/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mpet dmk thameem stalin.jpg)
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியை சேர்ந்தவர் தமீம்(55). இவர் முத்துப்பேட்டையில் டிராவல்ஸ் நடத்திவருகிறார். இவர் நீண்டகால திமுக தொண்டர். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த தமீம் தற்பொழுது திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். ஒரு முறை பேரூராட்சி கவுன்சிலராக இருந்தார், சென்ற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். திமுகவில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்பதுடன் அடுத்த மாவட்டத்தில் போராட்டம் என்றாலும் அங்கேயும் சென்று கலந்துக்கொள்வார்.
இந்தநிலையில் திமுக தலைவர் கலைஞர் சில நாட்களாக உடல்நலக்குறைவு பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்த தகவலால் தமீம் மிகுந்த கவலையில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் இரவு கலைஞர் அவரது வீட்டிலிருந்து காவிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதை டிவி செய்தியில் பார்த்துக்கொண்டு இருந்த தமீம், தலைவர் கலைஞர் நிலையை பற்றி கலங்கிய கண்ணீருடன் வீட்டில் உள்ளவர்களிடம் புலம்பிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்ப்பட்டு மயங்கி விழுந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mpet dmk thameem.jpg)
உடனடியாக அவரை உறவினர்கள் முத்துப்பேட்டை தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை பின்னர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதிலும் முன்னேற்றம் இல்லாததால் திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியில் தமீம் உயிர் பிரிந்தது.
இதனையடுத்து அவரது உடல் முத்துப்பேட்டை ஆசாத்நகர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தகவல் அறிந்து பல்வேறு பகுதியிலிருந்து திமுகவினர் பல்வேறு கட்சியினர் உறவினர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் வீட்டின் முன்பு திரண்டனர்.
மறைந்த தமீம் உடலுக்கு திமுக பொதுக்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி, ஒன்றிய செயலாளர் மனோகரன், நகர செயலாளர் கார்த்திக் உட்பட பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இன்று திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொள்கின்றனர். மறைந்த திமுக மாவட்ட பிரதிநிதி தமீமிற்கு குரைசி என்ற மனைவியும், ரூபினா என்ற ஒரு மகளும், ஹாலிது, அசாருதீன் என்ற இரு மகன்களும் உள்ளனர். கலைஞர் மீது பற்றுள்ள தொண்டர் அதிர்ச்சியில் மரணமடைந்திருப்பது தி.மு.கவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us