
மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (04-05-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா எம்.பி கலந்து கொண்டார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆ.ராசா மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் மேடையின் எதிரே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மின்விளக்கு தூண் திடீரென சாய்ந்தது. இதனால் மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். விளக்குத்தூண் விழுவதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஆ.ராசா அங்கிருந்த உடனடியாக விலகி ஓடினார். அந்த விளக்குதூண், ஆ.ராசா பேசிக் கொண்டிருந்த மேடை மைக் மீது விழுந்ததால், ஆ.ராசா நூலிழையில் உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.