dmk rs bharathi tender chennai high court

Advertisment

நெடுஞ்சாலை டெண்டர் தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது திமுக அமைப்பு செயலாளர், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த மனுவை அவர்திரும்பப் பெற்றதை அடுத்து வழக்கை முடித்துவைத்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் 462 கிலோ மீட்டர் தூரத்திற்குசாலை அமைக்கவும், சாலைகள் விரிவாக்கத்துக்கும், 1,165 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக்கூறி, திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், வழக்கமாக ஆண்டுதோறும் டெண்டர் பிறப்பிக்கப்படும். ஆனால் இந்த டெண்டர் ஐந்து ஆண்டுகளுக்கு கோரப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் டெண்டர் கோரும்போது, ஒரு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும். அந்த வகையில் 500 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவாகும். தற்போது 800 கோடி ரூபாய் வரை அதிக செலவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்ததாரர்கள் டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க இயலாத நிலையில், துறை அமைச்சரான முதல்வருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தப் பேரிடர் காலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், சாலை அமைக்க டெண்டர் கோரி முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து முதல்வர்பழனிசாமிமீது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தபுகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், கடந்த 1- ஆம் தேதி நடைபெற்ற டெண்டரில் யாரும் பங்கேற்காதபோது ஊழல் நடந்துள்ளதாகக்கூறி, அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், ஆர்.எஸ்.பாரதி புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு, புகாரில் முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புத் துறை முடிவெடுத்து விட்டதாகவும், அது தொடர்பான புகாரை முடித்துவைத்து, அது குறித்த விபரங்களை பாரதிக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி சதீஷ்குமார், டெண்டரே ஒதுக்காதபோது எப்படி ஊழல் குற்றச்சாட்டை சுமத்த முடியுமென கேள்வி எழுப்பியதுடன், வழக்கை வாபஸ் பெறுவதே முறையாக இருக்கும் என அறிவுறுத்தினர். லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம் குறித்து ஆர்.எஸ்.பாரதியிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக, அவரது வழக்கறிஞர் தெரிவித்ததால் விசாரணை தள்ளிவைக்கபட்டது.

Advertisment

இதனையடுத்து, இந்த வழக்கு இன்று (18/06/2020) மீண்டும் நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், மனுதரார் விளம்பர நோக்கிலும், அரசியல் லாபத்திற்கும், இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல, எனவே, நீதிமன்றம் இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அப்போது ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முதல்வருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என நீதிபதியிடம் தெரிவித்தார். இதனையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலைகள் அமைக்கக்கோரிய டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.