ADVERTISEMENT

என்.எல்.சி சுரங்கநீரை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குறிஞ்சிப்பாடிக்கு வழங்க எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை!

10:42 PM Sep 04, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

என்.எல்.சி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிகளுக்கும், நிறுவனத்தைச் சுற்றியுள்ள ஒன்றியப் பகுதிகளுக்கும் வழங்க வேண்டும் என கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மற்றும் வடலூர் பேரூராட்சி பகுதிகளுக்கு அருகில் உள்ள என்.எல்.சி நிறுவன சுரங்கத்தின் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படுவதாலும், சுரங்க விரிவாக்கத்திற்கு வெடி வைப்பதினாலும் மேற்கண்ட பேரூராட்சி பகுதிகளில் அடிக்கடி ஆழ்குழாய்க் கிணறுகள், (Borewell) பழுதடைந்து, நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு, குடிநீரின்றி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி பேரூராட்சி நிர்வாகத்திற்கு அதிக செலவு ஏற்படுகிறது. மேலும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள நிறுவனம் ஆகும். இதன்மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படுவதால், அதனைச் சுற்றியுள்ள குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம், புவனகிரி, விருத்தாசலம், பண்ருட்டி ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் மற்றும் வடலூர், குறிஞ்சிப்பாடி, கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிகளில் நீர் ஆதாரம் குறைகின்றது.

வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிகள் தற்போது விரிவடைந்த பகுதிகளாக உள்ளதால், இங்கு அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற என்.எல்.சி மற்றும் அரசு ஊழியர்கள், விவசாயிகள் அதிகளவில் குடியேறி, அதிகளவில் வசித்து வருகின்றனர்.

இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிக்கு அருகாமையிலே என்.எல்.சி சுரங்கத்திற்கு வெடி வைப்பதால் ஆழ்குழாய்க் கிணறு மற்றும் குடிநீர் குழாய்கள் அடிக்கடி சேதமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே வடலூர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்க வேண்டுமென்று ஏற்கனவே சட்டமன்றத்திலும், தமிழக அரசுக்கும், என்.எல்.சி நிறுவனத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளேன். ஆகவே உடனடியாக பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் ஆதாரத்திற்கு நிரந்தர தீர்வாக என்.எல்.சி மூலம் வெளியேற்றப்படுகின்ற தண்ணீரை சுத்தப்படுத்தி மேற்கண்ட பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்க தமிழக அரசும், என்.எல்.சி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT