நாடாளுமன்ற மக்களவை எம்.பிக்கள் குழுத் தலைவராக டி.ஆர்.பாலுவும், துணைத் தலைவராக கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தளிக்கோட்டை ராசுத்தேவர் பாலு என்பது தான் டி.ஆர்.பாலுவின் முழுபெயர். 1957-ம் ஆண்டில் இருந்தே தி.மு.க-வில் பணியாற்றி வருகிறார். 1986-ம் ஆண்டு ராஜ்ய சபா எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் 1996, 1998, 1999, 2004 எனத் தொடர்ந்து 4 முறை தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, தென்சென்னை தொகுதியில் இருந்த தாம்பரம், ஆலந்தூர், பல்லாவரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் வந்துவிட்டன. அதனால், ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டு பாமகவின் ஏ.கே. மூர்த்தியை வீழ்த்தி வெற்றி பெற்றார். அப்போது, கப்பல் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.
2014-ல் நடந்த தேர்தலில் தஞ்சாவூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் இந்த முறை ஸ்ரீபெரும்புதூரில் களம் இறங்கி வெற்றி பெற்றார். அவர் 7-வது முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், மக்களவை திமுக குழுத் துணை தலைவராக கனிமொழியும், கொறடாவாக ஆ.ராசா, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.