DMK praises Pollan's sacrifice Government

சுதந்திர போராட்ட வீரன் பொல்லானின் திருவுருவ படத்திற்கு 17ந் தேதி அரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் சு.முத்துசாமி, கயல்விழி, மதிவேந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தீரன் சின்னமலை படை பிரிவில் இணைந்துது ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய குழுவில் இருந்தவர் பொல்லான். அருந்ததியின சமூக மக்களின் அடையாளமாக போற்றப்படும் சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 216 வது நினைவு நாளை அரசின் சார்பில் பலரும் மரியாதை செலுத்தினர்.

Advertisment

அந்த வகையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சமுதாயக் கூடத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் அமைச்சர் சு.முத்துசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்பி.,க்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி, மாவட்ட எஸ்.பி. சசிமோகன் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமைச்சர் முத்துசாமி கூறும்போது, “முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொல்லான் நினைவு நாளை மிக மரியாதையோடு நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அதனடிப்படையில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் இங்கு வந்துள்ளோம்.

Advertisment

ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு மாநாட்டில் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பொல்லான் படத்தை திறந்து வைத்து பொல்லானுக்கு உரிய மணிமண்டபம், சரியான சிலை அமைப்பு செய்து தரப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை நோக்கி தான் நாங்கள் அடியெடுத்து வைக்கிறோம். இதனால்தான் இன்று அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். இன்றைய தினம் அரசு விழாவாக இல்லாமல் இருந்தாலும் கூட வரும் டிசம்பர் 28-ஆம் தேதி பொல்லான் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

அதற்குள் பொல்லானுக்கு மண்டபம் சிலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருந்தார். இதற்காக இன்று அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம். மேலும் பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்கள். எனவே முதலமைச்சர் கூறியபடி மணிமண்டபம் சிலை அமைக்க அனைத்து நடவடிக்கைகளை எடுப்போம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் பொல்லானின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment