த மோடி அதை ஏற்கவில்லை. தமிழகத்தில் கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது அதை ஏற்கவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று தடை உத்தரவு பெற்றார். கலைஞர் முதல்அமைச்சராக இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழையாமல் பார்த்துக் கொண்டார். ஜெயலலிதா முதல்அமைச்சராக இருந்தவரை கூட வரவில்லை.  அவரை சர்வாதிகாரி என்ற நிலையில் நான் அவரை விமர்சித்து இருந்தாலும், மத்திய அரசை கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தவர் அவர். நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வை தடுப்போம் என்று கூறி இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு தடுக்கவில்லையோ.

 

தி.மு.க. கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற 38 எம்.பி.க்கள் டெல்லியில் சென்று என்ன செய்யப் போகிறார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். நாம் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக நம்முடைய வீரர்கள் பொறுப்பேற்று இந்த ஒரு மாதத்தில் என்னென்ன சாதனைகள் செய்து இருக்கிறார்கள் என்பதை இன்றைக்கு நான் தலைப்புச் செய்தியாக குறிப்பிட விரும்புகிறேன்.

 

பள்ளிக் கல்வியில் இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற முயற்சி எடுத்த நேரத்தில் அதை திரும்ப பெற வைத்தது நம்முடைய எம்.பி.க்கள் தான். ரெயில்வே துறையில் தமிழிலும் பேசக்கூடாது, ஆங்கிலத்திலும் பேசக்கூடாது. இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்ற ஒரு அறிவிப்பை அனுப்பிய உடனே, அனுப்பிய ஒரு மணி நேரத்தில் அதை திரும்பப் பெற வைத்தோம் என்றால் அது தி.மு.க. எம்.பி.க்களால் தான். அதுபோல், தபால் துறையில் தேர்வு எழுதுவதற்கு இந்தி. தமிழ் கிடையாது. அதை எதிர்த்து குரல் கொடுத்தார்கள். அதன் பலனாக, நடத்திய தேர்வை ரத்து செய்து இனி தமிழிலும் தேர்வு எழுதலாம் என்ற உத்திரவாதத்தை பெற்று இருக்கும் கட்சி தான் தி.மு.க.. அதுபோல் ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும், நியூட்ரினோ திட்டமாக இருந்தாலும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். நியூட்ரினோ திட்டம் என்பது துணை முதல்-அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தொகுதியில் தான் உள்ளது. தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால், துணிச்சல் இருந்தால் அதை எதிர்த்து சட்டமன்றத்தில் வாதிடுவதற்கு இந்த ஆட்சியாளர்கள் தயாராக இருக்கிறார்களா?
ஒருபுறம் காவிரி பிரச்சினை, சேலம் உருக்காலை பிரச்சினை, நெக்ஸ்ட் தேர்வு பிரச்சினை, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை இப்படி பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலையில், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். சட்டமன்றத்தில் தினமும் குரல் கொடுத்துள்ளோம்.

 

ஆட்சியை கலைக்க கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள் என்று நம்மை பார்த்து விமர்சனம் செய்கிறார்கள். இனிமேல் கனவு எல்லாம் காண வேண்டிய அவசியம்  இல்லை.  நினைவாகவே விரைவில் நடக்கப் போகிறது என்று கூறினார் 

 

  இக் கூட்டத்தில் ஸ்டாலினுக்கு தங்கதமிழ்செல்வன் வெள்ளிவால் வழங்கினார். அதோடு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்.  பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார்  மற்றும் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் முன்னாள் மாவட்ட செயலாளர் மூக்கையா முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார். பெரியகுளம் முன்னாள் நகர செயலாளர் செல்லப்பாண்டியன் தேனி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி. போடி முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன்.தேனி ஜீவா மற்றும் கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...