DMK MLAs notice to PMK leaders!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு திமுக எம்எல்ஏக்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர்.

Advertisment

DMK MLAs notice to PMK leaders

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன், ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேசுகையில், “எங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்வில் இருந்து விலக தயார். அப்படி நிரூபிக்கப்படாவிட்டால் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொது வாழ்வில் இருந்து விலக தயாரா?.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதானவர் திமுக நிர்வாகி இல்லை. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கட்சி ஸ்டிக்கர்கள் தான் அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக உதயசூரியன் எம்எல்ஏ பேசுகையில், “கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ அரசியல் ஆதாயம் வேண்டி புகார் தெரிவித்துள்ளார். எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை பாமக தலைவர்கள் வைத்துள்ளனர். 37 ஆண்டுக்கால பொது வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பாமக தலைவர்கள் பேசியுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

DMK MLAs notice to PMK leaders

இந்நிலையில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு திமுக எம்எல்ஏக்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தங்களை இருவரும் தொடர்புப்படுத்திப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் உடனே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் வில்சன் சார்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டிஸில், “கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் வைத்த குற்றச்சாட்டைத் திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் 10 லட்சம் ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு தொடரப்படும். அந்த நிதியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குச் செலுத்தும் வகையில் வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.