
இலவச அரிசி திட்டத்தை தடுத்த ஆளுனர் கிரண்பேடியை கண்டித்து புதுச்சேரியில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனர் கிரண்பேடி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி திட்டத்தை பெற தூய்மை கிராம சான்று பெற வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். கிரண்பேடியின் இந்த அறிவிப்பு சமூகநீதி மற்றும் சமத்துவத்துக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்திருந்த தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கிரண்பேடிக்கு எதிரான போராட்டத்தையும் அறிவித்தார். மேலும் ஆளும் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இதனையடுத்து 'சுகாதாரத்தை வலியுறுத்தும் நோக்கத்திலேயே கருத்து தெரிவித்ததாகவும், இலவச அரிசியை தடுப்பது தனது நோக்கமல்ல என்றும், இலவச அரிசி வழங்கும் கோப்புக்கு அனுமதி அளித்ததே தாம்தான்' என்றும் கூறியதுடன் எக்காரணம் கொண்டும் இலவச அரிசி வழங்குவது நிறுத்தப்படாது என்றும் கிரண்பேடி விளக்கம் அளித்தார்.

இருப்பினும் அரசியல் கட்சிகள் சார்பில் கிரண்பேடியை கண்டித்து அறிவித்த முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது. தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ தலைமை வகிக்க மாநில அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார், நாஜீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலங்கவை உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இப்போராட்டத்தில் காங்கிரஸ் CPI, CPM இடதுசாரி இயக்கங்கள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், புதிய நீதி கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, படைப்பாளி மக்கள் கட்சி, மாணவர் கூட்டமைப்பு மற்றும் பொதுநல இயக்கங்கள் பங்கேற்றன.