Skip to main content

திமுக எம்.எல்.ஏ-வின் கார் உடைப்பு.. பின்னணியில் பஞ்சாயத்து ஆட்கள்..?

 

DMK MLA's car wrecked .. Panchayat people in the background ..?

 

 

காவல் ஆய்வாளர் மற்றும் அ.தி.மு.க பிரமுகரால் படுகொலை செய்யப்பட்ட செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், சொக்கன் குடியிருப்பில் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் அவர் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரை அடித்து நொறுக்கியிருக்கின்றனர் அடையாளம் தெரியாத நபர்கள்.

 

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட சொக்கன் குடியிருப்பை சேர்ந்த தண்ணீர் லாரி ஓட்டுநர் செல்வன் காட்டுக்குளம் பகுதியில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையின் பின்னணியில் நிலவிவகாரம் இருந்ததாகவும், கொலையில் சம்பந்த பட்டிருக்கலாமெனவும் தட்டார்மட காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் திருமணவேல் மீது கொலை குற்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது நெல்லை மாவட்ட காவல்துறை. இருப்பினும் அதற்கு பின்னர் குற்றவாளிகள் மீது எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை காவல்துறை. மாறாக இன்ஸ்பெக்டரை மட்டும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தனர். போலீசாரின் மெத்தனப் போக்கால் கொந்தளித்த செல்வனின் உறவினர்கள், "கொலைக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே கொலையுண்ட செல்வனின் உடலைப் பெற்றுக் கொள்வோம்" என போராட்டத்தினை துவங்கினர். மாவட்ட எஸ்.பி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டத்தினை கைவிடவில்லை சொக்கன்குடியிருப்பு வாசிகள். இதேவேளையில், ஆளுங்கட்சிக்காக களமிறங்கிய குறிப்பிட்ட அமைப்பினர், " உடலை பெற்றுக்கொள்ளுங்கள்.. பணம் வாங்கித் தருகிறோம்" என பஞ்சாயத்து நடத்தியும் பார்த்தனர். எதற்கும் அசையவில்லை அம்மக்கள்.

 

இந்நிலையில், ஞாயிறன்று மாலை வேளையில் மக்களோடு மக்களாக சேர்ந்து செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தினை துவக்கினார் தி.மு.கவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராகவும், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன், போராட்டத்தில் கலந்து கொண்டதால் சுற்றிலுமுள்ள மக்களும் போராட்டத்தில் இணைய தற்பொழுது வரை அங்கு போராட்டம் நடைப்பெற்று வருகின்றது. எம்.எல்.எ. அனிதா ராதாகிருஷ்ணனும் அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் தண்டுபத்துவிலுள்ள அனிதா ராதாகிருஷ்ணனின் வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரை இரு நபர்கள் உடைத்து எறிந்தனர். இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பு நிலவிய நிலையில் மெய்ஞானபுரம் காவல் நிலையத்தார் சம்பவ இடத்திற்குவந்து, "கொலையுண்ட செல்வனின் உடலை பஞ்சாயத்து பேசி ஒப்படைக்கலாம் என முயற்சியில் இறங்கிய ஆட்களே இதனை செய்திருக்கலாம்." என்ற கோணத்தில் அந்த குறிப்பிட்ட அமைப்பினரை நோக்கி விசாரணை பார்வையை திருப்பியுள்ளனர்.

 

தமிழகத்தில் எம்.எல்.எவிற்கே பாதுகாப்பு இல்லையா..? உட்கட்சி மோதல்களில் முழு கவனத்தையும் செலுத்தும் முதல்வர், சட்டம் ஒழுங்கையும் கவனிப்பாரா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர் அந்தத் தொகுதி மக்கள்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்