Advertisment

ஆ.ராசா 48 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் தடை!

dmk raja mp election commission order

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக,திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக, பாஜக, பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தேசியத் தலைவர்களும் தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுகசார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர். எழிலனை ஆதரித்து கடந்த மார்ச் 26ஆம் தேதி அன்று திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்த ஆ.ராசா, “நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை, நான் பேசியதை வெட்டி ஒட்டி பரப்பி வருகிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, மார்ச் 28ஆம் தேதி அன்று சென்னை திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியின் அதிமுகவேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டபோது, “என் தாயை இழிவுபடுத்துகிறார்கள்” என்று தழுதழுத்த குரலில் பேசினார். இந்நிலையில் மார்ச் 29ஆம் தேதி அன்று நீலகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, “திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் என்ற அரசியல் ஆளுமையையும், முதல்வர் பழனிசாமி என்ற அரசியல் ஆளுமையையும் குழந்தைகளாக உருவகப்படுத்தி உவமானமாக நான் தேர்தல் பரப்புரையில் பேசியிருந்தேன். அதில் இருந்து சில வரிகளை மட்டும் எடுத்து திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அரசியல் காரணங்களுக்காக, சித்திரிக்கப்பட்டு தவறாகப் பரப்பியதை நான் விளக்கினேன்.அதுகுறித்த விவாதங்கள் தொடர்ந்ததால், மார்ச் 28ஆம் தேதி அன்று கூடலூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது எடப்பாடி பழனிசாமி குறித்தோ அவரது அம்மையார் குறித்தும் கலங்கம் விளைவிக்க எண்ணியதில்லை என்றும், இரு அரசியல் ஆளுமை குறித்துதான் விமர்சித்தேன் என்றும், நானும் ஒரு தாயின் எட்டாவது பிள்ளை என்கிற உணர்வோடு மீண்டும் விளக்கமளித்திருந்தேன்.

Advertisment

இதற்குப் பின்னரும் முதல்வர் எனது பேச்சால் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தியை, செய்தித்தாள்கள் வாயிலாகப் படித்தேன். அதனால், மிகுந்த மன வேதனை அடைந்தேன். இடப்பொருத்தமற்று சித்திரிக்கபட்டு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட என் பேச்சுக்காக எனது அடிமனதில் இருந்து எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொன்னால், முதல்வர் அரசியலுக்காக அல்லாமல் உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணருவாரேயானால் எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோர சிறிதும் எந்தவிதத் தயக்கமும் இல்லை. முதல்வருக்கும், கட்சியினருக்கும், நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது, எனது பேச்சு இரண்டு தலைவர்களைப் பற்றிய தனி மனித விமர்சனங்கள் அல்ல, பொது வாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமையில் உள்ள மதிப்பீடும், ஒப்பீடும்தான். முதல்வர் காயப்பட்டு கலங்கியதற்காக எனது மனம் திறந்த மன்னிப்பைக் கேட்கும் அதே வேளையில், ஒரு கருத்தை வெளியிட விரும்புகிறேன்.

என் மீது தொடுக்கப்பட்ட 2ஜி வழக்கை விசாரித்த நீதிபதி ஷைனி தன் தீர்ப்பின் கடைசிப் பக்கத்தில் இந்த வழக்கு எப்படிப் புனையப்பட்டது என்பதை நான்கு வார்த்தைகளால் முடித்தார். அது ‘கோப்புகளைத் தவறாகப் படித்ததாலும், தேர்ந்த சிலவற்றை மட்டும் படித்ததாலும், சிலவற்றைப் படிக்காமல் விட்டதாலும், இடப் பொருத்தமற்று சில கோப்புகளைப் படித்ததாலும் புனையப்பட்டு தொடுத்த வழக்குதான் இந்த 2ஜி வழக்கு’ என்று தீர்ப்பளித்தார். எனது (பிரச்சாரத்தில்) 40 நிமிட உரையை முழுவதுமாகக் கேட்டால் தமிழக மக்களும் ஷைனி வழங்கிய தீர்ப்பையே வழங்குவார்கள்” என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் குறித்த ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சு பற்றி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனிநபர் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் அறிக்கை அனுப்பியுள்ளோம். மாவட்டத் தேர்தல் அதிகாரி, எஸ்.பி. தந்த தகவலின் அடிப்படையில் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் ஆ.ராசாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, ஆ.ராசா எம்.பி. முதல்வர் குறித்த பேச்சு தொடர்பாக விளக்க கடிதத்தை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், ஆ.ராசாவின் விளக்க கடிதத்தைப் பரிசீலித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், ஆ.ராசா 48மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவில், 'திமுகவின் ஆ.ராசா எம்.பி. 48 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கான தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. முதல்வர் பற்றி விமர்சித்தது குறித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ.ராசாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறி பேசியது கண்டிக்கத்தக்கது; இனி எச்சரிக்கையுடன் ஆ.ராசா பேச வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளது.

aa.raja election campaign election commission
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe