ADVERTISEMENT

காமராஜரின் கனவுகளை நனவாக்கும் வகையில் பாடுபட்டது திமுக ஆட்சி! - ஸ்டாலின்

09:25 PM Jul 15, 2018 | Anonymous (not verified)



கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் அவர் விட்டுச் சென்ற “கல்வி” என்ற கருவூலத்தைப் போற்றிப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்போம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

ADVERTISEMENT


’’கல்வி வளர்ச்சியின் இரு கண்களாக விளங்கிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15 அன்று மாணவர் சமுதாயம் பெருமகிழ்ச்சியுடனும் பெருமிதத்தோடும் கொண்டாடிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்க கடமைப்பட்டுள்ளேன். தமிழ்நாடு கல்வியில் முன்னேறவும், மாணவர் சமுதாயம் விழிப்புணர்வு பெற்று மேம்பாடடையவும் தன் வாழ்நாளில் அரும்பாடுபட்ட பெருந்தலைவர் அவர்களின் அரிய சேவையை தமிழ்ச் சமுதாயம் எந்நாளும் மறக்க முடியாது. கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் கட்டுவதில் புரட்சியை ஏற்படுத்திய கர்ம வீரர் அவர்களின் அருமை பெருமைகளை கல்விக்கண் பெற்ற ஒவ்வொருவரும் நினைத்துப் பெருமிதம் கொள்ளவேண்டிய நன்னாள் இந்த ஜூலை 15 ஆம் நாள்.

ADVERTISEMENT

அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை என்பதற்குச் சான்று காட்டும் அடையாளமாக விளங்கிய காமராஜர் அவர்களின் பிறந்த நாளை “கல்வி வளர்ச்சி நாளாக” அறிவித்து, அதைக் கொண்டாட அரசு ஆணை மட்டும் போடாமல் சட்டமாகவே இயற்றியவர் தலைவர் கலைஞர் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூற விரும்புகிறேன். அந்த கல்வி வளர்ச்சி நாளில் சத்துணவுடன் இரு முட்டை வழங்கிடும் திட்டத்தை அறிவித்து, முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கும் திட்டத்தையும் அமல்படுத்தி மாணவ மாணவியர் உடல்நலத்துடன் பள்ளி சென்று கல்வி கற்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர் தலைவர் கலைஞர்.

பெருந்தலைவர் காமராஜரின் கனவுகளை நனவாக்கும் வகையில் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாட புத்தகங்கள் வழங்குவது, இலவசக் கல்வி வழங்குவது, இலவச பஸ் பாஸ் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து, ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும் கல்வி கிடைக்கப் பாடுபட்டது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

பெருந்தலைவர் காமராஜர் திறந்து வைத்த அந்த கல்விக்கண் இன்று தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் நல்ல ஒளி வீசிக் கொண்டிருப்பது மட்டுமின்றி ஒப்பற்ற நிர்வாகத் திறன் படைத்த இளைஞர்களையும், நேர்மையாளர்களையும் உருவாக்க காரணமாக இருக்கிறது என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்துள்ள பரிசு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். சாதனைத் தமிழர்கள் உருவாகக் காரணமாக இருந்த கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவர் விட்டுச் சென்ற “கல்வி” என்ற கருவூலத்தைப் போற்றிப் பாதுகாக்கும் செயலில் ஒவ்வொருவரும் ஈடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்து, பெருந்தலைவரின் பிறந்த நாளை மாணவச் செல்வங்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT