ADVERTISEMENT

தி.மு.க. எம்.எல்.ஏ. செங்குட்டுவன் மீதான வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 

08:11 AM Dec 31, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பட்டியலினத்தவரின் சாதிப்பெயரைக் கூறி திட்டிய சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி தி.மு.க. எம்.எல்.ஏ. செங்குட்டுவன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கக் கோரிய வழக்கில், காவல்துறை பதிலளிக்கமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மாரண்டபள்ளியில் உள்ள நிலம் தொடர்பாக, நாகராஜ் மற்றும் திம்மராயன் ஆகியோர் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. வெவ்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த இருவருக்கும் இடையேயான இந்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண்பதற்காக, கிருஷ்ணகிரி தி.மு.க. எம்.எல்.ஏ. செங்குட்டுவனை அவரது அலுவலகத்தில் சந்தித்துள்ளனர்.

அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், நிலத் தகராறு விவகாரத்தில் தொடர்புடைய பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவரது சாதிப்பெயரைச் சொல்லி செங்குட்டுவன் திட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

இதனை தொடர்ந்து, மக்கள் பிரதிநிதியான செங்குட்டுவனின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்க கோரி, அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஓசூர் ஹட்கோ காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் டிசம்பர் 4- ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.

அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்திரசேகர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி டி.ரவீந்திரன் முன்னிலையில் விசாரணக்கு வந்தபோது, வழக்கு குறித்து பதிலளிக்க காவல்துறை அவகாசம் கோரியதால், வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT