/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/selvam43433434.jpg)
சென்னை மடிப்பாக்கத்தில் தி.மு.க. வட்டச் செயலாளர் செல்வம் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வம். 38 வயதாகும் இவர் நேற்று (01/02/2022) இரவு 09.00 மணியளவில் ராஜாஜி நகர் பிரதான சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆறு பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டி விட்டு இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது. உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மடிப்பாக்கம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பிரதே பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் கொல்லப்பட்டதால், ஏற்பட்ட பதற்றம் காரணமாக மடிப்பாக்கம் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
188- வது வார்டு தி.மு.க. வட்டச் செயலாளரான செல்வம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது மனைவியைப் போட்டியிட வைக்க தேவையான ஏற்பாடுகளைத் தீவிரமாக செய்து வந்த நிலையில், கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மறுபுறம் ரியல் எஸ்டேட் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வம் மறைவிற்கு தி.மு.க. நிர்வாகிகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தென்சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, சோழிங்கநல்லூர் - மடிப்பாக்கம், 188-வது வட்டச் செயலாளர் செல்வம் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நாடாளுமன்ற தேர்தலில், நான் வேட்பாளராக போட்டியிட்ட போது, கழகத்தின் வெற்றிக்காக அவர் ஆற்றிய அளப்பரிய பணி என் கண்முன் வந்து செல்கின்றது, கழக நிகழ்ச்சிகளை அப்பகுதியில் முன்னின்று, சிறப்பாக நடத்தக்கூடிய உழைப்பாளி. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)