Skip to main content

100 நாள் வேலைத்திட்டம் 60 நாளாக குறைப்பு? தி.மு.க. கிராம சபையில் பெண்கள் புகார்!

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

DMK PARTY MAKKAL GRAMA SABHA SALEM DISTRICT PEOPLES

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில், அ.தி.மு.க. ஆட்சியில் 60 நாள்களாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், அரசு நிர்ணயித்த கூலியை முழுமையாக வழங்குவதில்லை என்றும் தி.மு.க. கிராம சபைக்கூட்டத்தில் பெண்கள் புகாரளித்தனர்.

 

தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் 'மக்கள் கிராமசபை' என்ற பெயரில், சட்டமன்றத் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்களைத் திரட்டி உள்ளூர் பிரச்னைகள் குறித்து கேட்டறிகின்றனர். இந்நிலையில், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில், ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார் முன்னிலையில் அனுப்பூர் கிராமத்தில் திங்களன்று (டிச. 28) மக்கள் கிராம சபைக் கூட்டம் நடந்தது.

 

இக்கூட்டத்தில் 400 பெண்கள் உள்பட 700- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். லட்சுமி என்பவர் பேசுகையில், ''எனக்கு இரண்டு மகன்கள். மூத்த மகனுக்கு திருமணம் ஆகி தனியாக சென்று விட்டான். இரண்டாவது மகன், பள்ளியில் படித்து வருகிறான். என் கணவரும் பல ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலைக்குச் சென்றுதான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். கடந்த சில ஆண்டாகவே எங்கள் ஊரில் ஒருவருக்குக் கூட ஓராண்டில் 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. 

DMK PARTY MAKKAL GRAMA SABHA SALEM DISTRICT PEOPLES

சராசரியாக, 50 முதல் 60 நாள்கள் வரை வேலை வழங்குகின்றனர். வேலை செய்த நாள்களுக்கான கூலியையை கொடுக்க மூன்று வாரங்கள் வரை இழுத்தடிக்கின்றனர். 6 நாள் வேலை செய்தால் 600 ரூபாயும், சில நேரம் 900 ரூபாயும் கூலியாக வழங்குகிறார்கள். இத்திட்டத்தில் அரசு ஒதுக்கிய குறைந்தபட்ச கூலியைக்கூட அதிகாரிகள் முழுமையாக வழங்குவதில்லை. வேலை இல்லாத நாள்களில் விவசாயக் கூலி வேலைக்குச் செல்கிறேன். போதிய வருவாய் இல்லாததால் குடும்பம் நடத்த சிரமமாக உள்ளது. ஆதரவற்றோருக்கான உதவித்தொகை வழங்க வேண்டும்,'' என்றார்.

 

செல்லம்மாள் (60) என்பவர், தனக்கு நடப்பு ஆண்டில் இதுவரை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 60 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு உள்ளதாகக் கூறினார். தனக்கு முதியோர் ஓய்வூதியம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

 

தனலட்சுமி என்பவர் கூறுகையில், ''அனுப்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி சிகிச்சைக்கு மருந்துகள் இல்லை. சிகிச்சையும் அளிக்கப்படுதில்லை. இந்த ஊரில் பலர் அடிக்கடி பாம்பு கடிக்கு ஆளாகின்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு வசதி இல்லாததால், இங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள சேலம் அரசு மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டியுள்ளது. உள்ளூரிலேயே பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகக்கள் கடிக்கான மருத்துவ சிகிச்சை வசதி இல்லாததால் பலர் இறந்துள்ளனர். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக் கடிக்கான சிகிச்சை வசதிகளை கொண்டு வர வேண்டும்,'' என்றார்.

DMK PARTY MAKKAL GRAMA SABHA SALEM DISTRICT PEOPLES


தி.மு.க. நிர்வாகிகள் அப்பு, குட்டி என்கிற பெரியசாமி, ஆசைத்தம்பி, வெங்கடேஷ், முனியன் ஆகியோர் கூறுகையில், ''அனுப்பூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி வளாகத்தில் புதிதாக வி.ஏ.ஓ. அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். வி.ஏ.ஓ. அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்கள் நல்ல நிலையில்தான் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது தேவையின்றி பள்ளி வளாகத்தில் அவ்விரு அலுவலகத்திற்கும் கட்டடம் கட்டுகின்றனர். 

 

எதிர்காலத்தில் இந்தப்பள்ளி உயர்நிலை, மேல்நிலையாக தரம் உயர்த்தப்படும்போது அதற்கு போதிய இடவசதி இல்லாமல் போகும் ஆபத்து இருக்கிறது. மேலும், புதிய அலுவலகங்கள் கட்டப்பட்டால் பள்ளி மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்கச் செல்வதிலும் நடைமுறைச் சிக்கல் ஏற்படும். வி.ஏ.ஓ. அலுவலக கட்டடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் புதிதாக கட்டப்பட வேண்டுமெனில், இப்போதுள்ள இடத்திலேயே கட்டிக்கொள்ளலாம். ஆனால், டெண்டர் மூலமாக கமிஷன் கொள்ளையடிக்கவே ஆளும் அ.தி.மு.க.வினர் இதுபோன்ற பணிகளை முறைகேடாகச் செய்து வருகின்றனர்,'' என்றனர்.

 

சிலர், பூசாரிப்பட்டியில் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பொது சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்றித்தர வேண்டும் என்று கோரினர். பலர், சாக்கடை கால்வாய் அமைத்தல், குடிநீர், தெருவிளக்கு வசதிகள் கேட்டும் பேசினர். மக்களின் கோரிக்கைகள், ஆலோசனைகள் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டனர். கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் பலர், அடிப்படை வசதிகளை செய்து தராத, அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்று கூறி, அவ்வாறு அச்சிட்ட பதாகையில் கைழுத்திட்டு, எதிர்ப்பை பதிவு செய்தனர்.

DMK PARTY MAKKAL GRAMA SABHA SALEM DISTRICT PEOPLES

கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு கோழிக்கறி பிரியாணி உணவு வழங்கப்பட்டது. இதையடுத்து, வீடு வீடாகச்சென்று அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் பற்றி அச்சிட்ட துண்டறிக்கைகளை வழங்கி தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தனர். 

 

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வளையக்காரனூர் செந்தில், பாரதி ஜெயக்குமார், அனுப்பூர் ஊராட்சிமன்றத் தலைவர் நாகராஜ், முன்னாள் தலைவர் புவனேஸ்வரி, இளைஞரணி அமைப்பாளர் பிரபாகரன், துணை அமைப்பாளர் நாகராஜ் உள்ளிட்டோர் பரப்புரையில் கலந்துக் கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்