Advertisment

''காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல்''-திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு  

தமிழகக் காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் வாங்கியதில் 350 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், காவல்துறை சம்பந்தப்பட்ட இந்த ஊழலையாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை முறைப்படி நியாயமாக விசாரித்து, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்றும்திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,

Advertisment

“தமிழ்நாடு காவல்துறைக்கு கேமிரா, சி.சி.டி.வி., டிஜிட்டெல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள்” கொள்முதல் செய்யும் 350 கோடி ரூபாய் டெண்டரில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது, கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே 88 கோடி ரூபாய் வாக்கி டாக்கி ஊழல் குறித்து உள்துறைச் செயலாளரே 11 விதிமுறை மீறல்களை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினார். அப்போதே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், “உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் வாக்கி டாக்கி ஊழலை விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் ஊழலில் புரையோடிப் போயிருக்கும் அ.தி.மு.க. அரசு, அந்த வாக்கி டாக்கி விவகாரத்தை மூடி மறைத்ததன் தொடர்ச்சியாக, தற்போது 350 கோடி ரூபாய் ஊழல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

dmk stalin report

தமிழகக் காவல்துறையில் உள்ள தொழில் நுட்பப் பிரிவின் எஸ்.பி.யாக இருக்கும் அன்புச்செழியன், முன்பு டி.ஜி.பி.யாக இருந்த “குட்கா புகழ்” திரு டி.கே. ராஜேந்திரனின் நேரடி உத்தரவுக்கு மட்டுமே செவி சாய்த்து- கொள்முதல் டெண்டர்களை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகித்தார் என்பது, தமிழகக் காவல்துறை அலுவலகத்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

Advertisment

“வி- லிங்” என்ற கம்பெனி பற்றியும்- அந்தக் கம்பெனிக்கு ஏன் “தொழில்நுட்பப் பிரிவில்” உள்ள டெண்டர்களில் பெரும்பாலானவை கொடுக்கப்படுகின்றன என்பதும் டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள கடைக்கோடி ஊழியர் வரை அனைவருக்கும் தெரியும். இது போன்ற சூழலில் தற்போது காவல்துறையின் தொழில் நுட்பப் பிரிவில் வழங்கப்பட்டுள்ள டெண்டர்களில் “வி-லிங்” என்ற கம்பெனிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதும், அதிலும் குறிப்பாக டிஜிட்டல் மொபைல் ரேடியோவிற்கான 16 மாவட்ட டெண்டர்களில், 10 மாவட்ட டெண்டர்கள் இந்தக் கம்பெனிக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

350 கோடி ரூபாய் டெண்டரில்- அதுவும் குறிப்பாக மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் என்பது, அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.

வழக்குகளின் புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை ஆய்வாளர்களுக்கும், டி.எஸ்.பி.களுக்கும் வாகன வசதி இல்லை. காலாவதியான வாகனங்களை, மோட்டார் சைக்கிள்களை மாற்ற அ.தி.மு.க. அரசுக்கு மனமில்லை. ஒரு பக்கம் ஒட்டுமொத்தப் புலனாய்வுப் பணிகளே வாகனப் பற்றாக்குறையால் அ.தி.மு.க .ஆட்சியில் ஸ்தம்பித்து நிற்க - காவல்துறை நவீன மயக்கலுக்காக ஒதுக்கப்படும் இந்த நிதியிலும் இவ்வளவு பெரிய ஊழல் என்பது, போலீஸ் துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமிக்கு வெட்கமாக இல்லையா?

இந்த லட்சணத்தில் தன்னுடைய தொகுதியிலே போய் நின்று கொண்டு, அவருக்கு என்ன தெரியும், இவருக்கு என்ன தெரியும் என்று வெற்றுச் சவால் விட்டுப் பேசுவதாலே, அனைத்தும் அறிந்த “ஞானப்பழம் “ இவர் என்று ஊர் நம்பிவிடும் என நப்பாசை கொள்ளும் முதலமைச்சரைப் பார்த்து அனைவரும் பரிதாபப்பட்டு கைகொட்டி நகைக்கிறார்கள்.

dmk stalin report

முதலமைச்சரே ஊழல் புகாருக்கு உள்ளாவதும், அமைச்சர்களின் ஊழல் புகார்களை எல்லாம் மூடி மறைக்கும் காரியத்தில் அ.தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விஜிலென்ஸ் துறை தீவிரமாக ஈடுபட்டதுமே; இப்படியொரு மிக மோசமான ஊழல் காவல்துறையிலேயே நடைபெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

ஆகவே காவல்துறை சம்பந்தப்பட்ட இந்த ஊழலையாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை முறைப்படி நியாயமாக விசாரித்து- உண்மைக் குற்றவாளிகளை- அவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முதலமைச்சரின் துறையிலேயே நடைபெற்ற ஊழல் என்பதால் - இந்த ஊழல் வழக்கு விசாரணை தொடர்பான எந்த விவரங்களையும் முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகளுடன் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை பகிர்ந்து கொள்ளாமல்- சுதந்திரமாக இந்த விசாரணையை நடத்தி, ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் காட்ட வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு முனைகளிலும் பொது மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனதைப்போல, இதிலும் பொய்த்துப் போய்விடுமோ என்று பொதுமக்கள் கவலையுடன் காத்திருக்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

.

stalin admk corruption
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe