Skip to main content

ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!- உயர்நீதிமன்றம்!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

dmk rs bharathi chennai high court

 

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி,  காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. 

 

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாகக்கூறி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் ஆர்.எஸ். பாரதி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கில் ஜூன் 1- ஆம் தேதி சரணடைந்த ஆர்.எஸ்.பாரதிக்கு, ஜாமீன் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி, மத்திய குற்றப் பிரிவு தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த மனுவில், கடும் நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல், ஆர்.எஸ்.பாரதிக்கு அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாகவும், தொற்று நோய் பரவலை காரணம் காட்டி, ஜாமீன் வழங்க முடியாது எனவும், அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக ஆர்.எஸ்.பாரதி கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

dmk rs bharathi chennai high court

 

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன் எனக் கேள்வி எழுப்பி, விசாரணையை ஜூன் 19- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

இன்று (19/06/2020) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சை மறுத்தால் அதை நிரூபிக்க அவரது குரல் மாதிரியை எடுக்க வேண்டும். அதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால், ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். குறிப்பிட்ட சமுதாய மக்களை மட்டும் அவர் களங்கப்படுத்தவில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் தரக்குறைவாகப் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

ஆர்.எஸ்.பாரதி தரப்பில், ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டதாகவும், ஜாமீனை ரத்து செய்ய எந்த காரணமும் இல்லை என்றும், விரோதப் போக்குடன் மாநில அரசு தற்போது இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக வாதிடப்பட்டது. ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென புகார்தாரர் கல்யாணசுந்தரம் தரப்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், காவல் துறை தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும் என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். மேலும், சிபாரிசு இருந்தால் யார் வேண்டுமானலும் நீதிபதி ஆகிவிடலாம் என்பதைப்போல் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு உள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என பாரதிக்கு தனிப்பட்ட முறையில் அறிவுறுத்துமாறு அவரது வழக்கறிஞரிடம் தெரிவித்தார். பின்னர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மத்திய குற்றப்பிரிவின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
 

 

சார்ந்த செய்திகள்