/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72255.jpg)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப்பலரும் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்திற்கு இரங்கல்களையும், தடுக்க தவறியதாக ஆட்சி நிர்வாகத்திற்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், 'சாட்டை' என்ற யூடியூப் சேனல் நடத்தி வருபவருமான சாட்டை துரைமுருகன் கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொன்ன நிலையில், ஒரு இடத்தில் சூழ்ந்துகொண்ட அந்தப்பகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் சாட்டை துரைமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சிலர் சாட்டை துரைமுருகனை தாக்கமுயன்றனர். கைகலப்பில் ஈடுபடும் அளவிற்கு சூழ்நிலை உருவானதால் அங்கிருந்தநாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அவரை காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்பிருப்பதாக சாட்டை துரைமுருகன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் கள்ளக்குறிச்சியில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)