
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று கூடியது. இதில் வேளாண் சட்டம் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளின் நீண்ட நாள் போராட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தியா முழுவதும் புதிதாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். திமுகவை சேர்ந்த கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டனர். அதிமுக உறுப்பினர்களாக இருந்த வைத்தியலிங்கம் மற்றும் முனுசாமி சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்கள்.
இதனையடுத்து அந்த இரண்டு இடத்துக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பாக யாரும் போட்டியிட முன்வராத காரணத்தால் திமுகவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் போட்டியின்றி நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக தமிழில் பதவியேற்றனர். அப்போது உறுப்பினராக பதவியேற்று கொண்ட ராஜேஷ்குமார் பதவியேற்புக்கு பிறகு, வெல்க தளபதி, வெல்க அண்ணன் உதயநிதி என்று கூறினார். இதனையடுத்து பேசிய அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, " முழக்கங்கள் குறிப்பில் சேர்க்கப்படாது, வெளியில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.